Translate

நீரின்றி (சிறுகதை)

நீரின்றி (சிறுகதை)

-----------------------




காயத்ரி வீட்டின் பின் கதவைத் திறந்து கொல்லையில் நின்று நெற்றியில் கை வைத்து கிழக்கே பார்த்தாள். சூரியன் பார்வையை இன்னும் மறைத்தது. நீல வானில் ஒரு துண்டு மேகம் தெற்குப் பக்கம் இருந்தது. வெள்ளைத் தனித் துண்டு. காற்றே இல்லாததால் ஸ்தம்பித்து நின்றிருந்தது. அவள் இங்கிருந்து பார்க்க வேண்டிய ஊரின் நல்ல தண்ணீர்க் கிணறு அவள் நிற்கும் இடத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேலே இருக்கலாம். அவளுக்கு கிணற்றில் கூட்டம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .ஒரு அரிசி மணியை பத்து எறும்புகள் திசைக்கு ஒன்றாய் இழுப்பது போல் மனதில் ஒரு பிம்பம் வந்து போனது.


முள்ளுக் காடுகளாய் மண்டியிருந்த கிடங்கைத் தாண்டி ஓங்கிய இரட்டைப் புளிய மரம் தெரிந்தது.

அதை ஒட்டிய மஞ்சள் பள்ளிக் கூடக் கட்டிடம் பார்வைக்குப் பிடி கொடுத்தது.

கிணற்றைச் சுற்றி நிறைய தலைகள் தெரிந்தன. அவள் நிற்கும் தரையின் அனல் கழுத்துக்கும் தாடைக்கும் தலைக்கும் ஏறி ஓடு என்றது.


இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் என்று உள்ளே போய் விட்டாள்.


நேற்று தான் காயத்ரி அம்மா ஊரில் இருந்து வந்திருந்தாள். அப்பா தவறிப் போய் ஒரு மாதக் காரியம் முடிந்திருந்தது. நாட்காட்டி கிழிக்கப்படாமல் இருந்தது, மே பதினான்கு 1986. எதிர்பாராத இறப்பு. கண்டிப்பானவர், அப்படியே சமரசமில்லாமல் போய் விட்டார். அவருக்கு இருந்த குறை இவளை ஊர் விட்டுக் கல்யாணம் பண்ணியது.


தண்ணீர்க் கஷ்டம் என்ற சொல்லை பிறந்த ஊரில் அவள் கேள்விப் பட்டதில்லை. வீட்டிற்கு வெளியே தெருக் குழாய். இரண்டு நேரம் தண்ணீர் வரும்.

தெருமுனையில் நீர்த்தொட்டி. அதிலும் எந்நேரமும் நீர் வழியும். நீரேற்றும் சண்முகம் பின்னால் குடியிருப்பவர். சண்டை போடுபவர்கள் முதலில் மல்லுக் கட்டுவார்கள். கொஞ்சம் பொறுத்தால் தண்ணீர் வேண்டிய அளவு பிடிக்கலாம். இரண்டு பேர் வேலை. அம்மா குழாயிலிருந்து வாசல் படி வரை. இவள் வாசலில் இருந்து உள்ளே நிரப்புவது.

இரண்டடி உயரம் நாலடி அகல சிமெண்ட் தொட்டி தான் சவால். முன்னால் இரண்டு மாடுகளுக்கும் சேர்த்து எடுக்க வேண்டும். அப்பா இறந்ததும் மாட்டை விற்றாகி விட்டது. தொட்டி இருபது குடம் பிடிக்கும். ஒரு வெந்நீர் அண்டா, அலுமினிய வாளிகள், இரும்பு வாளிகள் நிரம்ப வேண்டும். கடைசியில் எல்லாக் குடங்களையும் நீருடன் இறக்க வேண்டும். ஒரு குடம் பத்து லிட்டர் கொள்ளும்.


எல்லா நாளிலும் வீடு முழுவதும் நிரப்ப வேண்டியதில்லை. நேற்றைய நீர் மீதமிருக்கும். குடிக்கவும், சமைக்கவும் மட்டும் புதுத் தண்ணீர்.

தொட்டியில் பழைய நீரும், புதியதும் கலந்தே இருக்கும். ஓரிரண்டு பாசிகள் தென்பட்டால் அடைப்பைத் திறந்து தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.

இது போன்ற வேலைகளை காயத்திரியின் அம்மா லீவுக்கு வந்திருக்கும் தன் குழந்தைகளிடமே வாங்கி விடுவாள்.


'ஏலே , பெரிய எருமை , வெளியே இருந்து மேல தொட.. அப்புறம் உள்ளே இறங்கி சுத்தமா, கண்ணாடி மாதிரி இருக்கனும்... வெளியேருந்து எட்டாது...காலக் கழுவிட்டு தொட்டில இறங்கணும்...'

உள்ளே பிளீச்சிங் பவுடர் நெடி மூக்கில் குத்தி, தலைக்குள் ஏறி உள்ளேயே எச்சில் துப்ப வேண்டும் போல் இருக்கும். பாட்டி கை கட்டி பாட்டி பார்த்துக் கொண்டே இருப்பதால் துப்ப முடியாது. அவள் நகர்ந்தால் எச்சிலைத் துப்பி நீரை ஊற்றி குழாயின் அந்தப் பக்கம் வருகிறதா என்று பார்ப்பான். தொட்டியின் உள்ளே இறங்கியதும் அதில் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றும். தொட்டி இருந்த இடம் கூரை இல்லாதது. கீழே மாட்டுக் கொட்டம். வானத்தைப் பார்த்தபடி தொட்டியில் சிறுநீர் கழித்தான். வழியை மிதித்து நடந்த பாட்டியின் கால் அறிந்து விட்டது.


'வளர்ப்பு சரியில்ல...ரெண்டு ஆம்பளப் புள்ளையும் சரியில்ல...தண்ணிக் குடம் தூக்குற வயசுல செய்யற சேட்டையா இது...தண்ணி சுமந்தா இதெல்லாம் செய்யமாட்ட..நேத்து வெந்நீர் அடுப்பு பூராம் தண்ணி...விறகெல்லாம் தண்ணி...தண்ணிச் சேட்டை பண்ணா உங்க ஊருக்குப் போ...நீ கெடறது பத்தாது .அவனுக்கும் எல்லாம் சொல்லிக்குடு ' என்பார்.


தண்ணீர்க் குடம் எப்படிச் சுமப்பது என்று சொல்லிக் கொடுத்தார். எப்படி இரண்டே வாளியில் இரண்டு பேர் துணிகளை நனைத்து , வெளுத்து , அலசிக் காயப் போடுவது என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். 'சட்டைக் காலரக் கண்ணால பாரு...ஏன் இம்புட்டு அழுக்குன்னு ஒண்ணேயே நீ கேளு ...இப்ப சோப்ப கையால தொட்டு அந்த இடத்தில போடு..சோப்ப இல்ல கைய..ரின் சோப்பு பதினஞ்சு நாள் வரும் சரியாப் போட்டா...' . அவளுக்கு இப்படிச் சொல்லிக் கொடுத்த நினைவில்லை. இந்தப் பயிற்சிகள் தான் கல்யாணம் பண்ணிய ஊரில் கை கொடுக்கின்றன. குழந்தைகளுக்கு நீரின் கஷ்டம் தெரிய ஆரம்பித்திருந்தது.


அம்மா வீட்டில் தெருக்குழாயில் நீர் வரவில்லையென்றால் வீட்டின் பின்னால் குடித்தனக்காரர்களின் கிணறு இருந்தது. தொட்டிக் கிணறு என்று பெயர். சிறியது, இரண்டு பேர் நின்று இரைக்கலாம். சிமெண்டுத் தொட்டிகளை வளையம் போல் ஒன்றின் மேல் ஒன்று இறக்கி அமைக்கப்பட்டது. நகரங்களில் அப்போது பிரபலம் . ரப்பர் டயரை வைத்துச் செய்த ராட்டினக் கயிறு. எளிதாய் இழுக்கலாம்.


அவளுக்கு ஆழத்தில் தெரியும் நீர் ஒரு கண் போன்று தோன்றும். பெரிய கரு விழி. இமையாத விழி. இல்லை இமைக்கும். ஒரு பழுத்த வேப்ப இலைச் சருகை உள்ளே போடுவாள். காற்றைப் படிகளாக்கி அது இறங்கிச் செல்வதை பார்த்தபடி இருப்பாள். காற்றில் தள்ளாடித் தவழ்ந்து சிறு பிள்ளை போல் போகும். ஒரு கணம் சுவரில் முட்டி மீண்டும் படியைப் பற்றும். எதிர்பார்த்தது போல் நீர் அதை ஏந்திக் கொள்ளும். சிறு வட்டக் கோடுகள். நீல வானில் அவள் முகம் அதில் சிறு துணிச் சுருக்கம் போல் மடிந்து மீண்டும் தெளியும். அது தன்னையும் கண்டு கொள்வதாக எண்ணுவாள். எப்போதும் தன்னைப் பார்ப்பதாகவும், தொடர்வதாகவும் தோன்றும். பூமியில் இருந்து எட்டிப் பார்க்கும் ரகசியம். சொல்லியும் கேட்டும் தீராத ரகசியம். நீர் வானின் ரகசியமா , பூமியின் ரகசியமா? முதல் துளி விண்ணுடையதல்லவா? தெரியவில்லை.


குழாய்த் தண்ணீர் பாட்டும், பேச்சும் போல் ரகசியமல்ல. கொட்டும் போது மோகனம். 'கவிதை கேளுங்கள் ...ஜதியில் பிறந்தது '. சோர்ந்து திரியாய் சொட்டும் போது கீரவாணி. 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ' புதிதாய் வந்த பாடலை வாய் முணுக்கும். கிணறு எப்போதும் ஆழத்தில் இருக்கும். அதைக் கைகூப்பி அழைத்து வர வேண்டும். சில நாள்களில் பூப்போல வாரலாம். நாள்களில் கல்லாய்க் கனக்கும். தொப் தொப் என்று நாலு முறை அதன் தலையில் வாளியால் போடுவாள்.


ஏரியும் , குளமும், கடலும் வெளியில் விரிந்து கிடப்பவை. நதிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் கிணறு என்றும் இடத்திலேயே தான் இருக்கிறது. இல்லை எல்லா நீரும் புதிர் தான். விசும்பின் துளி. வடிவம் இல்லாதது. நழுவுவது. பிடி கிடைக்காதது. காணாமல் போவது.


ஆனால் காயத்ரி புகுந்த ஊர் கிராமம். இந்த ஊரில் நீர் வேறு விதம். நீர் என்றால் பொதுவில் நெகிழ்வு. இங்கு நீர் விரைத்தது. இருபுறம் கூர் முனைகள் கொண்டது. ஊர் அழகானது. சாலையை ஒட்டிய கண்மாய். கண்மாயின் கீழ் குளம். கரை ஒட்டிய வாழையும் , நெல்லும். கரை மேல் இருந்து தெரியும் மேற்கு மலைத் தொடர். கண்மாயில் இருந்து நரம்புகளெனப் பிரிந்து ஓடும் கால்வாய்கள். நிலம் ஒட்டிய கிணறுகள். மழைக் காலம் என்றால் கிணற்றில் கைவைத்து தண்ணீர் நுகரலாம்.


ஆனால் இப்போது மழைக் காலம் இல்லை. உச்சிக் கோடை. கிணறுகள் வற்றிவிட்டன. ஊற்றுக் கண்கள் கண்ணில் தட்டுப் பட ஆரம்பித்து விட்டன. ஊற்றுகள் நாளெல்லாம் கசிந்து உருக வேண்டும். நிறைந்து வரப்பை நனைத்து நிலத்தில் புக வேண்டும். நிலத்தை நனைக்க வேண்டும். வானமும் நீர் கேட்கும் கோடை இது . கொடுத்ததை திருப்பிக் கேட்கும், கருணையில்லாமல் எடுத்துப் போகும்.


காயத்ரி காலையில் பார்த்த ஒரே கிணற்றில் மட்டும் தான் நீர் . மொத்த ஊரும் அதை நம்பியே இருக்கிறது.


சில வருடங்கள் முன்னர், அதே கிணற்றில் இருந்து குழாய்கள் வழியே எல்லாத் தெருவுக்கும் இணைப்புகள் வந்தன. ஒரு பெரிய நீர்த்தொட்டியும் கட்டி நீர் ஏற்றினார்கள். கோடை ஆரம்பத்தில் நீர் மேலே ஏறும். தொட்டியில் நீர் ஏற்றம் குறைந்தால் மேற்கே இருக்கும் இவள் வீடுவரை வராது. முதல்வீட்டுக் குழாய்கள் உறிஞ்சி விடும். பின்னர் வீடுகளில் தனிக் குழாய்கள் வந்தன. இதிலும் கோடையில் நீர் மேலே ஏற வேண்டும். தேடிப் போய் எடுக்க ஆழக் குழிகள் தோண்டினார்கள். நிரந்தரமான தொட்டிகள் அமைத்தார்கள். ஆள் உயரக் குழிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தன.


நல்லிகளைத் திறந்து வைத்து பார்த்தபடி காத்திருக்க வேண்டும். பத்தடிக் குழாய். மூன்று இடத்தில் பைப் ஜாயின்ட் அடித்து நல்லிகள் இருக்கும். கடும் கோடையில் எந்த நல்லியிலும் நீர் வராது. வந்தால், பிள்ளைகளில் ஒருவர் உள்ளே இறங்கி உட்கார்ந்து அடிப்பாதிரத்தில் நீர் பிடிக்க வேண்டும். அது நிரம்ப இன்னொரு சிறு பாத்திரத்தால் படியில் இருக்கும் குடத்தை நிரப்ப வேண்டும். குடம் நிரம்பியதை இன்னொரு பிள்ளை எடுத்துப் போக வேண்டும். அதை இன்னொருவர் பாதியில் வாங்க வேண்டும். வீட்டின் கடைசித் தொட்டி நூறடியில் பின் வீட்டில் இருக்கும். கைகள் கோணிக்கொள்ளும் போது, ஆளை மாற்ற வேண்டும். ஒரு அசெம்பிளி லைன் கச்சிதம் இருந்தாலே கோடையில் குழாயில் நீர் , வந்தால், கொள்ள முடியும். நேரமும் முக்கியம், ஊரே அலைபாயும். ஒரு இடத்தில் வறண்டு சொட்டி விடும். பின்னர் நம்பிக்கையில் குழியிலேயே காத்திருக்க வேண்டும்.


இதை விட்டால் தெரு நடுவே அடிகுழாய் உண்டு. மோட்டார் வேலையை மனிதன் செய்ய வேண்டும். கோடையில் நீர் எங்கேயோ ஒளிந்து கொள்ளும். தெருப் பெருமாள் கோயில் மணிக்கு நிகராக அடிகுழாய் ஓசை எழும். வெறியுடன் அடிப்பவர்கள், ஓசையில்லாமல் அடிப்பவர்கள், அடிக்க முடியாதவர்கள், எல்லோரையும் கடந்து நீர் ஆழத்தில் தியானத்தில் இருக்கும்.


காயத்ரி சிறிது இருட்டிய பின் பிள்ளைகளுடன் அடிகுழாய்க்குச் செல்வாள். நாலைந்து குடத்திற்கு மேல் இங்கு செல்லாது. உப்பு நீர். சமயங்களில் எழுப்பிய குற்றத்திற்காக துருவைக் கிளப்பி மேலே வரும்.சில நேரங்களில் அடிக்கும் கம்பி மேலே போய் கோபித்து நின்று கொண்டு கீழே வராது. குழாயில் நீரில்லாமல் காற்று போய் ஏறிக் கொள்ளும். காற்றுக்கும் எடை உண்டு. காற்றை பாதாளம் திரும்ப வாங்கும் வரை பொறுத்து மீண்டும் அடிக்க வேண்டும் .


கோடையைச் சமாளிக்க கடைசி வழி ஊரின் நல்ல தண்ணீர் கிணற்றுக்கு நேரில் சென்று இறைப்பது. வீட்டின் ஐந்து பேர் என்ன, இதைச் செய்ய எத்தனை பேர் இருந்தாலும் போதாது.


வீடுகளின் பின் புறங்களை இணைக்கும் பாதை, முடிவில் ஊர் ஆரம்பப் பள்ளியில் இணையும். பள்ளி முடிவில் கிணறு. ஒட்டிய புளிய மரங்கள் இரண்டு. அதற்குப் பின்னால் வாழையும், நெல்லும் இருந்த வயல்கள். தரிசும் முள்ளுமாய்க் கோடையில் இப்போது. நெருஞ்சி முள். சிறு கல்லைப் போல் இருக்கும். அதற்கு உடலெல்லாம் முள் உண்டு. இவ்வூரின் முள் வகைகளும் அவளுக்குப் புதுசு. முள் தைத்தது என்பார்கள். அது எப்படித் துல்லியமாகத் தைக்கும் ? இந்தப் புளியமரத்தை ஒட்டி நிறையக் கதைகள் உண்டு. இதனாலோ என்னவோ இரவில் யாரும் நீர் இறைப்பதில்லை.


நல்ல தண்ணீர் கிணற்றின் சுற்றுச் சுவரில் எப்போதும் நீர் வழிந்தபடி இருக்கும். அதன் வெளி மடிப்பில் குடங்கள் நிரப்ப ஊற்றிய நீர் சிதறி ஓடி, சில இடங்களில் வழி உண்டாக்கி, நீர்ப் பாசிகள் தெரியும்.


இன்று அவள் பெரியவனுடன் போகும் போது கூட்டம் குறைந்திருந்தது. எல்லாம் மேற்கு வீட்டுக்காரர்கள். இவள் வேலை இறைப்பது. பெரியவன் பாதி வழி. மகள் பாதிக்கு மேல், கடைசியில் சின்னவன். கணவர் இல்லை. இருந்திருந்தால் பரவாயில்லை.. தேர்ந்த ரிலே ஓட்டம் போல் கச்சிதமாக நடந்தால் ஒரு மணியில் வீடு திரும்பலாம். திரும்பியதும், இழுத்த கைகளில் எண்ணெய் தடவி வேறு வேலை பார்க்க வேண்டும். இரவில் உஷ்ணம் ஏறி கடுத்து மூத்திரம் மறிக்கும். வலியை கூர்ந்து கவனித்தால் சமாளிக்கலாம். இல்லை, நீரை தலையில் தெளிக்கலாம். இறுதியில் சமாளிக்க முடியவில்லை என்றால், இரண்டு கோப்பை நீரை வாளியில் ஊற்றி காலை இறக்கலாம்.


கிணற்றை எட்டிப் பார்த்தாள். வானின் வெளிச்சம் பாயும் பெரிய கிணறு. ஒளி நீரானால் இந்த தண்ணீர் சிக்கல் இல்லை என்று நினைத்தாள். ஒளிக்குத் தான் நீராகும் தகுதி இருக்கிறது. மேலே எதுவும் மறைக்காத முழு வானம். கீழே கிணற்றின் கால்களில் நீர் தவழ்ந்து கொண்டிருந்தது. மேலே நின்ற இரண்டு புளிய மரமும் உள்ளே நிற்கும் அளவுக்கு அதன் ஆழம் நிச்சயம் இருக்கும் என்று எண்ணினாள். சுற்றியும் ஊற்றுகள் வழிந்து ஓடுவது தெரிந்தது. ஒரு ஊற்று மட்டும் நுரைத்துக் கொட்டிக் கொண்டிருந்தது. மற்றவை பெரும்பாலும் ரகசியமாய்க் கசிந்து கொண்டிருந்தன.மேலிருந்து இறங்கிய இரும்புக் குழாய்கள் அதன் வயிற்றில் குத்தி நின்றன.ஒரு காகம் கரையில் அமர்ந்து குழியில் சிந்திய நீரைக் கொத்திக் குடித்துப் பறந்தது. மேலே பருந்து ஒன்று வட்டமிட்டு புளியமரத்தில் பறந்து அமர்ந்தது. ஒரு நாய் கசிந்த ஓடையை நக்கி வாலை ஆட்டியபடி குடித்தது. காயிலே புளிப்பதென்ன , கனியிலே இனிப்பதென்ன, காற்றிலே குளிர்வதென்ன, கண்ண பெருமானே? நீரின் சுவைதான் என்ன? ஏன் பாரதி இதை சொல்லாமல் விட்டார்?


தண்ணீர் மிக ஆழத்தில் போய் விட்டதால் கம்புகளை சாய்த்துத் தான் ராட்டினம் கட்டியிருப்பார்கள். பெரிய கருங் கற்களை புரட்டி எடுத்து கிணற்றுச் சுவரை ஒட்டிக் குவிக்க வேண்டும். இடையில் சவுக்குக் கட்டைகளை நிறுத்தி, முனையில் கயிறால் ராட்டினத்தை கட்டுவார்கள். இதற்கும் பேர் பாத்தியதை உண்டு. ஓசி கொடுக்கல் , வாங்கல், இடம் பிடித்தல் எல்லாம் உண்டு.


நல்ல வேளையாய் ராட்டினக் கம்பு காலியாக இருந்தது. எட்டி ராட்டினத்தை கயிற்றில் சொருக முனைந்தாள். இரண்டொரு முறை தப்பிப் போனது. இது ஆபத்தான வேலை. கம்பு கொக்கு போல் கிணற்றின் உள் பார்த்து இருக்கும். உள்ளே இழுத்து விடலாம். எட்டியபோது காலும் , பல்லும் கூசியது. அடுத்த முறை மாட்டியது. சின்ன சில்வர் குடத்தை கழுத்தில் கயிறு கட்டி இறக்கினாள். கையைக் கிழித்தபடி நீரை நோக்கி குடம் விரைந்தது. தொப் என்று பாதி கவிழ்ந்தது. இரண்டு முறை தூக்கி அதை நீரின் உள்ளே அனுப்பினாள். சந்தோஷமாக உணர்ந்தாள். அவளுக்கு எதுவும் ஆரம்பித்தால் போதும். போக்கில் ஒப்புக் கொடுத்தால் முடிந்து போகும். காலமும், உடம்பும் தான் தொல்லை. மனசை அந்த ராட்டினம் போல் தள்ளி விடலாம். முதல் குடம் மேலே வந்தது. கையால் இழுத்து கூடத்தில் ஊற்றி மீண்டும் உள்ளே அனுப்பினாள். இந்த முறை அதுவாகவே உள்ளே மூழ்கியது. ஏனோ கயிறு எளிதாவதை உணர்ந்தாள். உற்சாகமாக மீண்டும் இழுத்தாள். வெறும் கயிறு மட்டும் மேலே வந்தது. மூழ்கிய குடம் கண்ணில் விழவில்லை. கயிறு மட்டும் செய்வதற்கில்லை என்று தொங்கியது. ரப்பர் குடத்தை கட்டியிருக்கலாம் என்று எண்ணினாள். குடத்தை எடுப்பது இன்று செய்ய முடியாது.


கயிற்றை திரும்ப மேலே இழுத்துப் பார்த்தாள். நைந்து போன பகுதி காலுக்குக் கீழே சுருண்டு கிடந்தது. முடிச்சு பலமில்லாமல் தான் நழுவியிருக்கிறது. இரண்டொரு முறை குடம் மேலே வருகையில் கழுத்தைப் பிடித்து முடிச்சை சரி செய்ய வேண்டும். முதல் தோண்டி என்பதால் அசட்டையாக இருந்து விட்டாள்.


இப்போது இதைவிடப் பெரிய குடத்தை கட்டி இறக்கினாள். மேலே இழுத்து விட முடியுமா என்று யோசித்தாள். அதற்குள் ராட்டினம் சுற்றிப் பளபளத்தது. அதன் தகடு அறுக்கும் ஒலி நின்று குடம் நீருள் கவிழ்ந்து மிதந்தது. பின்னர் நுரை தள்ளி நீர் குடித்து மூழ்கியது. பெரிய குடம் என்பதால் , பெரியவனை அவள் பின்னால் நின்று கயிற்றை இழுக்கச் சொன்னாள்.


கட்டை முனகி அசைந்து கீறல் ஒலிகள் கேட்க ஆரம்பித்தன. அவளுக்கும் கழுத்து நரம்புகள் புடைத்துப் பெரிதாகின. பற்கள் கிட்டித்தன. நன்றாய் முகம் வியர்த்து, உள்ளங்கையும் பிசுபிசுத்தது. வாய் திறந்து கத்த வேண்டும் போல் இருந்தது. பலம் கொடுத்து இழுக்க ஆரம்பித்தாள் . ஒரு குடமாவது அன்று சமைக்க மிஞ்சுமே என்று எண்ணினாள். தோளில் பலம் குறைவது தெரிந்தது. பாதியில் யோசித்து ஒன்றும் செய்வதற்கில்லை. கீழே இறக்கவும் வாய்ப்பில்லை. குடம் நடுக் கிணற்றில் ஆட ஆரம்பித்தது. மூச்சைப் பிடித்து இழுத்தாள். பெரியவனும் அவள் பின்னால் முடிந்த வரை தாங்கி நிறுத்தியும், இழுத்தும் உதவிக் கொண்டிருந்தான். குடம் மேலே சிமெண்டுப் பகுதியைத் தாண்டி விட்டது. ஒரு கை நிறுத்தி, இன்னொரு கை அதை வெளியில் இழுக்க வேண்டும். தயார் படுத்திக் கொண்டிருக்கும் போது தாங்கு கம்பு படக் என்று பாதியில் உடைந்து கிணற்றுள் விழுந்தது. கிணற்றில் அலைகள் அதன் பெரிய சிரிப்பொலி போல் கேட்டது. குடம் சுவற்றில் முட்டி நீரில் விழும் சத்தம் கேட்டது. மொத்தக் கயிறும் கிணற்றுள் இருந்தது. அப்புறம் நீண்ட நிசப்தம். நீரில் அலைகள் ஓய ஆரம்பித்தன. எல்லோரும் இவளையே பார்த்தபடி இருந்தனர். இவளுக்கு தொண்டையில் எச்சில் சிக்கியது. உட்கார்ந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.


இறங்கி ஒரு பாதிக் குட நீருடன் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். வழியில் அவன் 'அம்மா...ஒரு வாடகை சைக்கிள் இருந்தா பம்புசெட்ல தண்ணி பிடிக்கலாம்...' என்றான்.


ஏனோ அவளுக்குத் தானும் ஒரு உறிஞ்சப்படும் கிணறு என்றே தோன்றியது. வானம் ஒன்று தான் கிணற்றை அறிய முடியும்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2