Translate

வானில் பறக்கும் புள்ளெலாம்

வானில் பறக்கும் புள்ளெலாம்

-------------------------------------




இன்று காலையில் இருந்து ஏனோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

ஐந்து மணிக்கு விழிப்புத் தட்டி விட்டது.

முதல் வெளிச்சத்தில் காபித் தம்ளருடன் வெளி வாசலுக்கு வந்தேன்.


எப்போதும் கண்கள் அந்தப் பட்ட மரத்தை நோக்கியே போகும்.

ஒற்றை மைனா சிறகை நெளித்து , காலை அறிவிப்பை பல முறை செய்தது, 'நான் இங்கு இருக்கிறேன்..நான் இங்கு இருக்கிறேன்'.

ஒளி இன்னும் அந்த மரத்தை வரைந்து கொண்டிருந்தது. நீல வானத்தில் கருப்புக் கோட்டு ஓவியம்.

மரம் ஒளியால் கைகள் முளைத்து விண்ணைத் துழாவ ஆரம்பித்தது. உறைந்த கருப்பு மின்னல்.

மைனா அலகை இரண்டு முறை மரத்தில் தீட்டி, அடி வயிற்றில் உரசி மீண்டும் ஒரு முறை 'நான் இருக்கிறேன்'.நடத்துனர் ரிவர்ஸ் விசில் எழுப்பும் ஒலி...ரைட் ரைட் ..ரைட் ரைட்


எதிர் வீட்டு அம்மாள் தென்னை விளக்கமாரை நீரில் பலமுறை கிழித்தார்.

இரண்டு முறை தரையில் தட்டி மீண்டும் நீரூற்றிய கல்லை உரசினார்.

கல்லும் துடைப்பமும் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டன.


ஒரு தையல் குருவி கட்டுச் சுவரின் பின்னால் புதரில் இருந்து பறந்து சுவரில் அமர்ந்தது.

தீக்குச்சி போன்ற கால்கள். குச்சி பற்ற வைத்தது போல் எழுந்து பறந்து கடுக்கண் பூவைத் தொட்டுத் திரும்பியது.வெளிச்சம் ஏற அதன் சாம்பல் பச்சை சிறகு ஒளிர ஆரம்பித்தது. வால் துடுப்பு போல் இருமுறை மேலே எழுந்தது. கால் விரல்கள் நெளியும் புழுக்கள். சுவரில் ஒட்டி அசையாதிருந்தன. கணத்தில் காகிதப்பூ மரத்தில் புகுந்தது.பல இலைகள் அசைய சென்ற இடம் தெரியவில்லை. பின்னர் 'சுபிட் சுபிட் சுபிட் சுபிட்' - ஆம், நான் இருக்கிறேன்.


வானில் பருந்துகள் வட்டமிட ஆரம்பித்தன. தையல் குருவி மீண்டும் சுவரில், வாய் பிளந்து காற்றைக் குடித்தது. இதே குருவியை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கலாம். பெரும்பாலும் ஊர்க்குருவி ஒரே பகுதியில் பிறந்து வாழ்ந்து மடியும். ஒரு சில கிலோமீட்டர்கள். வானமே எல்லை, வானில் பறக்கும் புள்ளெல்லாம், பறவையாய்ப் பிறந்தேன் என்றெல்லாம் பாடியிருக்கிறான் மனிதன்.


'விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே

ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை

கொட்டிக் கிடக்கும் வானொளி என்னும் இம்மதுவின் சுவையுண்டு '


ஆனால் பறவைக்கும் வானம் எல்லையற்றது. கைகளால் அள்ள முடியாதது. அதுவும் தினமும் இன்னும் உயரப் பறக்க ஏங்குமா என்ன?


ஆனால் தையல் குருவி இன்னும் வேலையில் மும்முரமானது.


இன்னும் ஓரிரு குருவிகள் அங்கு சேர்ந்தன. பறக்கும் இலைகள். இது சிறு சொல்லெனப் பறந்து செம்பருத்தியில் அமர்ந்தது. ஒரு இலையை தூக்கிப் பார்த்தது.அடுத்த கிளை. வேறொரு இலை விலக்கிப் பார்த்தது. ஒரு நாளில் பல்லாயிரம் இலை அசைவுகள். பல்லாயிரம் தாவலும், தேடலும்.

எங்கோ ஒரு புழு. ஏதாவது வண்டோ , எறும்போ. தாவி செம்பருத்தியின் கழுத்தைத் திருப்பி உள்ளே முங்கி வெளியே வந்தது.ஒட்டிய சிவப்பு மகரந்தப் பொடியை தலை சிலுப்பி உதறியது. முள் வாங்கியின் ஊசிமுனை போன்ற வாய் வைத்து சிறகு கோதியது.


வாசலில் நிற்கும் செர்ரி ப்ளாச மரம் உதிர்ந்து புது இலைகள் விட்டுவிட்டது.

வேர்க்கிளை மூன்றாய்ப் பிரியும் சந்தியில் ஊர்க் குருவி கூடு கட்டியிருக்கிறது.

தையல் குருவி இலைகளை ஒன்றாய்த் தைத்து, நடுவில் இலை நார்களைச் சொருகி, வெள்ளைப் பஞ்சை உள்ளே வைத்து கூடமைக்கும். இது மரத்தின் தாழ்வில் மறைந்த இடம். வீட்டின் சுவரை ஒட்டிய மரம். ஊர்க் குருவி நம்பிக்கையில் கட்டியிருக்கிறது. நாரைப் பந்து போல் ஆக்கி எழுந்தும், பறந்தும் உடலளவு குழியைப் பறித்து வைத்திருக்கிறது. இடைவிடாத செயல். அதனுள் செயல் எனும் அச்சொல் பொறிக்கப் பட்டிருக்கிறது.


இந்தத் தையல் குருவியும், ஊர்க் குருவியும் இருக்கும் இடத்திலேயே நானும் இருக்கிறேன். அதே பூமிப் பந்து. அதே வானத்தின் கீழே. அலையென மேகங்கள் துண்டுகளாய் எழும்பிப் பறக்கின்றன. அதைப் பறந்து விண்ணெழுப்பிய மேல்க் காற்று என் ரோமக் கால்களின் வழியாகவும் ஆனந்தந்தை உறிஞ்சிக் குடித்தது.


வரிசையாய் வீடுகளின் கதவு எண்கள். 79-ராகேஷ் 78-ரமேஷ் என்று கட்டியெழுப்பிய வரிசை தெளிவாய்த் தெரிந்தது. அதற்கெல்லாம் பின் இருந்தது தொடுவானம். அதன் பின்னே ஒளிரும் சூரியன்.


அப்புறம் என் எதிர் வீட்டு ஊர்க் குருவிக் கூடு.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2