மெட்ரோவின் ஒரு திங்கள் கிழமை காலை
மெட்ரோவின் ஒரு திங்கள் கிழமை காலை
----------------------------------------------------
பருவமழை துவங்கிவிட்டது. மாலை ஐந்து மணியில் இருந்து மேகம் நீர் கட்டிக் காத்துக் கொண்டிருந்தது. துண்டு மேகங்கள் ஒரே பெரிய கருப்புத் திரட்டாக மாற ஓடி உழைத்துக் கொண்டிருந்ததன. இப்பகுதியில் ஓங்கிப் பெய்ய திட்டம் இல்லாமல் துளிகளை மட்டும் சிதற விட்டுக் கொண்டிருந்தது. சாரலில் மனிதத் தலைகளில் குடை முளைத்து விட்டது.
இன்று காலை ஊரே கழுவிப் பளபளத்தது. ஒரு இலையிலும் தூசி இல்லை. கருங்கல் ஜல்லிகள் மழையில் குளித்து மின்னுகின்றன.எதிர் பொட்டலில் போகிக்கு அடுக்கிய செங்கல் , பழமைச் சின்னங்கள் போல், மழையில் ஊறி முனையிழந்து மணலில் பதிந்தும் , பதியாமலும் நிற்கிறது .
இரவு மழை வண்டிகளிலும், கைப்பிடிகளிலும் ஈரத்தை மிச்சம் வைத்துப் போயிருக்கிறது . காலைக் காற்று ஈரம் கொள்ளத் துவங்கியிருக்கிறது.
மெட்ரோவில் ஏறி என்றும் போல் கடைசிப் பெட்டியில் உட்கார்ந்தேன். முதல் ஸ்டேஷன் ஆகையால் இருக்கை நிச்சயம். என்னைப் போல் பழக்கப்படவர்கள் கடைசிப் பெட்டியில் ஏறுவார்கள். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இறங்கியதும் அடுத்த ரயிலுக்கு படி நாலடியில் இருக்கும். இல்லையென்றால், மழைத்தண்ணி போல் மனிதர்கள் ஓடிக் கிழிந்து இறங்குவார்கள். இரண்டு நிமிட மனித வெள்ளம். ஆனால் தினம் தினம் புது வெள்ளம். கரைகள் எப்போதும் அப்படியே. இங்கு நீர் போக்கு கரையைத் தீர்மானிக்காது. கரைக்கு நீர் கட்டுப் பட வேண்டும். இல்லையென்றால் பொங்கி மானுட அலையாகும். ஒவ்வொரு ரயிலும் பெரிய டப்பாவைக் கவிழ்த்து தண்ணீர் கொட்டுவது போல் ஆகும். இல்லை, ஒரு கன்வேயர் பெல்ட்டில் இயந்திரப் பொருள்களாய் இடம் மாறி மற்றொன்றில் புகுவது.
சொல்ல வந்தது தடம் புரண்டு போகிறது, விஷயம் இதுதான்.
எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்தார். முழுக்கை ஃபார்மல் தரிப்பில் இருந்தார். அவரிடம் எல்லாம் கச்சிதமாகத் தோன்றியது. ID கார்ட் கழுத்தில் சுற்றி இறங்கி பைக்குள் அமர்ந்திருந்தது. அதற்கு முன்னால் கைபேசி. அதே வரிசையில் போனை எடுத்து அதே இடத்தில் மீண்டும் வைத்தார். கையில் செய்தித்தாள். ஓசியாக இருக்க வேண்டும். பைகளைப் பரிசோதனை செய்யும் இடத்தில் நியூஸ் பேப்பர் அலமாரி ஒன்று உண்டு. யாரும் எடுக்க மாட்டார்கள். நானும் தொடுவதில்லை. எதற்கு ஓசியில் வினையம்.
செய்தித்தாளை பக்கத்தில் வைத்து விட்டு ஒரு மடக்குத் தண்ணீர் குடித்தார். மிக அழகான பாட்டில். நிமிர்ந்த மயில் போன்று இருந்தது, நீல வண்ணம். கச்சிதமாக அவர் பக்கப் பையில் குடித்து மீண்டும் வைத்தார். எலாஸ்டிக் நெகிழ்ந்து வழிவிட்டு மீண்டும் இறுக்கிப் பிடித்துக் கொண்டது.
ஒரு அழகான கருப்பு பெட்டியை எடுத்தார். டூல் பாக்ஸ் என்று நினைத்தேன். உள்ளங்கை நீளம்.
வெளியில் MONDAY என்று எழுதியிருந்தது. திறந்ததும் மூன்று சிறு அறைகள் இருந்தன. மோதிர அளவே குழி.
ஒன்றில் இருந்த மாத்திரையைப் போட்டு தண்ணீர் குடித்தார். குடுவையை வைத்த இடத்தில் தலையை மூட பெல்ட் இருந்தது. அதைப் போட்டு விழாமல் மூடினார்.
சுருட்டி மடித்த மேகக் கலர் தேங்காய்ப்பூ டவலை வைத்து முகத்தைத் துடைத்தார். வேர்த்துவிட்டதை கவனித்தேன்.அதே போல் சுருட்டி மடித்து உள்ளே வைத்தார். அதற்கென பையில் இடம் இருந்தது.
பிரஷர் மாத்திரையோ என்று எனக்குள் தோன்ற ஆரம்பித்தது. பிரித்து டப்பாவில் வைத்தது இவரா இல்லை மனைவியா என்று கேள்வி எழுந்தது. இதற்கும் நேரம், நினைவு வேண்டுமல்லவா?.
வண்டி நிரம்ப ஆரம்பித்தது. ஒரு ஜோடி தோளில் இணையை தூங்க வைத்தது. ஒரு வயதானவர் அமர்ந்ததும் தூங்கியிருந்தார்.
படிக்கும் பையன் கணிப்பொறியைத் திறந்து ஏதோ தட்டினான்.ஓரிருமுறை பங்குச் சந்தை செயலிக்குள் புகுந்து திரிந்தான். ஓபன் சோர்ஸ் freelancer என்று தெரிந்தது. html நிரலியை அம்புக்குறியை வைத்து மேலும் கீழும் நடந்து பார்த்தான். அவன் திரை ஒரு சதுரப் பூங்கா போல் தோன்றியது.அதுவும் மழையில் நனைந்து எண்களாய், எழுத்தாய் வண்ணப் பூக்கள், செடிகள் எனப் பூத்திருந்தது. அவைகளை கணிதக் குறிகள் வேலிகள் போல் அடைத்தும், வெட்டியும் ஒழுங்கு செய்தன. நடுவில் ஒரு வெற்றிடம் ஏற்படுத்தி இன்னும் செடிகளையும், பூக்களையும் நட்டு வைத்தான். இன்றோர் மழைக்குக் காத்திருப்பான்.
அவருக்கு செய்தித்தாளில் மனம் கூடவில்லை. மூடிவைத்து ஜன்னல் வழியே உலகைப் பார்க்க ஆரம்பித்தார். முகத்தில் ஒரு சிரிப்பை, புன்முறுவலை எதிர்பார்த்தேன்.வரவில்லை. இன்று என்ன காத்திருக்கிறது அவருக்கென்று தெரியவில்லை.
நாளும் நதி போல ஊர்களை விழுங்கி ரயில் போய்க்கொண்டிருந்தது.அலுவலகங்களும் , வீடுகளும் பின்னால் சுழன்று மறைந்தன.
கூட்டமில்லாத ஒரு ஸ்டேஷனில் இறங்கிப் போய் விட்டார்.
எனக்கு இந்த வாரத்தின் முடிவு தொலைவில் தெரிந்தது.

Comments
Post a Comment