Translate

இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி

இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி

------------------------------------------------------


இயற்கை மனிதனுக்கு அளிக்கும் மூன்றாவது உபயோகம் மொழி.


1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் குறியீடுகள்

2. ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் மனதில் நிகழும் ஆன்மீக நிகழ்வின் குறியீடு

3. இயற்கை ஆன்மாவின் குறியீடு



1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் நேரடிக் குறியீடுகள்


இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தை அறிவது , அதன் பின்னிருந்து இயக்கும் அதீத ஒன்றையும் அறிய உதவும். படைப்பில் இருக்கும் பொருள்கள், மொழி வழியாக , நம் உள்ளிருக்கும் படைப்பாக உருமாறுகின்றன. ஒரு பொருளின் தோற்றத்தில் இருந்தே நாம் அறிவையும், ஒழுங்கையும் குறிக்கும் சொற்களைப் பெறுகிறோம்.


சரி என்பது நேராக இருப்பது. தவறு என்பது கோணலானது. ஆத்மா என்பது காற்று. மீறல் என்பது ஒரு கோட்டைத் தாண்டுவது. இதயம் என்றால் உணர்ச்சி. தலை சிந்தனையைக் குறிக்கும். சிந்தனை , உணர்ச்சி போன்ற சொற்கள் பொருளைக் குறிப்பதில் இருந்து , மனதைக் குறிப்பதாக ஆன்மீக உலகிற்கு வந்தன. குழந்தைகள் இதையே செய்கின்றன. குழந்தைகளும், பழங்குடியினரும் பெயர்ச்சொற்களையே செயலைக் குறிக்கவும், மனதைக் குறிக்கவும் பயன் படுத்துகிறார்கள்.


2. இயற்கை மனதின் குறியீடு


சொற்கள் மட்டும் இயற்கையின் குறியீடுகள் அல்ல. உலகின் பொருள்களும் குறியீடுகளே. இயற்கையின் ஒவ்வொரு தோற்றமும் நம்முள் ஒரு மனநிலையைக் குறிக்கும் . அந்த மனநிலை இயற்கையின் தோற்றத்தை சரியாய் விளக்கும் போது தெளிவு பெறும்.


கோபமுள்ளவன் சிங்கம். தந்திரமானவன் நரி. உறுதியானவன் பாறை. அறிவாளி விளக்கு.


ஆட்டுக்குட்டி அப்பாவி. பாம்பு வஞ்சகமானது. மலர்கள் பாசத்தைக் குறிக்கும். ஒளி என்பது அறிவு. இருட்டு அறியாமை. வெப்பம் அன்பைக் குறிக்கும்.


பின்னால் தெரியும் தூரம் நினைவைக் குறிக்கும். முன்னால் இருக்கும் தொலைவு நம்பிக்கையைக் குறிக்கும்.


நதியைப் பார்க்கும் ஒருவர், பொருள்கள் இடையறாது மாறிக் கொண்டிருப்பதை எண்ணாமல் முடியுமா? குளத்தில் கல்லெறிந்தால் தோன்றும் அலை வட்டங்கள், ஒரு செயலின் விளைவைச் சுட்டுவது போல் உள்ளன.


மனிதன் எல்லோருக்கும் பொதுவான ஆன்மாவை தன்னுள் உணர்கிறான். அந்த ஆன்மாவில் நீதியும், உண்மையும், அன்பும், சுதந்திரமும் விண்மீன்களைப் போல உதித்து ஒளிர்கின்றன. அந்த பொதுவான ஆன்மாவையே அவன் அறிவு (Reason) என்று அழைக்கிறான். அது எனதோ உனதோ அல்ல; நாம் அதனுடையவர்கள்.


என்றும் அமைதியாக விரிந்திருக்கும் நீல வானம், அறிவின் படிமம். அறிவின் கோணத்தில் நாம் Reason என்று அழைப்பதை, இயற்கையுடன் தொடர்புபடுத்தும்போது Spirit பேருயிர் (பிரம்மம்/ மகா தர்மம்/லீலை/பிரகிருதி) என்று அழைக்கிறோம்.


பேருயிரே படைப்பாளர். பேருயிரே உயிர் உள்ளது. ஆகவே உலகின் எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் மனிதன் அதை தனது மொழியில் “தந்தை” என உருவகப்படுத்தியிருக்கிறான்.


இந்த உருவகங்கள் சீரற்றவையோ தற்செயலானவையோ கவிஞர்களின் கனவுகளோ அல்ல; மனிதன் இயல்பாகவே ஒப்புமைகளைத் தேடுபவன். மனிதன் உயிர்களின் மையத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவனை நோக்கி ஒரு உறவுக் கதிர் பாய்கிறது. மனிதனைப் பொருட்களின்றி புரிந்துகொள்ள முடியாது; பொருட்களையும் மனிதனைத் தவிர்த்துப் புரிந்துகொள்ள முடியாது.


இயற்கை வரலாற்றின் உண்மைகள் தனித்தனியாக எடுத்துக்கொண்டால் உயிரற்ற பட்டியல்களாகத் தோன்றும். ஆனால் அவற்றை மனித அனுபவங்களோடு இணைத்துவிட்டால் அவை உயிர்பெறுகின்றன.


ஒரு விதை மனித வாழ்க்கையின் எத்தனை ஆழமான ஒப்புமைகளுக்கு ஆதாரமாக உள்ளது! இதையே தூதர் பவுல் சடலத்தை விதை என்கிறார்.


பூமி தன்னைச் சுற்றியும், சூரியனைச் சுற்றியும் சுழல்வதால் நாளும் ஆண்டும் உருவாகின்றன. இவை இயற்பியல் விதிகள் மட்டுமே என்று தோன்றலாம். ஆனால் மனித வாழ்க்கைக்கும் பருவகாலங்களுக்கும் இடையில் ஏதோ ஒரு ஆழமான ஒப்புமை இல்லையா? அந்த ஒப்புமையால் பருவகாலங்கள் கூடுதல் பெருமையையும் உணர்ச்சி ஆழத்தையும் பெறவில்லையா?


எறும்பின் இயல்பூக்கங்கள், எறும்பின் பார்வையில் பெரிதில்லை. எறும்பிலிருந்து மனிதனை நோக்கி ஒரு ஒளிக்கீற்று நீள்கிறது என்பதை நாம் உணரும் கணத்தில், அந்தச் சிறிய உழைப்பாளி நமக்கு ஆசிரியனாகத் தெரிகிறது. சிறிய உடலுக்குள் பேராற்றல் கொண்ட இதயம் ஒன்று இருப்பதைக் காண்கிறோம். அப்போது அதன் பழக்கவழக்கங்களும் — அது ஒருபோதும் உறங்குவதில்லை என்ற பண்பும் கூட — உயர்ந்த அர்த்தத்தையும் மகத்துவத்தையும் பெறுகின்றன.


பொருட்களுக்கும் மனித சிந்தனைக்கும் இடையே இவ்வளவு அடிப்படையான ஒற்றுமை இருப்பதால்தான், பழங்குடியினர் படிமங்களின் வழியாகவே உரையாடினர். நாம் வரலாற்றில் பின்னோக்கிச் செல்லச் செல்ல, மொழி மேலும் மேலும் ஓவியத் தன்மை பெறுகிறது; அதன் குழந்தைப் பருவத்தை அடையும்போது அது முழுவதும் கவிதையாகவே மாறிவிடுகிறது. அனைத்து ஆன்மீக உண்மைகளும் இயற்கைச் சின்னங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

இதே சின்னங்களே உலகின் எல்லா மொழிகளின் ஆரம்பக் கூறுகளாக அமைந்துள்ளன.


மொழி இயற்கையை நேரடியாகச் சார்ந்திருப்பதும் , வெளிப்புற நிகழ்வுகளை மனித வாழ்வின் அனுபவங்களுக்கான உருவகங்களாக மாற்றுவதும் நம்மை நேரடியாகத் தாக்குகிறது. அதனால்தான் உறுதியான இயல்புடைய ஒரு விவசாயியின் அல்லது கிராமத்தில் வாழும் மனிதனின் உரையாடலில் ஒரு தனித்துவமான சுவையும் உயிர்ப்பும் இருக்கிறது; அதை எல்லோரும் ரசிக்கிறார்கள்.


ஒரு மனிதன் தனது சிந்தனையை அதற்கேற்ற சரியான உருவகத்துடன் இணைத்து வெளிப்படுத்தும் திறன், அவனுடைய குணத்தின் எளிமையைப் பொறுத்தது. அதாவது, அவன் உண்மையை நேசிப்பதையும், அதை எந்தச் சிதைவும் இன்றி பிறருக்குப் பகிர விரும்புவதையும் பொறுத்தது.


மனிதன் சீரழிவதன் பின் மொழியும் சீரழிகிறது. குணத்தின் எளிமையும் சிந்தனைகளின் ஆட்சியும், செல்வம், இன்பம், அதிகாரம், புகழ் போன்ற இரண்டாம் நிலை ஆசைகளால் சிதைக்கப்படும்போது, நேர்மையும் உண்மையும் விலகி, போலித்தனமும் பொய்மையும் அவற்றின் இடத்தைப் பிடிக்கின்றன. அப்போது மனித விருப்பங்களை மொழிபெயர்க்கும் இயற்கையின் ஆற்றல் இல்லாமல் போகிறது. புதிய உருவகங்கள் பிறப்பதில்லை. பழைய சொற்கள் அவை குறிக்காதவற்றைக் குறிக்கத் திணிக்கப்படுகின்றன. களஞ்சியத்தில் தங்க இருப்பு இல்லாமல் காகிதப் பணத்தைப் பயன்படுத்துவது போல ஆகிவிடுகிறது.


காலப்போக்கில் அந்த மோசடி வெளிப்படுகிறது. பின்னர் சொற்கள் உடலென எஞ்சி உயிரில்லாமல் போகின்றன.


நாகரிகம் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிறிது காலம் தாமும் உண்மையைக் காண்கிறோம், பேசுகிறோம் என்று நம்புகிறார்கள்; மற்றவர்களையும் நம்ப வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த சிந்தனைகளுக்கு இயற்கையின் உடையை அணிவிக்கத் தெரியாதவர்கள். அவர்கள் அறியாமலேயே தங்கள் நாட்டின் முதன்மை எழுத்தாளர்கள் படைத்த மொழியையே உண்ணிப் பிழைக்கிறார்கள் — அதாவது இயற்கையுடன் நேரடியாக இணைந்திருந்த அந்தப் படைப்பாளர்களின் மொழியை.


ஆனால் ஞானிகள் இந்த அழுகிய சொற்பயன்பாட்டைத் துளைத்துச் சென்று, சொற்களை மீண்டும் பார்க்கக்கூடிய பொருட்களோடு இணைத்துவிடுகிறார்கள். அதனால் உருவக வளமிக்க மொழி உண்டாகிறது. அவன் மொழி உண்மையுடனும் கடவுளுடனும் உறவு கொண்டவன் என்பதற்கான சாட்சியாகிறது.

நமது பேச்சு பழக்கமான உண்மைகளின் தரையைத் தாண்டி உயரும்போது, உணர்ச்சியால் தீப்பற்றும்போது, சிந்தனையால் மேன்மையடையும் போது, அது தானாகவே உருவகங்களின் ஆடை அணிகிறது.


ஒருவன் உண்மையான ஈடுபாட்டுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது சிந்தனைச் செயல்முறைகளை கவனித்தால், ஒவ்வொரு எண்ணத்துடனும் சேர்ந்து ஒரு பொருள்மயமான காட்சி மனதில் தோன்றுவதை காண்பான். அது சில நேரங்களில் மங்கலாகவும், சில நேரங்களில் ஒளிர்வதாகவும் இருக்கும். அந்தக் காட்சியே அந்த எண்ணத்திற்கான ஆடையாகிறது.


அதனால்தான் சிறந்த எழுத்தும் ஒளிமிகு சொற்பொழிவும் இடையறாத படிமங்களாக இருக்கின்றன.


இந்த உருவகங்கள் செயற்கையாக உருவாக்கப்படுவதில்லை. அவை தன்னிச்சையாக எழுகின்றன. அவை அனுபவமும் மனத்தின் இயக்கமும் கலப்பதன் விளைவாகும். அதுதான் உண்மையான படைப்பு. ஏற்கனவே தான் உருவாக்கிய மனிதன் என்ற கருவி வழியாக, இறைவன் தொடர்ந்து செயல்படுவதன் வெளிப்பாடே அது.


காடுகளின் மத்தியில் வளர்ந்த கவிஞனோ, பேச்சாளனோ, எந்தத் திட்டமுமின்றி, எந்தச் சிறப்பான கவனமுமின்றி, இயற்கையின் அழகான மற்றும் மனதை அமைதிப்படுத்தும் மாற்றங்களால் தனது புலன்களைப் வளர்த்துக் கொண்டிருப்பான். நகரத்தில் வாழ நேர்ந்தாலும், பழைய இயற்கைப் பாடங்களை அவன் முற்றிலும் இழந்துவிட மாட்டான்.


பல ஆண்டுகள் கழித்து, கலக்கமும் அச்சமும் நிறைந்த காலங்களில், அல்லது புரட்சியின் தருணங்களில், அந்தக் கம்பீரமான இயற்கைக் காட்சிகள் மீண்டும் அவனது நினைவில் காலைப் பொழுதின் பசுமையான ஒளியுடன் தோன்றும். அக்கால நிகழ்வுகள் அவனுள் எழுப்பும் சிந்தனைகளுக்குப் பொருத்தமான உருவகங்களாகவும் சொற்களாகவும் அவை மாறிவிடும்.


ஒரு உயர்ந்த உணர்வு அவனை அழைக்கும் போது, அவன் சிறுவயதில் கண்டும் கேட்டும் ரசித்ததுபோல மீண்டும் காடுகள் அசையும்; பைன் மரங்கள் முணுமுணுக்கும்; ஆறு ஒளிர்ந்தபடி ஓடும்; மலைச்சரிவுகளில் மாடுகள் கத்தும். அந்த இயற்கை வடிவங்களோடு சேர்ந்து, மனங்களை வசப்படுத்தும் மந்திரமும், செல்வாக்கின் திறவுகோல்களும் அவன் கைகளில் வந்து சேருகின்றன.


3. இவ்வாறு குறிப்பிட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதில் இயற்கைப் பொருட்கள் நமக்கு உதவுகின்றன. ஆனால் இவ்வளவு சிறிய தகவல்களைத் தெரிவிப்பதற்காக இத்தகைய மகத்தான மொழி தேவையா? மனிதனின் அன்றாடப் பேச்சுக்குத் தேவையான அகராதியையும் இலக்கணத்தையும் வழங்குவதற்காகவே இத்தகைய உயர்ந்த உயிரினங்களும், எண்ணற்ற வடிவங்களும், வானில் பரந்து கிடக்கும் கோள்களின் பெரும் கூட்டமும் படைக்கப்பட்டனவா?


நாம் இந்த மகத்தான குறியீட்டு மொழியை நமது அன்றாடச் சமையல் , வீட்டு வேலைகளை எளிதாக்குவதற்காக மட்டுமா? இல்லை, அதன் உண்மையான பயன்பாட்டை இன்னும் நாம் அடையவில்லை. எரிமலையின் சாம்பலை முட்டை சுடுவதற்காகப் பயன்படுத்தும் பயணிகளைப் போன்றவர்களாக நாம் இருக்கிறோம்.


நாம் சொல்ல விரும்புவதை அலங்கரிக்க இயற்கை எப்போதும் தயாராக இருப்பதைப் பார்க்கும்போது, இந்த இயற்கை வடிவங்களுக்கே தனித்துவமான பொருள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மலைகள், அலைகள், வானங்கள் ஆகியவற்றிற்கு, நம் சிந்தனைகளின் சின்னங்களாக நாம் பயன்படுத்தும்போது வழங்கும் பொருளைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லையா?


உலகமே ஒரு சின்னம்.


மொழியின் எல்லா கூறுகளும் உருவகங்களாக உள்ளன; ஏனெனில் இயற்கை முழுவதும் மனித மனத்தின் உருவகமாக உள்ளது. ஒழுக்க உலகின் விதிகள், பொருளுலகின் விதிகளுடன் கண்ணாடியில் முகம் பிரதிபலிப்பதைப் போல ஒத்திருக்கின்றன.


"காணக்கூடிய உலகமும் அதன் பகுதிகளுக்கிடையேயான உறவுகளும், காணமுடியாத உலகின் கடிகார முகப்பாகும்."

இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகள் ஒழுக்க விதிகளை மொழிபெயர்க்கின்றன.

உதாரணமாக நியூட்டனின் விதிகள் :


"முழுமை அதன் பகுதியைவிட பெரியது."

"எதிர்வினை, வினைக்குச் சமமானது."

"சிறிய எடையைக்கூட காலத்தின் உதவியால் மிகப் பெரிய எடையைத் தூக்க பயன்படுத்தலாம்."

இவை போன்ற பல கூற்றுகள் இயற்பியல் பொருளையும் ஒழுக்கப் பொருளையும் ஒருசேரக் கொண்டுள்ளன. இக்கூற்றுகள் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்குள் மட்டுமே அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவ்வார்த்தைகளை மனித வாழ்க்கைக்குப் பொருத்தும்போது மிகவும் விரிவான அர்த்தத்தைப் பெறுகின்றன.

அதேபோல், வரலாற்றில் நினைவில் நிற்கும் சொற்களும், மக்களின் பழமொழிகளும், பொதுவாக ஒரு இயற்கை நிகழ்வை ஒழுக்க உண்மையின் உருவகமாகத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டவையாகும்.

உதாரணமாக:


'உருளும் கல்லில் எடை ஏறாது'.

'கையில் உள்ள காய், மரத்தில் உள்ள பழத்தை விட மேல்'.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'

'ஒட்டகத்தின் முதுகை உடைத்தது கடைசி பாரமே.'

நீண்ட ஆயுள் வாழும் மரங்கள் முதலில் வேர்களை வளர்க்கின்றன.'


இவற்றின் நேரடியான பொருள் சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றின் உருவகப் பொருளே அவற்றை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டச் செய்கிறது.

பழமொழிகளுக்குப் பொருந்துவது போலவே, நீதிக்கதைகள், உவமைகள், உருவகக் கதைகள் அனைத்திற்கும் இதுவே உண்மையாகும்.

மனம் மற்றும் பொருள் இடையேயான இந்த உறவு ஏதோ ஒரு கவிஞனின் கற்பனை அல்ல. அது இறைவனின் சித்தத்தில் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் அது எல்லா மனிதர்களாலும் அறியப்படக்கூடியது. சிலருக்குத் அது வெளிப்படுகிறது; சிலருக்குத் வெளிப்படுவதில்லை.

சில தருணங்களில் நாம் இந்த அதிசயத்தை ஆழ்ந்து சிந்திக்கும்போது, ஞானி தன்னைத் தானே கேட்கிறான்:


"இவை உண்மையாக இருக்க முடியுமா?

மேகம்போல் நம்மைக் கடந்து சென்று, நம்மை ஆட்கொண்டு விடுகின்றன;

ஆனால் நாம் அவற்றைக் கண்டு வியக்கவே இல்லையா?"


ஏனெனில் அத்தகைய தருணங்களில் பிரபஞ்சம் வெளிப்படையானதாக மாறுகிறது; அதன் வழியாக அதைவிட உயர்ந்த சட்டங்களின் ஒளி பிரகாசிக்கிறது.

இந்தப் புதிர்தான் உலகம் தோன்றிய காலத்திலிருந்து எல்லா மேதைகளின் வியப்பையும் ஆராய்ச்சியையும் தூண்டி வந்துள்ளது. எகிப்தியர்களும் பிராமணர்களும் வாழ்ந்த காலத்திலிருந்து, Pythagoras, Plato, Francis Bacon, Gottfried Wilhelm Leibniz, Emanuel Swedenborg வரை இதையே ஆராய்ந்து வந்துள்ளனர்.


சாலையோரத்தில் ஸ்பிங்ஸ் அமர்ந்திருக்கிறாள். யுகம் யுகமாக ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவளருகே வந்து அவளுடைய புதிரை விடுவிக்க முயல்கிறான்.


ஆன்மா தன்னைப் பொருளாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு அவசியம் இருப்பதுபோல் தெரிகிறது. பகலும் இரவும், நதியும் புயலும், விலங்கும் பறவையும், அமிலமும் காரமும்—இவை அனைத்தும் முதலில் இறைவனின் மனதில் எண்ணங்களாகவே இருந்தன. ஆன்ம உலகில் முன்பே இருந்த உணர்வுகளின் விளைவாக அவை இவ்வாறு தோன்றியுள்ளன.


இயற்கையுடன் ஒத்திசைவாக வாழும் வாழ்க்கை, உண்மையின் மீதான அன்பு, நற்பண்புகளின் மீதான பற்றுதல் ஆகியவை நமது பார்வையைத் தூய்மைப்படுத்தி, இயற்கையின் ரகசியத்தைப் புரிந்துகொள்ள உதவும்.


மெல்ல மெல்ல இயற்கையின் நிலையான பொருட்களின் ஆதிமூல அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ளலாம். அப்போது உலகம் நமக்குத் திறந்த புத்தகமாக மாறும். ஒவ்வொரு வடிவமும் அதன் காணாத உயிரையும் இறுதி நோக்கத்தையும் வெளிப்படுத்தும் சின்னமாகத் தோன்றும்.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2