Translate

எதிர்பாராத சீர்திருத்தம் (சிறுகதை)

எதிர்பாராத சீர்திருத்தம்

----------------------------------

'நேரமாச்சு ஆரம்பிச்சுரலாமா...இத முடிச்சு அவரு இன்னொரு இடத்துக்குப் போனும் '


மலர்விழி கையில் ஒரு பேப்பரை பிடித்து மைக்கை ஆன் செய்து மேடை முன் வந்தார்.

தி.க அலுவலகத்தில் பெரியார் மணியம்மை திருமணப் பிரிவுக்கு பொறுப்பாய் இருப்பவர். 

முன்னெல்லாம் கருப்புச் சேலை அணிவார்.

இன்று கருப்பு சுடிதார் அணிந்திருந்தார். இதுவரை இப்படி பல ஆயிரம் கல்யாணங்கள் நடத்தி வைத்திருப்பார்.


இது மரபான கல்யாணம் இல்லை. விரும்பிச் செய்தது என்று அங்கு இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.


'சுப்பிரமணியன் சங்கரநாராயணன் மற்றும் சோபியா கிரேஸ் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

இந்தக் கல்யாணம் பத்து நிமிஷத்துல முடிஞ்சுரும். 

மூத்த பத்திரிகைத் துறை நண்பர் அறிவழகன் சுயமரியாதைக் கல்யாணம்னா என்னன்னு சொல்லுவாரு...அப்புறம் கல்யாண ஒப்பந்தம்...அவ்வளவுதான்..திரு அறிவழகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்...'


மேடையில் ஒரு சோபாவும் , அதை ஒட்டி இருபுறமும் ரெண்டு ஜோடி நாற்காலிகள் இருந்தன. ஆனால் அவர்கள் கருத்தியலுக்கு மாறாய் மேடை தூய வெள்ளை நிறத்தில் இருந்தது. மூன்று மாடங்கள் இணைந்த உப்பரிகைத் திரை ஓவியம் உறைந்த அலையென நின்றிருந்தது. இணையும் இடங்களில் சிவப்பு வெள்ளைப் பூக்கள் செருகப் பட்டிருந்தன. சிறிது தள்ளி குழந்தை போல் ஒரு பூ ஜாடி நின்றது. அதன் பக்கத்தில் பிளாஸ்டிக் தாளில் கல்யாண மாலை சுருண்டு காத்துக் கொண்டிருந்தது. திரைச் சேலையில் மணமக்கள் பெயர் இல்லை. யார் கையிலும் பத்திரிகை இல்லை. ஏன், அச்சடித்த பத்திரிகையே இல்லை.


இங்கு வழக்கமாய் இல்லாதது எல்லாம் வேண்டுமென்றே விடப்பட்டதோ என்று தோன்றியது.

சீர்திருத்தம் என்றால் மரபை விடுவது. இல்லை மரபில் புதிதாய்ச் சேர்ப்பது.  

இல்லை வெட்டுவது மட்டும் தானா?.

கோவிலின் கர்ப்பக் கிரகம் மாதிரி. மனிதன் தெய்வத்திற்கு எழுப்பிய முதல் கோவில் ஒரு கருவறை மட்டுமே. பின்னால் மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரங்கள், சுற்றுத் தெய்வங்கள் அதில் சேர்ந்தன.

இது இப்போது மீண்டும் கருவறையை மட்டும் பார் என்கிறது.


சுப்பிரமணியன் ஜென்-G என்று வயதை வைத்துச் சொல்ல முடியாது. நினைப்பில் அப்படித்தான்.

ஒரே பையன். படிப்பு சரியாக ஏறவில்லை. அவன் ஜாதியின் பெரும்பாலர் போல் ஐ டியில் பேங்கில் நுழையமுடியவில்லை.அவனுக்கு உள்ளூர சினிமாவில் ஆர்வம் இருந்தது. ஆர்வமும் உழைப்பும் இரு வேறு விஷயங்கள். அவனளவில் இந்த தூரம் இன்னும் அதிகம்.


இடையில் நாட்கள் உருண்டோடி விட்டன. அம்மாவும், அப்பாவும் இவனை நம்பியில்லை.

அப்பா ஓரிருமுறை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருந்தார். மாதம் தோறும் செக்கப் போக வேண்டியிருக்கிறது. மாத்திரைகள் இதற்கு மேல்.இவனால் இதுவரையில் பண வகையில் எதுவும் செய்ய முடியவில்லை. தன் மேல் செலவழிக்கவே சரியாய் இருந்தது. ராயல் என்பீல்ட் , க்ராக்ஸ் செருப்புகள், பியூட்டி பார்லர் போன்ற செலவுகள்.


கல்யாணத்திற்கு நின்ற போது அந்தச் சமூகத்தில் இவன் ப்ரொபைல் பொருந்தவில்லை. மேலும் சமூகம் சிதறி நாடும் , ஊரும் பெயர்ந்து போயிருந்தது.


ஓரிரண்டு வருடங்கள் அந்தக் கல்யாண கிளாசிபைட் லிஸ்டில் பெயர் வந்துகொண்டே இருந்தால் நல்லதில்லை. சில வேளைகளில் கல்யாணம் என்பதே தனக்கு நடக்காமல் போகுமோ என்று தோன்ற ஆரம்பித்தது. கடைசிக் காலத்தில் சிக்கல் என்று அம்மாவிற்கு எண்ணம். அவனுக்குச் சிக்கல் இப்போதுதான். உடலும் மனமும் பேச்சைக் கேட்பதில்லை.


இந்த இடைஞ்சல்களுக்கு நடுவில் வாழ்க்கை போய்கொண்டிருக்கும்போது ஒரு நாள் அவன் சோபியாவைச் சந்தித்தான்.


அவள் மீடியா இன்ப்ளூஎன்சர் ஆக முயற்சிப்பவள். மருத்துவம், உடல் நலம் பற்றிய யூடியூப் சேனல் ஆரம்பித்திருந்தாள். இவளை அவன் அடிக்கடி காணொளியில் பதிக்கும் போது காதல் ஏற்பட்டது.


வீடியோ புரொடக்ஷன் முன்னும் பின்னும் அவளுக்கென வேலை பார்த்தான். ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தான். எப்படி எடுக்கப் போகிறோம். எங்கெங்கு கேமரா இருக்கும். எந்த இடத்தில் எப்போது பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான்.முகத்திற்கென்று தனி விளக்குகள் வைத்தான். போஸ்ட் புரொடக்ஷன் என்று அவளை வரவழைத்து அவள் முன்னால் அவளையே வெட்டி ஒட்டினான். டீஸர் வீடியோக்களை தனியாக எடுத்தான். இவ்வளவுக்குப் பின் வேறு வழியில்லாமல் காதலும் வந்தது. பசி, தாகம் போல் காதல் இதற்கு முன் எப்போதும் வந்ததா, இன்னும் வருமா தெரியாது.


அவர்கள் குடும்பம் மேல் நடுத்தர வர்க்கமா, கீழ் நடுத்தர வர்க்கமா என்று சொல்ல முடியாது. இந்தக் கல்யாணத்தைப் பொறுத்தவரை அவள் மேல் வர்க்கம். இதிலும் ஒரு நுண்ணிய பேரம் இருந்தது. அவள் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். அவர் இப்போது இவர்கள் வசம் இல்லை. இரண்டாம் வீட்டில் இருக்கிறார்.இவர்கள் பக்கமும் இந்தக் கதை விலை போகாது.


இந்தச் சூழ்நிலையில் இவளுக்கும் காதல் வந்துவிட்டது. திருமணமும் முடிவானது. இரு பெற்றோர்களுக்கும் மறுப்பு சொல்ல ஒன்றும் இருக்கவில்லை.அவர்கள் கேட்கவும் போவதில்லை. முன்னைப் போல் திருமணத்திற்கு பின் வீட்டிற்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டான்.

அவள் அலுவலகப் பக்கம் தனி வீடு பார்த்தாகி விட்டது என்றும் சொன்னான். அம்மாவிற்கு அவன் கை நழுவிப் போவது தெரிந்தது.


எப்படி கல்யாணத்தை நடத்தலாம் எனும்போது , யார் ஓங்கிய கை என்ற பதில் வந்தது.. அந்த மதமும் அதற்குப் பின்னால் வந்தது. விலைவாசியை வைத்து இந்த இடமும் முடிவாகியது.


கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் என்ன நடக்கும் என்று தெரியாமலே இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். சிலர் மொய்ப்பணம், பரிசுகள் கொடுக்கலாமா , விடுவார்களா என்று கேட்டுக்கொண்டனர். ஒலிபெருக்கியில் நாதஸ்வரம் வந்தது. நொடியில் மீண்டும் அணைந்துவிட்டது.


பையனின் அம்மா எதிர் சீர்த் துணிகளை வந்தவர்களுக்கு எப்படிக் கொடுப்பது என்று யோசித்தார்.

தாம்பூலப் பைகள் கொடுக்க வேண்டும் என்றும் நினைவில் வைத்துக் கொண்டார்.

அவருக்கு ஒரு கல்யாணத்தில் எப்படி ஒன்றுமே செய்யாமல் இருப்பது என்று தெரியவில்லை.


பழக்கம் எது சடங்கு எது என்று பிரித்துச் சொல்லத் தெரியவில்லை. எல்லாம் ஒன்று போலேயே இருந்தது. நாளடைவில் எந்த ஒரு காரணமும் காரியமும் தனிப்பட்டுப் பிரிந்து விடுகின்றன. பறவையும் குஞ்சும் போல. காரியம் எப்படியோ காலத்தில் எஞ்சுகிறது. காலத் தேர் ஏறி காரணம் கிடைத்தால் நல்லது. கண்டு பிடித்தாலும் அன்றிருக்கும் காரணம் இன்றிருக்க வாய்ப்பில்லை.

காரணத்தை ஒருவர் வசதிக்காக எண்ணிக் கொள்வது எப்படி நியாயம் என்று அவளுக்குத் தோன்றியது.

காலம் போய் காரணம் தேடுவது வானில் தனிப் பறவையைத் தேடுவது போல் என்று பட்டது.

இதற்கு தான் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று அவள் எண்ணினாள்.


விபூதி ,குங்குமம், பட்டுச் சேலைகள் என்று ஒரு சிறு கூட்டம். இன்னொன்று நாயுடு தெலுங்கு பேசியது.யாரும் எதையும் மறுப்பதாகத் தெரியவில்லை. தானாகவே திரண்டு இங்கு வந்து நிற்கிறது. ஒரு சிலருக்கு எங்கு வந்திருக்கிறோம் என்று அப்போது தான் புலப்பட்டது. நடுத்தர வயது மனிதர் 'வெரி டல் மேரேஜ்' என்றார்.


அறிவழகன் மேடையில் ஏறினார். ஒரு பெண் தட்டில் பரப்பிய ரோஜா இதழ்களை எல்லோருக்கும் வழங்கினார்.


'அனைவருக்கும் வணக்கம்....ஜாதி மறுப்பு திருமணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்...நான் விழுப்புரம் தாண்டி ஒரு கிராமத்துல பொறந்தேன்...என்னோட கல்யாணத்துல பொறப்ட்டு போக இருபது பேர் சரியா இருந்தோம்...ஒத்தப்படை வேணும்னு ஒரு ஆளுக்கு மணிக் கணக்கா வெய்ட் பண்ணோம்...இது எப்படி நியாயம்...'


ஒரு ஆளைக் குறைத்தாலும் ஒற்றைப்படை ஆகுமே என்று கேட்கத் தோன்றியது.

இப்படி ஒரு விதி எந்த ஊரில் இருந்தது என்று தெரியவில்லை.


அறிவழகன் தொடந்தார்.


'முன்னூத்தி அறுபந்தஞ்சு நாலுல ஏன் முப்பது முகூர்த்தம்...அன்னிக்கு ஒரே கூட்டம்...மண்டபத்துக்கு இவ்வளவு ரேட்...ஏன் ஊர விட்டு வெளில போய் கல்யாணம் பண்ணனும்...

ஆகையினாலே இவைகளைப் பற்றிச் சிந்தித்து செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்த இவர்களைப் பாராட்டுகிறேன்.இப்படி ஆயிரம் கல்யாணங்களை நாங்கள் இங்கே நடத்துகிறோம்.'


உலகில் எதுவும் விலையில்லாமல் இல்லை. இங்கும் அப்படித்தான்.இட வாடகை , பேக்கேஜ் எல்லாம் சேர்த்து கட்டணம் ரெண்டு லட்சம் பக்கம் என்று சொன்னார்கள்.


அவர் பேசியபடி இருந்தார்.


'பழைய சடங்குகள் புரோகிதங்கள் இல்லாத திருமணம் இது. எதுக்கு ஒரு ஆள் சொல்றத மூனு மாடில இருந்து நம்ம கேட்கணும்..,கட்டிடத்துல இருந்து பார்த்தா சூரியன் தெரியுமா...நடிக்கிறோம்...வாய்க்குள்ள நுழையாத மந்திரங்கள் ஏன் சொல்லணும்...

ஆனால் இங்கே ஒரே ஒரு ஒப்பந்தம்...கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். சேர்ந்து வாழும் உடன்படிக்கை.'


ரோஜாப் பூவையும் , மொய்க் கவரையும் வைத்திருந்த பெரியவருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று புரியவில்லை.பல இள வயதினருக்கு பேசும் தமிழ் மட்டுமே பழக்கம். கூர்ந்து கேட்டும் தூய தமிழில் இருந்த பேச்சின் பகுதி புரியவில்லை.


'சேர்ந்து வாழத் தீர்மானித்திருக்கும் மணமக்களை மாலை மாற்றி உறுதிமொழி எடுத்துக் கொள்ள அழைக்கிறேன்.'


மலர்விழி சரியாக இந்த இடத்தில் இன்னொரு மைக்கை வாங்கி பேரையும் முகவரியையும் சொல்லி இருவரின் பெற்றோர்களை மேடைக்கு அழைத்தார்.


அறிவழகன் மைக்கில் 'சொல்றத திருப்பிச் சொல்லுங்க...உங்க பேரு அட்ரெஸ் சேர்த்துகோங்க அப்புறம் 'சோபியா என்னும் நான், சுப்பிரமணியன் சங்கரநாராயணன் ஆகிய உங்களை எனது கணவராக ஏற்றுக்கொள்கிறேன்...'


சோபியா ' சோபியா என்னும் நான், சுப்பிரமணியன் ...' மீதம் அவளுக்கு மறந்திருந்தது. அறிவழகன் மீண்டும் சொன்னார்.


'நமது வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உங்களுக்குச் சம உரிமையும், சமமான பொறுப்பும் கொண்ட உற்ற நண்பராக வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

வாழ்க்கையில் என்னிடம் இருந்து என்ன உரிமைகளை எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை இருக்கிறதோ, அதையே உங்களிடம் எதிர்பார்க்க எனக்கும் சம உரிமை உண்டு என்று உறுதி கூறுகிறேன்."


இது அவளுக்கு எவ்வளவு புரிந்தாலும் தமிழில் சொல்ல வரவில்லை. சிலமுறை திரும்பச் சொல்லி முடித்து விட்டாள். அவள் பையனுக்கு மாலையிட்டாள். பின்னால் இருந்து நண்பர்கள் விசிலடித்தார்கள். சிலர் எழுந்து போய் ரோஜாவைப் போட்டார்கள். கை குலுக்க மேடை ஏறுவதா வேண்டாமா என்று தயங்கினார்கள். மணமகன் மோதிரம் மண்டியிட்டு அணிவிக்க வேண்டும் கோரினார்கள். பையனும் மண்டியிட்டான்.


'சுப்பிரமணியன் சங்கரநாராயணன்ஆகிய நான், சோபியா கிரேஸ் ஆகிய உங்களை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்கிறேன். நமது வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உங்களுக்குச் சம உரிமையும், சமமான பொறுப்பும் கொண்ட உற்ற நண்பனாக வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன்'


இப்படி அவனும் தமிழ் தடம் மாறிப் பின் வழிக்கு வந்து சொல்லி முடித்தான்.


அம்மா அவனிடம் 'அந்தத் தாத்தாகிட்ட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ' என்றார்.

பாட்டி 'பண்ணலாமான்னு கேட்டுக்கோ முதல்ல' என்றார். அறிவழகன் 'பரவாயில்ல , பெரியவங்க பண்ணலாம்' என்றார்.

அவனுக்கு அந்த உறுதிமொழி ஒப்பந்தம் பின்வரும் மொழியில் இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.


'நம்ம லைஃப்ல வர்ற கஷ்ட நஷ்டம் எல்லாத்துலயும் உனக்கு என்ன உரிமை இருக்கோ, அதே சம உரிமை எனக்கும் இருக்கு;. ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா உன்னோட லைஃப் முழுக்க நான் கூட இருப்பேன்னு பிராமிஸ் பண்றேன். என்கிட்ட இருந்து நீ என்னவெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ண உனக்கு ரைட்ஸ் இருக்கோ... அதே மாதிரி உன்கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்ண எனக்கும் ஈக்வல் ரைட்ஸ் இருக்குன்னு மாஸா கெத்தா உறுதி தர்றேன்'


அவனுக்கும் அவளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் தூரம் ஒன்றும் இருக்கவில்லை.


மேலும் அங்கே சீர்திருத்த, கல்யாணம் மட்டும் இருக்கவில்லை. வாழ்வில் நிமிர்த்தப் பட நிறைய கோணல்கள் இருந்தன.

இன்னும் ஒரு வகையில் மாற்ற எதுவுமே இருக்கவில்லை. எல்லாமும் தானே மாறிக்கொண்டுதான் இருந்தது. மாற்றத்தை யாரோ நடுவில் பறித்துக் கொண்டு போனது போல் தோன்றியது.


அறிவழகன் மேடையில் இருந்து இறங்கி மலர்விழியை நோக்கி 'அடுத்து நான் எங்க போனும் ...அப்புறம் இந்தப் பேமெண்ட ஜிபே பண்ணிடுங்க.' என்றார். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2