Translate

எல்லோரும் இந்நாட்டு...

எல்லோரும் இந்நாட்டு... 
-------------------------------


பலவருடங்கள் முன் படித்த தேசாந்திரி புத்தகத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சிட்டி பஸ் மாறி மாறி சென்னை வரை போய் வந்ததை ஒரு அனுபவமாக எழுதியிருப்பார். இவ்வகைப் பயணம் எனக்கு மிக இஷ்டம். இப்போது என்றாவது தோன்றி கட் ஜர்னீ  செய்வதுண்டு. வேடிக்கை பார்த்தபடி போகலாம். 

மெட்ரோவில் நேற்று ஒரு குடும்பம். குட்டி அக்கா, கைக் குழந்தை தம்பி, அவர் அம்மா. தம்பி விரல் சூப்பி இரு கைகளிலும் வார்னிஷ் பண்ணி வைத்திருந்தார். இன்னும் வாய்க் கூழின் மீதம் வாயில் ஒட்டி இருந்தது. அக்கா அம்மாவிடம் தம்பியை வாங்கி, ரயில் கண்ணாடி பார்க்க திருப்பி நிறுத்தினார்.தம்பி கன்றென பலமுறை அவள் கைமீறிச்  சந்தோஷத்தில் எம்பிக் குதித்தார். நீல வானமும், சுழலும் மரங்களும், உயர்ந்த கட்டிடங்களும் அவரை ஆச்சரியப் பட வைத்தன. அக்கா 'சூடு, சூடு, எட்ல போசுந்தி சூஸ்திவா....சூஊஊஊ அட்ல..எட்ல எட்ல சொப்பு..' என்றார். தம்பி பல  முறை அவர் வாய் பார்த்து முடிவில் 'சூஊஊஊ' என்றார்.

விஷயம் என்னவென்றால் நேற்று சென்னை வரை பேருந்துகளில் போய் திரும்பி வந்தேன். சந்தாபுரா, அத்திப்பள்ளி, ஒசூர், பின்னர் சென்னை, கிடைத்தால் நேர் வண்டி என்று திட்டம். மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு விழா பார்த்துத் திரும்புவது.

சந்தாபுரம் பேருந்தில் ஏறி லாபியில் நின்றேன். பின்னால் ஒரு குடிகாரர் ஏறி விட்டார். குடிகாரர் என்று எழுதும்போது இலக்கணம் வகுக்க வேண்டியிருக்கிறது.ஒரே சொல் இதை விளக்க முடியாது. டிகிரி வித்தியாசம் இருக்கிறது. குடியரசர் என்பதுதான் சரி. எதையும் செய்வதில் உச்சத்தில் இருப்பவர் கிங் இல்லையா? 

அவர் போர்டைப் படித்து ஏறி விட்டார். பேருந்தின் லாபிக்கு மேல் செல்லும் படியை அடைத்து உட்கார்ந்து விட்டார். கண்டக்டர் அடிக்காத குறையாக எழுந்திருக்க வைத்தார். கதவிற்கு அருகில் கம்பியைப் பிடித்தபடி நின்று பார்த்தார். ஆனால் அவர்  உடம்பின் பகுதிகள் தனியாய் இயங்கின. முகத்தை துடைக்கப் போன கை, முகத்தைத் தாண்டி, காற்றில் அளைந்து வெறுமையில் திரும்பியது. மடித்த லுங்கி இலையென ஒரு கணம் உதிர்ந்தது. தானியங்கிக் கதவின் வாசலில் உட்கார்ந்து விட்டார். கண்டக்டர் கைகள் பத்திரம் என்றார். சொற்கள் தலையில் முட்டி விழுந்தன. 

அடுத்த ஸ்டாப்பில் ஊன்றிய கையில் ஆக்ரோஷமான 'கிஸ்' ஒலியுடன் ஹைட்ராலிக் கதவு உரசியது. விடுக்கென்று எடுத்து மூடும் போது மீண்டும் அடி வாங்கியது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் கையைத் தொட்டு, எடுப்பார் என நினைத்தேன். கதவு இடித்தால் மட்டுமே அவர் கைகள் அறிந்தன. தோல் கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. கண்கள் மூடியே இருந்தன.

இரவு மணி பத்து. அத்திப்பள்ளி ஒசூர் மகளிர் விடியல் வண்டி நிறைந்து விட்டது.  வேர்பிடித்த, வேர்ப்   பிடிப்பில்லாத  மரங்கள் என நின்ற கால்கள். பல செருப்பில்லாதவை. ஒன்றில் சிமெண்ட் ஏறி நகங்கள் தடித்திருந்தன. கட்டிட வேலைக் கால்கள்.முன்னிருந்து ஒரு குரல் 'மீனாட்சி டிக்கெட் எடுத்தாச்சு..நீங்க எடுக்காதீங்க. இக்குரல் என்னை எவ்வளவோ காலத்தில் பின் தள்ளியது. நிறைந்த பேருந்துகளில் குடும்பங்கள் டிக்கெட் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு டிக்கெட்  எடுக்கும் காட்சிகள் வந்து போயின. 

போனை ஸ்பீக்கரில் போட்டு பலர் ஸ்க்ரோல் செய்தார்கள். இளையராஜா சிம்பொனி, ஜோசியம், நீட் பிரச்சினைகள். அவர் ஒரு சில நொடிகளில் இத்தனை உணர்வுகளை அனுபவித்துக் கடந்தார். இல்லை மறத்துப் போக பயிற்சி எடுக்கிறாரா? வாழ்க்கை ஒரு திரைப்படம் என்றார்கள். மறுநாள் பேச்சில் மீடியா எழுத்தாளர், வெர்டிகல் பிலிம்ஸ் என்று ஒரு பரிட்சை மீடியாவில் நடப்பதாகச் சொன்னார். ஒரு எபிசோட் ஓரிரு நிமிடங்கள். நான் பார்க்கும் வயர்லெஸ் வேலையில், காலத்தை ஆயிரத்தில் ஒரு பகுதியாக கணக்கிட்டு என்ன நடக்க வேண்டும் என்று நிரல் எழுதுவார்கள். இப்போது இதுவும் மைக்ரோ, நானோ என்று பிளக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பிளத்தல் இன்னும் வேகமாக ஸ்க்ரோல் செய்ய உதவும். ஆனால் ஒரு நாள் இதைக் கிழித்துக் கொண்டு காலம் நம்மை நேர்கண் பார்த்துக் கேள்வி கேட்கும்.

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த...ஓங்கிய குரலில், அவர் வாயில் நெளிந்து, ஓரங்களில் முட்டிச் சிதைந்து அப்பாடல் வெளி வந்தது.  பேருந்தின் இருபது நிமிடங்களில் பல பாடல்கள் பாடினார். அடுத்த குடியரசர். பாடல்களில் இருந்து நாற்பதுக்கு மேலிருக்க வேண்டும். அவரைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கூட்டத்தில் முகம் வாய்க்கவில்லை. முடிவில் ஒருவர் அதட்டி அமற்றி விட்டார். பல , 'நானும் பாத்துக்குட்டே இருக்கேன்' கோபக் குரல்கள் எழுந்ததும் அடங்கி விட்டார். வேறொரு இடத்தில் துரத்திய நாய்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பாடிக்கொண்டே இருந்தார்.

இண்டர் சிட்டி அப்பர் பெர்த் கிடைத்தது. ஒசூரில் டிராபிக். சுற்றி கருந்திரை.மூடு பல்லக்கில் போவது போல் எண்ணிக் கொண்டேன். அப்படித்தான் குலுங்கியது. முந்தைய இரவின் தூக்கக் குறைவு. ஆனால் தூக்கம் வரவில்லை. மேல் பெர்த் பெண்ணுக்கு அப்பா இரவெல்லாம் போனடித்துக் கொண்டே இருந்தார். மகள் தூங்கிவிட்டார். அப்பா தூங்குவதாகத் தெரியவில்லை. ஐந்து மிஸ்ட் காலுக்கு ஒருமுறை எடுத்து திரைவிலக்கி ஊர் பெயர் சொல்லி உறங்கி விடுவார். நான் அடுத்த போனை எதிர்பார்த்து 'உச்' என்று சொல்லக் காத்திருந்தபடி இரவு கழிந்தது.

காலையில் கோயம்பேட்டில் இறங்கியதும் ஊரை அடையாளம் தெரியவில்லை. மனதில் இருந்தது அங்கே காய்கறி மார்கெட் இருந்த காலம். இந்த பஸ் ஸ்டாண்டும் இருக்கவில்லை. மனம் இதை வாங்க மறுத்தது. இப்படி வந்து போகும்போது ரொம்ப மாறிப் போச்சு என்று சொல்லி திரும்ப வேண்டியதுதான். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கால் பட்ட இடமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். யார் கூடுதல் தூக்கம், யார் சராசரித் தூக்கம் என்று சொல்லமுடியவில்லை. கார்பொரேஷன் அம்மா, தலைக்குக் கீழே பெருக்கினாலும் ஒருவர் எழுவதாய் இல்லை. அவருக்கு யார் எப்படி என்று தெரிந்திருக்கிறது.

நகரப் பேருந்துகளில் குடியரசர்கள் இல்லை. ஆறு ரூபாய்க்கும், எட்டு ரூபாய்க்கும் பயணச்சீட்டு எடுத்தது ஆறுதல்.

பிளாட்பாரத்தில் இரண்டு குடியரசர்கள். பேக்கரி திரண்டு விட்டிருந்தது. இவர் கீழ்ப் படியை மறித்துப் படுத்திருந்தார். கடைக்காரர் அப்பாவி. தன் வேலையில் மும்முரமாய் இருந்தார். இல்லை அவர் வழக்கமாய்ப் படுக்கும் இடம் இதுதானோ. இந்த நிலையில் விரிப்பு, தலையணை எதுவும் அவசியமில்லை. விழா முடிந்து மதியம் வண்டி பிடிக்க வரும்போது அதே இடத்தில் இருந்தார். 

கோயம்பேடு எலும்பு முறிவு மருத்துவமனைக்குள் கம்பு ஊன்றி, ஆட்களால் தூக்கப்பட்டு, தாங்கமுடியாத வலியுடன் ஆட்கள் உள்ளும் வெளியும் சென்றபடி இருந்தனர். இரண்டடி தள்ளி நடைபாதையில் இளைஞர் கூட்டம் மர நிழலில், கல்லில் குந்தி குடித்தபடி இருந்தது.

மேலே நடந்து போனதும் இன்னொரு காட்சி. ஒரு அப்பாவும் மகனும் மூடிய கடையில் படியில் அமர்ந்திருக்கிறார்கள். அப்பா குடியரசர். பையன் அப்பாவை அடித்திருக்க வேண்டும். மூஞ்சியெல்லாம் ரத்தக் கீறல்கள். முகத்தில் மட்டும். அடித்து ஓய்ந்து, மன்றாடிப் பேசிக்கொண்டிருந்தார். இது எத்தனாவது முறையோ? என்ன செய்தாரோ? 

சிறு வயதில் ஊர்களில் முட்காட்டில் எவரோ சாராயம் காய்ச்சி போலீசில் பிடித்தார்கள் என்பார்கள். பின்னர் படங்களில் வருவது போல் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் டியூப் கட்டி கடத்தி விற்பார்கள் என்றார்கள். ஊரில் எல்லோருக்கும் தெரிந்த  ஒருவர் வெளியே சொல்லிக் கொள்வதில்லை, குடிக்க மாட்டார். ஆனால் தெரியாமல் கள் விற்கிறார் என்றார்கள். விஷயம் அன்று தினமும் கண்ணில் விழவில்லை.

மிகையைச் சொல்ல தடுக்கி விழுந்தால் என்று எழுதலாம். இதை வேறு எப்படிச் சொல்வது. அரசர்களில் வாரிசு ஆள்கிறது. ஆனால் இந்த இங்கே இது இல்லை என்கிறார்கள். இதுதான் நம்பிக்கை. இல்லையென்றால், எல்லோரும் இந்நாட்டு...

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2