Translate

இயற்கையை அறிதல் - எமர்சன் - 1

இயற்கையை அறிதல்

----------------------------




இது இயற்கையை அறிதல் என்ற எமர்சனின் ஏழு கட்டுரைகளை அடைப்படையாகக் கொண்டது. பல முறை வாசித்த பின், சமீபத்தில் புரிந்தது என எண்ணினேன். பின்னர் புரிதலுக்காகத் தமிழில் மொழிபெயர்த்தேன். வரிக்கு வரி இல்லாமல் , நிறையவும் குறுக்காமல், புரியும் வகையில் எழுதப்பட்டது.

[அடைப்புக் குறிக்குள் வருபவை நான் எழுதியவை, எமர்சன் மேல் பழி சேராது ]

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு, கலை என்றால் என்ன, படைத்தல் என்றால் என்ன, மொழி என்பது என்ன போன்ற அடிப்படைக் கேள்விகளை கேட்டு விடை சொல்கிறது. இயற்கை மனிதனை மேம்படுத்தவே இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறது. அதுவே நம் இருப்பின் குறிக்கோள் என்று எமர்சன் சொல்கிறார். அவர் சொல்லும் இயற்கை என்பது வேதாந்த மரபின் பிரம்மம் எனும் சொல்லாகவே எனக்குப் பட்டது.


ஒவ்வொரு நாளும் நம் செவியில் விழும் சொல்லும் பொருளும் இயற்கையில் இருந்தே எழுகிறது. விசும்பு தோய் பசுங்களை, யானை வளைத்த மூங்கில் அது விடுகையில் விசும்பென எழுந்தது. இது குறுந்தொகை வரி.

வானும் மண்ணும் ஒட்டிக்கொண்டதே; வானின் நீலம் அதில் ஒட்டிக் கொண்டதே. இது இன்று காலை ஒலித்த திரைப் பாடல். இதன் ஒவ்வொரு சொல்லும் இயற்கையின் பொருளைப் குறிப்பது. இயற்கையும், மனமும் ஒன்றில் ஒன்று கண்ணாடியென பிரதிபலிப்பதால் ஏற்படுவது. இம்மொழி கவிஞனுக்கும், எழுதுபவனுக்கும், ஓவியனுக்கும் ஏன் வசப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுகிறது.


இதை ஜெயமோகன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். எமர்சனின் மூலநூல் 1836-ல் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 33.


அறிமுகம் :


தற்போதைய காலம் பின்னோக்கிப் பார்ப்பது. மூத்தோர்களின் கல்லறைகளில் இருந்து மேலெழுவது.

அதுதான் சரித்திரமும், தன் வரலாறும் , விமர்சனங்களையும் எழுதுகிறது.

முந்தைய தலைமுறை கடவுளையும், இயற்கையையும் நேர்படப் பார்த்தது.

அதைப்போல நமக்கும் ஏன் இயற்கையுடன் சுயமான தொடர்பும், சுய சிந்தனையும் இருக்கக் கூடாது?

நாமே உள்ளுணர்வால் அடைந்த கவிதையும் , தத்துவமும் ஏன் இருக்கக் கூடாது?

இது ஏன் ஒரு புதிய மதத்திற்கு நம்மை இட்டுச் செல்லக்கூடாது?

இயற்கையின் பருவங்கள் நம்மைச் சுற்றியும் , நமக்குள்ளும் நதியெனச் செல்கையில், அதுவே கரம் பிடித்து இழுத்து, நம்மைச் செய் என்னும் போது, நாம் ஏன் பழைய எலும்புக் குவியல்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் வாழும் இக்காலத்திற்கு புதிய ஆடை அணிவிக்கக் கூடாது?


நாம் கேட்கப் போகும் இக்கேள்விகளுக்கு இயற்கையில் விடை இருக்கிறது. நம்முள் எழும் ஆர்வமூட்டும் வினாக்களுக்கு படைப்பில் விடை இருக்கிறது என்று நிச்சயம் நம்ப வேண்டும்.

சொல்லப்போனால் மனிதனின் கேள்விகளுக்கு மனிதனிடமே குறியீடுகளாக விடை இருக்கிறது. இதை வைத்தே தான் வாழ்க்கையை மனிதன் நடிக்கிறான், முடிவில் உண்மை என்றும் சொல்கிறான் . இதைப் போல இயற்கையும் அதன் உள்ளீட்டை நமக்கு தெரிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆகையால், இப்போது இயற்கையை என்னவென்று கேட்போம்.

அறிவியலின் குறிக்கோள் இயற்கை முழுவதையும் விளக்கும் ஒரே கோட்பாடு. நாம் இன்னும் இதன் அருகில் இல்லை. சுற்றிப் பூசல்கள் தான் கூடி இருக்கின்றன. முழு உண்மை என்பது எவ்வாறு பயன் படுகிறது என்பதை வைத்தே இருக்க முடியும். ஆனால், விளக்க முடியாத விஷயங்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றன; மொழி, தூக்கம், கிறுக்காதல், கனவு, போன்றவை.


தத்துவார்த்தமாக , உலகம் இரண்டு விஷயங்களால் ஆனது: இயற்கை , ஆத்மா. மனிதனால் மாற்ற முடியாதது எதுவும் இயற்கையில் அடங்கும். வான் , காற்று, நதி, இலை இவைகள் போல. கலை என்பது மனிதனின் விருப்பம் பொருள்களில் செயல்படுவது ஆகும். இதுவும் இயற்கையிலேயே நடக்கிறது. இயற்கையை பொறுத்த அளவில் கலை மிகச் சிறியது.


(1)


ஏகாந்தத்தில் திளைக்க மனிதன் கூட்டத்தில் இருந்து விடுபடுவதைப் போல், தன்னில் இருந்தும் விடுபட வேண்டும்.இப்போது தனியாக எழுதிக் கொண்டிருக்கும் போது, நான் உண்மையில் தனிமையில் இல்லை. தனிமையில் இருக்கும் ஒருவர் , வானின் நட்சத்திரங்களை மட்டும் பார்க்கட்டும். எங்கோ சுவர்க்கத்தில் இருந்து வரும் அக்கதிர்கள் அல்லவா அவன் மேல் விழுவது? மனிதன் உன்னதத்தை அனுபவிக்கவே நட்சத்திரங்கள் கண்ணுக்கு எப்போதும் தெரியுமாறு படைக்கப் பட்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமானால், மனிதன் அதை எப்படிக் கொண்டாடியிருப்பான் ? அந்நாளில் கடவுளைக் கண்டேன் என்று என்னவெல்லாம் எழுதியிருப்பான்? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த அழகின் தூதர்கள் வருகிறார்கள், பிரபஞ்சத்தை சிரித்தபடி ஒளியில் நனைக்கிறார்கள்.


நட்சத்திரங்கள் தொலைவில் அணுக முடியாமல் இருக்கின்றன, அதனால் இவ்வளவேனும் மதிக்கப் படுகின்றன. ஆனால் நட்சத்திரங்களைப் போல இயற்கையின் எல்லாப் படைப்புகளும் நம்மிடம் உரையாடுகின்றன. நம் மனது திறந்திருந்தால் மட்டும் . இயற்கை எப்போதும் கஞ்சத்தனம் செய்வதில்லை. இன்னொன்றும் உண்டு. அது இயற்கையை முழுதும் அறிந்த முழு ஞானி ஒருவன் இருக்க முடியாது. ஞானிக்கும், குழந்தைக்கும் ஒன்றே அது. இயற்கை ஒருபோதும் நம் கையில் விளையாட்டுப் பொருள் அல்ல.


நாம் இயற்கை என்று சொல்லும் போது கவிதை சொல்லும் இயற்கையைக் குறிக்கிறோம். பொருள்கள் இணைந்து ஏற்படும் ஒற்றைப் பார்வையைச் சொல்கிறோம். மரவெட்டியின் மரத்திற்கும், கவிஞனின் மரத்திற்கும் இடையில் உள்ள இயற்கை. இன்று காலையில் இருபது முப்பது கழனிகளைக் கடந்து வந்தேன். மில்லருடையது இது , மேனிங் சொத்து இது. ஆனால் இந்த நிலக்காட்சி யாருக்கும் சொந்தம் இல்லை. தொடுவானில் தெரியும் சொத்து யாருக்கும் இல்லாதது. இவையெல்லாம் ஒன்றெனப் பார்க்கும் கவிஞனின் கண்ணுக்குள் மட்டுமே விழுவது. இதுதான் இக்கழனியின் ஆகச் சிறந்த சொத்து, ஆனால் என்றும் எழுதி வாங்க முடியாதது.


உண்மையில் எல்லோரும் இயற்கையைப் பார்ப்பதில்லை. நம்மில் பலர் சூரியனையே பார்ப்பதில்லை. இதுதான் மேற்பார்வை என்பது. இயற்கையை நேசிப்பவன், அகமும், புறமும் புலன்கள் ஒன்றாய் இணைந்தவன். குழந்தை உள்ளம் கொண்டவன். விண்ணுடன் , பூமியுடன் பேசுவது அவனுக்கு உணவு உண்பதைப் போல அன்றாடம் செய்வது. என்ன கவலை உள்ளே இருந்தாலும் , இயற்கையைப் பார்க்கும் போது இனம் புரியாத் , ஆதிவாசியினுள் எழும் சந்தோஷம் அவனுள் எழுகிறது. இயற்கையும் அவனை என்னவன் என்கிறது, என் மடியில் அவனுக்குத் துயரில்லை என்கிறது. 


ஒவ்வொரு பருவகாலமும் அதற்கென இன்பம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மணியும், பகலும், இரவும், மனதைப் பொறுத்து முடிவில்லாமல் இன்பச் சுரங்கமாய் இருக்க முடியும். கடவுளின் இத்தோட்டத்தில் என்றுமே திருவிழா. காட்டிற்குள் அவமானமும், துயரமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இயற்கையால் சரி செய்ய முடியாத் துயர் ஏதும் இல்லை. காற்று குளிப்பாட்டும் இப்பேருவகையில் , விண்ணில் எழ நான் அத்துவான வெளியில் நிற்கும் எனது அகந்தை எங்கோ காணாமல் போகிறது. நான் ஒன்றும் இல்லாத விழி மட்டுமென ஆகிறேன். நான் வேறொன்றும் இல்லை, விழி மட்டும் . பேரிருப்பின் ஆற்றல் என்னுள் புகுந்து வெளியேறுகிறது. நானும் ஒரு துளிக் கடவுள். நான் தனியே இல்லை. அது என்னைப் பார்த்து ஆம் என்கிறது, நானும் தலையாட்டுகிறேன். காற்றில் கிளை அசைவது எனக்கு தெரியாத ஆச்சரியமாயும் , தெரிந்தும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது.


ஆனால், இந்த இயற்கை இன்பத்தின் சாவி மனித மனதிற்குள் இருக்கிறது. இயற்கையில் இல்லை. இரண்டும் லயத்தில் வரும் புள்ளியில் இருக்கிறது. இயற்கை என்றும் விடுப்பில் போவதில்லை. நேற்று சந்தோஷம் கொடுத்த ஒரே காட்சி இன்று துயரம் அளிக்கலாம். மனதின் நிறமே இயற்கையின் நிறம். உழைப்பால் வாடும் ஒருவனுக்கு , மூச்சும் தீயெனச் சுடலாம்.


(2) இயற்கை ஒரு பயன்படும் பொருள்


இயற்கையின் பயன்பாட்டை கீழ் வரும் நான்கு வகையில் அடைக்கலாம். 1. பொருள் 2. அழகு 3. மொழி 4. ஒழுங்கு


இயற்கையின் பயன் என்பது, இயற்கையிலிருந்து நாம் பெறும் எல்லாமும் அடங்கியது.இதை உடனடிப் பயன், அண்மைக்காலப் பயன், மற்றும் நீண்டகால மனதின் பயன் என்று அடுக்கலாம். இது இயற்கையில் நாம் பெறும் குறைந்த பட்ச பலன் இதுவே ஆனாலும், நாம் எல்லோரும் விழைவது இதையே. 


பால் வெளியில் மிதந்து கொண்டிருக்கும் இந்தப் பச்சைப் பந்து நிதானமாய், நீண்ட காலம் வாழ, இன்பத்தில் திளைக்க, என்ன வசதியெல்லாம் செய்யப் பட்டிருக்கிறது. இதை எண்ணாமல் மனிதன் குழந்தைப் பிடிவாதத்துடன் கவலை கொள்வது ஏன்? 


எந்த தேவதை இந்த பிரபஞ்சம் என்னும் அணிகலனையும் , அதன் மேல் இந்தக் காற்றுக் கடலையும், கீழே நீர்க் கடலையும், இடையில் இப்பூமிப் பந்தையும் படைத்தது? ஒளியுறும் கிரகங்களையும், மேகம் என்ற கூடாரத்தையும், அதில் பருவங்கள் என்னும் வண்ணப் பூச்சையும் வருடத்தில் நான்கு முறை செய்தது யார்? நீரும் , நெருப்பும் , கல்லும், விதையும், விலங்கும் அவனுக்குக் கை கட்டி சேவை புரிகின்றன. இந்தக் களம் அவன் காலுக்குக் கீழ், படுக்கையில், விளையாடுகையில், தோட்டத்தில் எங்கும் பரவி இருக்கிறது.


'கண்ணுக்குத் தெரிவதை விட

மனிதனுக்கு நிறைய சேவகர்கள் இருக்கிறார்கள்'


இயற்கையின் அமைச்சரவையில் , அதுவே மூலப்பொருளும், உழைப்பும் , விழைவும். மேலாக அதன் செய்முறையும் அதுவே. அதன் எல்லாக் கூறுகளும் மனிதனின் லாபத்திற்கென இயங்குகின்றன. காற்று விதைக்கிறது. கதிரவன் கடலை வற்றுகிறது. காற்று ஆவியை மேலெழுப்புகிறது. இன்னொரு பக்கம் நீராவி குளிர்ந்து மழையாகிறது. மழை செடியாகிறது. செடி விலங்காகிறது. பின்னர் இன்னொரு வளையம். இவை எல்லாமும் மனிதனுக்கு தொண்டு செய்ய மட்டுமே.


பயன்படும் கலைகள் இயற்கையின் மேல் கட்டப்பட்டவை ஆகும். நீராவி இயந்திரமும், கப்பலும், ரயிலும், தண்டவாளமும்,விமானமும் இயற்கையின் மேல் தான் அமைத்திருக்கின்றன. இவை எல்லாம் கூட்டிப் பார்த்தாலும் நோவா காலம் தொட்டு இன்று நெப்போலியன் வரை எப்படியெல்லாம் உலகம் மாறியிருக்கிறது.


இயற்கையின் பயனைப் பட்டியலிட்டால் முடிவிருக்காது. உங்கள் யோசனைக்கே விடுகிறேன்.


முடிவாக, மனிதனுக்கு இயற்கை உணவிடுகிறது, சாப்பிட அல்ல, அவன் வேலை பார்ப்பான் என்ற குறிக்கோளில்.



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2