Translate

ஆப்பிள் கட்டி எழுப்பிய கோயில்

ஆப்பிள் கட்டி எழுப்பிய கோயில் 

-------------------------------------------


என்றோ ஆதி மனிதனின் காலில் ஒரு கல் இடறி வந்த ரத்தமே அந்தக் கல்லின் மேல் நெற்றிப் பொட்டாய் மாறியது. ஆதிமனிதன் ஒருவன் தன்னைக்  கீழே வீழ்த்திய அந்தக் கல்லே, மனிதன் வியந்து என்ன என்று கேட்ட இடமே வழிபாட்டின் முதல் படி. அன்று முதல் இன்று வரை மனிதனின் கால் இடர்களும் , கேள்விகளும் முடியவே இல்லை. ஆனால் ஒன்றுண்டு, மனிதன் வியக்கும் எல்லாமும் கடைசியில் வழிபாட்டில் தான் போய் முடிகிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அருகிலிருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். சாயங்காலம் அந்திப்பொழுதில் மலைமேல் ஏறி ஊரைப் பார்க்கும் போது , ஓசுர் LED டாஷ்போர்டைப் போல் தோன்றியது. விளக்குகள் மின்னியும் அணைந்தும் , சில இடங்களில் மின்மினி போல் பறந்தவாறும்,சில இடங்களில் நின்று அமர்ந்து யோகியைப் போல் நின்று எரிந்தும் , சில இடங்களில் காரிருளும் அந்த ஒளியால் துலங்கின. உள்ளே பிராகாரத்தில் இருந்த மூன்று சிலைகளை ஊன்றிக் கவனித்தேன். ஒன்று யமனின் சிலை. யமன் இறப்பின் உருவம். வலக்கையில் பாசக்கயிறும், இடக்கையில் காகமும், காலத்தின் கருமையான எருமையின் மேலமர்ந்து இருக்கும் உருவம். மனிதன் வியந்து வழிபட்ட முதல் படிமம் இறப்பாகத்தான் இருக்க முடியும். இன்னொன்று தீயின் உருவமான அக்கினி, மூன்றாவது மழையின் குறியீடான வருணன். முதன் முதலில் தீயையும்  , மழையையும் கண்ட மனிதன் வியக்காமல் இருக்க முடியாது. வியந்ததை  சொல்லிலும் சிலையிலும் வடிக்காமல் முடியாது.

மனிதன் அவன் ரசித்த அழகை, வியந்ததை  சிலையில் வடிக்காமல் , வழிபடாமல் இருந்ததில்லை. அழகிய பூவிற்க்கு நம் வழிபாட்டில் இடம் இருக்கிறது. ஆடு, மாடு எல்லாவற்றிற்கும் அதற்கான இடம் இருக்கிறது.

ஆனால் பரிதாபம் , இன்று மனிதன் உடைக்கு அடுத்தபடியாக உடலில் ஒட்டியே வைத்திருக்கும் போனிற்கு வழிபாட்டில் இடம் உண்டா? போனை வேண்டிய பக்கத்தில் இருந்து நாளெல்லாம் உறிஞ்சி எடுத்து விட்டு, அதையே அடுத்தவர் கையில் பார்த்து நாலு வசவு மனதில் வைவதே எல்லோரும் செய்வது. 

'புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்

இகழ்வோம் மதிப்போம் மதியோம்' என்று நம்மாழ்வார் சொல்லுவது போல் அதற்குப் பழியும் உண்டு, புகழும் உண்டு. மதிப்பும் உண்டு, காரித் துப்பலும் உண்டு.

அதைப் போல , செல்போனை வைத்து என்ன நல்லது செய்யவேண்டும், என்ன செய்தால் உடம்புக்கு, மனதிற்கு ஆகாது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் செய்வதில்லை. பழி போனில் மேல் மொத்தமாய்ப் போட்டால் எல்லாம் சரியாகும். 

இவையன்றே நல்ல இவையன்றே தீய,

இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்

என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,

என்னால் செயற்பால தென்?

இவையெல்லாம் நல்லது, இவையெல்லாம் கெட்டது  என்று எனக்குத் தெரிந்த பின்னரும் என்னால் நல்லதைச் செய்ய முடியவில்லையே, என்ன செய்வது இறைவா? என்று கேட்கிறார்.  நம்மாழ்வார் பாசுரம் , இப்போதும் பொருந்துகிறது.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் , கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களில் மனித வாழ்வில் நடந்த முக்கியமான ஒரு விஷயத்திற்கு கோவில் இருக்க வேண்டுமா, இல்லையா? உலகில் மூச்சு விடாத மனிதன், உணவு உண்ணாத மனிதன், அந்தரங்கமாகவேனும் இறைவா என்று ஒரு முறை சொல்லாத மனிதனும் இருக்க முடியாது என்பது போல், இன்று கையில் ஸ்மார்ட் போனில்லாத ஒருவன் பூமியில் கிடையாது. பரிணாம வளர்ச்சி என்று ஒன்று உண்மையானால் சிம்பன்சியும் , ஆலமரமும், மறைத்து நிற்கும் செங்கல் சுவரும்   ஸ்மார்ட் போன் கேட்கும் காலம் வரும்.

சில நாட்கள் முன்னர் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஸ்டோர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. 

நான் முதலில் இன்டெல் நிறுவனத்தில் இருந்து ஆப்பிளுக்கு மாறியதும் எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது ,எல்லோருக்குமான  காலாண்டு அறிக்கைக் கூட்டம். இன்டெல் போன்ற கம்பெனிகளில் லாப நஷ்டக் கணக்கு பாதி நேரம் வாசிப்பார்கள். ஒரு சில டபுள் டிஜிட் , ஒரு சில லோ சிங்கிள் டிஜிட் , EBIT , EPS போன்று சில வார்த்தைகள். எங்கு செலவு ஜாஸ்தி, என்ன குறைக்க வேண்டும் போன்ற விஷயங்களே இருக்கும். ஆனால் ஆப்பிளில் CEO வாடிக்கையாளர் தனக்குப் போட்ட கடிதங்களைப் படிப்பார். அப்போது ஆப்பிள் வாட்ச் மேலேறி வந்து கொண்டிருந்தது. எல்லாமும் கண்ணில் நீர் தழுக்க , தான் எவ்வாறு ஆப்பிள் வாட்ச் இருந்ததால் உயிர் பிழைத்தேன் என்று சொல்லும் கடிதங்கள். இன்று வரை இதுபோன்ற கடிதங்களை , விடீயோக்களை கணக்கற்ற முறை கண்டுள்ளேன். எல்லாமும் ஐபோனை உபயோகப்படுத்துவர்களின் கதைகள். எல்லோரும் இதைப் போல் இருந்தால், அப்புறம் அந்த நிறுவனம் செய்வதை எப்படி உருவகப் படுத்துவது? அங்கே வேலை பார்த்து வெளிக்கொணரும்  அந்தக் கூட்டுப் பொருள் இருக்கும் இடத்தை என்னவென்று சொல்வது?  பார்த்து வியக்கும் பொருள் வழிபடத்தக்கதென்றால் போனை என்ன சொல்வது? குறியீடுபோல் அது இருக்கும் இடத்தை கோயில் என்று தானே சொல்ல வேண்டும்? என்றாவது ஒரு நாள் இந்த நாகரிகம் சுவடில்லாமல் அழிந்தால், ஏதாவது ஒரு பொருளை வைத்து , நாகரிகத்தை மீட்டெடுக்க முடியும் என்றால் , இன்றைய நிலைமையில் அது போனாக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் ஐபோனாக மட்டுமே இருக்க வேண்டும். அத்தனைநாள் புதைந்து மீட்க முடிவது இன்றைய போக்கில் ஐபோனாகவே இருக்கும்.

நான் முதல் நாள் ஆப்பிளில் சேர்ந்த போது, எங்களுடன் சேர்ந்த எல்லோரையும் வைத்து ஒரு விழா நடந்தது. அதில் ஏற்கனவே வேலை பார்த்துக்கொண்டிருத்தவர்கள் புதிதாய் வந்தவர்களை  வரவேற்றுப் பேசினர். அதில் பகுதியாக ஒரு சிலர் ஆப்பிள் என்றால் தன்னளவில் என்ன என்று ஓரிரு வரிகளில் சொன்னார்கள். ஒருவர் சிறு விஷயங்களிலும் வியக்குமளவு கவனம் செலுத்துவது என்றார். ஒருவர் உடற்பயிற்சி போல் ஒருவொரு நாளும் உழைத்து, மேல் நிலையை அடைவது என்றார். அதில் ஒருவர் தான் தானாக இருக்க முடிந்த இடம் என்றார். நேர்த்தி என்றால் என்ன என்று நாம் கோவில்களில் அறியலாம். பேளூர் , ஹளபேடு  போன்ற கோவில்களில் நாம் பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் சிற்பங்கள் இருக்கும். கருவறையின் முன் உள்ள சாளரத்தில் சிற்பங்கள் இருக்கும். சிற்பத்தின் சிறுவிரலின் மோதிரத்தில் ஒரு சிற்பம் இருக்கும்.அதன் தெய்வ உருவங்களில் உள்ள அணிகலன்கள் உள்ள சிறு உருவங்கள் செதுக்கப்பட்டு, அதிலும் நேர்த்தி இருக்கும். ஏன் இப்படி யாரும் பார்க்காத இடங்களில் இவ்வளவு சிற்பங்கள்? இதற்கு விடை வேண்டுமானால் உலகில் ஏன் இவ்வளவு பூ பூக்கிறது என்று கேட்க வேண்டும்? பூ யாருக்காகவும் பூப்பதில்லை. தன்னை உலகில் வெளிப்படுத்தவே பூக்கிறது. 

எந்தக் கலையும் முழுமையாக வெளிப்படுதல் மட்டுமே. செய்யும் வேலை கலையாக இருக்குமானால்  வேறு இன்பம் கிடையாது. இதை ஒரு நிறுவனமாக்கி செய்ய முடியுமானால் எப்படி இருக்கும் அந்த நிறுவனம். ஆப்பிளில் அந்த மெனக்கெடல் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது என் அனுபவம். 

கான்டீன் அருகில் என்னுடைய இருக்கை அமைந்திருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் மிகப் பெரிய ஆலமரம் சாலையை மூடியிருக்கும். அதன் இடையில் பிரிட்டிஷ் காலத்து ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் கல் கட்டிடம். அதன் பின்னே விதான் சௌதாவின் அசோகச் சக்கரம். இடப்பக்கம் காடுபோல் தெரியும் கப்பன் பார்க். உள்ளே இருந்து அம்புகள் போல் பறந்து வெளிப்படும் புறாக்கூட்டங்கள். அம்புபோல் மீண்டும் சென்று செருகும் வேறொரு புறாக்கூட்டம். இந்த அழகிய கேன்டீனில் வேலை பார்க்கும் பையன் எனக்குப் பரிச்சயம். என்னை வியப்பில் ஆழ்த்தியது அவனுடைய துல்லியமும், கைப்பழக்கமும். இரண்டு வரிசை டேபிள்கள் , மூன்று மூன்றாய் போட்டிருப்பார்கள். ஒரு நாளில் பலமுறை அதை நகர்த்தி சரி செய்வார். எட்டு நாற்காலிகளின் விளிம்பும் ஒரே கோட்டில் துல்லியமாய் இருக்கும். விலகி நின்று அதை கோட்டில் நிறுத்துவார். ஒரு ஐம்பது தண்ணீர் டம்ளர்களை அவ்வளவு அழகாக கவிழ்த்தி, ஒரே இடைவெளியில் அடுக்குவார். காபி கோப்பைகளும் அவ்வளவு மகிழ்ச்சியுடன் , ரெடியாக நின்றிருப்பதாக எனக்குத் தோன்றும். ஒன்றும் பேச மாட்டார். ஆனால் வேலை செய்து கொண்டே இருப்பார். இப்படிப் பட்ட ஆட்கள் நிறைய ஆப்பிளில் பார்க்கக் கிடைப்பார்கள். இதுதான் ஆப்பிளை இந்த இடத்தில் நிற்க வைக்கிறது என்று நினைக்கிறேன். முழுதும் கீழிருந்து மேல் நோக்கி எழுப்பப்பட்டது. பொதுவாய் மற்ற இடங்கள் எல்லாம் மேலிருந்த கீழ் பார்த்து கட்டப்பட்டவை.

எந்த ஒரு ஆய்வும் ஆப்பிள் பொருளை வாங்குபவரின் பார்வையில் இருந்தே முடிவாகும். கடந்த சில நாட்களும் அப்படியே. மேலாளர்கள் அறையில் இருக்கும் எல்லோரும் ஒரு பக்கத்தை திரட்டிக் கொண்டுவரும் போது , நிதானமாய் தலையைக் கவிழ்ந்து, ஒரு சில நொடிகள் மௌனமாய் இருந்து , பொருளை பயன் படுத்துபவரின் பார்வையில் சில கேள்விகளால் மறுபக்கம் காட்டுவார்கள். அவர்கள் எளிதாக  அப்படியே. பேசிக்கொண்டிருக்கும் போதே பயனாளர் பார்வையில் வரும் விஷயங்களில் தன் கருத்தை மாற்றிக்கொள்வார். இது பலமுறை முந்தய நாட்களில் நடந்தது.

ஆப்பிள் ஸ்டோர் பெங்களூர் விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கிறது. பிரான்சில் இருந்து இங்கு வந்து தங்கியிருந்து , புது ஆட்களுக்கு பயிற்சி கொடுத்து இந்த ஸ்டோர் நடக்கிறது என்பது எனக்கு வியப்பாய் இருந்தது, இவர்கள் மாதக்கணக்கில் பின்னால் இருந்து நேர்த்தியை பயிற்றுவிக்கிறார்கள். எல்லோரும் இளைஞர்கள், இளைஞிகள். ஆர்வம் கொப்பளிக்கிறது. பெங்களூர் ஸ்டோருக்கு வருபவர்கள் சாதுவானவர்கள். டெல்லி , மும்பையில் அப்படி அல்ல என்றார் மேலாளர். எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றார். புதிதாய் எடுத்துச்  சொல்ல வேண்டியது அபூர்வம் என்றார். பார்க்க வருபவர்கள் அதிகம் என்றார். ஜீனியஸ் லேபில் இருந்தவர் ஆயிரத்தில் ஒரு சில சிக்கல்களை எடுத்துச் சொன்னார். எல்லோரும் குறிப்பு எடுத்துக்கொண்டார்கள். இன்னும் ஒரு சில நேரடி தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு உருவானது. தீபாவளி கூட்டத்தை சமாளித்ததைப் பற்றிச் சொன்னார்.

பதினோரு மணிக்கு நடை திறந்தது. எல்லோரும் வரிசையாய் நின்று அன்றைய முதல் பக்தரை கை தட்டி வரவேற்றனர்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2