Translate

குருதிப் பூ

குருதிப் பூ

வரலாறு என்பது சம்பவங்களில் இருந்து திரண்டு தானாய் எழுந்து வருவது. தனி மனிதர்களால் ஆனது. அவர்களின் மனங்களால் ஆனது. ஒவ்வொருவர் எண்ணமும் அடுத்தவரை நெய்து ஊடு பாவியிருக்கிறது. மேலும் மேலும் என மனிதர்கள் சிலந்தியைப் போல் பின்னிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்பூமி மாபெரும் சிலந்தி வலை. பின்னுபவர்களும் மனிதர்களே, அதில் சிக்கிக் கொள்பவர்களும் மனிதர்களே. சிலந்திவலையைப் பற்றி இவ்வாறு எழுதுவது வரலாறு ஆகிறது—கல்லில், சுவடியில், தாளில், கல்லறையில், அப்புறம் முக்கியமாக உதிரத்தில்...

எத்தனையோ மன்னர் (எ) மனிதர்களின் ஆணவமும், காமமும் தொடர்பில்லாதவர்களை ரத்தத்தில் நனைத்திருக்கிறது. அன்று துரியோதனன் என்றால் இன்று ட்ரம்ப், நேற்று யாரோ வேறொருவர்.

வேலையில் சில நாட்களாய் இப்படித்தான் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது. 

விஷயம் இதுதான்; இப்படிப் பின்னிப் போகிறது. சுருக்கிச் சொல்கிறேன்.

K-வுக்கு J-யைப் பிடிக்காது. K ஒரு குழுத் தளபதி. சிறு படை திரட்டி வைத்திருக்கிறார். இல்லை, வேண்டா வெறுப்பாகவும், வேறு வழியில்லாமலும் சிலர் அவருடன் இருக்கிறார்கள். காரணம், பிழைப்பு.

K-வுக்கு வெளிக் கண்காணிப்பு வேலை. அதாவது நூல்கண்டு ரசமட்டம் பார்ப்பது. உளவுத் துறை, CAG போல. இவருக்குப் படையைப் பற்றி கவலை இல்லை; விழுந்தார்களா, எழுந்தார்களா என்று தேவை இல்லை. காவலுக்கு வந்தார்களா, தூங்காமல் நின்றார்களா என்று பார்ப்பது மட்டுமே. உதாரணத்திற்கு, ஒரு கைப்பிடி அரிசி அவரிடம் கொடுத்தால், முதலில் எண்ணிப் பார்ப்பார். பின்னர் தரம் பிரிப்பார். கடைசியில் தான் என்ன சமையல் என்று கேட்பார்.

இன்னொன்று, அங்கே இங்கே காதில் விழுந்ததை எப்படி நம்பர்களை வைத்துப் பெருக்கிக் காட்டுவது என்பது. பழுத்த பக்தன் கண்ணுக்கு ஆட்டிலும், மாட்டிலும், இலையிலும் தெய்வம் தட்டுப்படுவது போல், K-வுக்கு எந்த எண்ணிலும் குதர்க்கமோ, சந்தோஷமோ வெளிப்படும். தொண்ணூற்று ஒன்பது என்றால், "இன்னும் ஒன்னு பத்தல, ஆஃப் டார்கெட்" என்பார். சமயத்தில் சென்றதை விட 9.9x அதிகம் என்பார். கவனித்தால் மட்டுமே போனமுறை ஜீரோ என்று புரியும். பெரிய நம்பர் என்றால் வகுப்பார், 'யூனிட்' என்று சிறியதாக்கி விடுவார்.

எண்களை விளையாட்டு என்பார்கள்; தந்திரம் என்றும் சொல்லலாம்.

J-யும் உலகத்தில் எல்லோரும் தனக்குக் கீழே என்று நினைப்பவர். கங்காணி மேஸ்திரி ஆக முடியாது. கே என்ன சொன்னாலும் முன்னால் 'எஸ் பட்' என்று சொன்னவர், பின்னர் 'நோ' என்றார். இப்போதெல்லாம் 'நெவர்' என்று மட்டுமே சொல்கிறார்.

இதில் இடையில் V-யைச் சொல்லாமல் கதை முடியாது. V-யின் வேலை K செய்ததைச் சரிபார்ப்பது—K என்றால் அவர் படையும் சேர்த்து. கட்டுவது கடினம், உடைப்பது எளிது. இவர் வேலை போட்டு உடைப்பது. போட்டு உடைப்பதிலும், K "எவ்வளவு உடைத்தாய், இவ்வளவுதானா, ஏன் சரியாய் உடைக்கவில்லை?" என்று கேட்பார்.

இதே கேள்வியை J-யிடம் வேறு விதமாகக் கேட்பார்: "இவ்வளவு கீறல் விழுகிறதே? இப்படித்தான் கட்டுவீர்களா? கீழே போட்டதும் உடைகிறதே, கட்டிப் பத்திரமாய் வைத்துக் கொண்டு என்ன செய்வது? கீழே விழுகாமல் இருக்குமா?"

K-யின் வாதம், "ஏரோபிளேனில் இருந்து போட்டால் உடையாதா?" என்பதாக இருக்கும். இது செல்லாமல் போகும். கல்லெறிபவர்கள் வெல்வார்கள்.

சோர்வாகத்தான் இருக்கும். இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். V-க்கும் K-க்கும் இப்போதெல்லாம் ஆகாது. அவர் உடைத்துப் போட்டே மேலே போய்க் கொண்டிருக்கிறார். கட்டுடைத்தே இப்படிப் போகிறாரே என்று இவருக்கு மன உளைச்சல். அவருக்கு இவரை இன்னும் கீழே போகச் செய்வது எதிர்காலத்திற்கு நல்லது.

ஒரு நாள் பரபரப்புக்கென பேசி வைத்து, சில எண்களைப் பிடுங்கி K-யும் வி-யும் அம்புகள் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். குறி, J-யின் தலை.

போர் அறிவிப்பு நிகழ்ந்தது. மேலிருப்பவர்களையும் பார்க்க, கேட்க வரச் சொல்லியிருந்தார்கள். இருபக்க தளபதிகள், உபதளபதிகள், அமைச்சர்கள் எல்லாம் மன்னர் முன்னால் கூடினார்கள். மேலும் இது அப்ரைசல் நேரமாக அமைந்துவிட்டது. இல்லை, குறிக்கோளே இதுவாகவும் இருக்கலாம். போலீசுக்கு திருடன் இருந்தால் தானே வசதி? இல்லையென்றால் உருவாக்கினால் தானே அவர் வேலை ஆகும்? கள்ளனில்லாத ஊரில் போலீஸ் எதற்கு?

மீட்டிங்கை K இப்படி ஆரம்பித்தார்:

"தனிப்பட்ட விஷயம் ஒன்றுமில்லை. நம்பர்கள் விளக்குகள் போன்றவை, திசையைத் தான் காட்டும்; பாதையை அல்ல. திசை சரியாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள். அதனால் எண்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் செய்ய நிறைய இருக்கிறது. வேகம் போதாது, இன்னும் விரைவாய் ஓட வேண்டும்."

J-க்கு எல்லாமும் மேகமூட்டம் போல இருந்தன. ஜவ்வுத் தாள் வைத்து கண்ணை மூடியிருப்பது போல. இல்லையென்றும் சொல்ல முடியாது, ஆமாம் என்றும் சொல்லக் கூடாது. அப்படித்தான் கேள்விகளை K அமைத்திருந்தார். உலகைப் படைத்த ஈசனுக்கும் அம்மைக்குமே 'இம்ப்ரூவ் பண்ண' விஷயங்கள் இருக்கும்போது, யாருக்குத்தான் இருக்காது?

மன்னரும், "எண்களைப் பார்க்க வேண்டாம், அவை சுட்டும் விஷயத்தை மட்டும் பார்க்கலாம்" என்றார். சுட்டும் விஷயத்தை அவரவர் வசதிக்கேற்ப, முன்னே வாழ்க்கையில் பட்டதை வைத்துப் புரிந்து கொண்டார்கள்.

K/V இருவரின் அம்புகளும் ஜே-யின் தலைக்குக் குறிவைத்துப்பாய்ந்தன. விலகினார், நெளிந்தார், சில கணைகளைத் திருப்பி விட்டார்... ஒருவழியாக அன்று தலை தப்பியது.

இரண்டு நாள் கழித்து K, மேலாளரிடம் கேட்டார்: "எம்-மின் ப்ரோமோஷன் வாய்ப்பு எப்படி இருக்கிறது? இரவும் பகலும் வேலை பார்த்திருக்கிறார். கண் வீங்கி, முகம் உப்பிப் போயிருக்கிறது... தூக்கம் இல்லாமல்... போன வருஷமே தப்பிப் போனது. இந்த வருஷம் நிறைவேறும் என்று நம்புகிறேன்."

மேலாளர் சொன்னார்: "நம்பர்கள் தான் விஷயத்தை சிரமமாக்குகின்றன... இந்த முறையும் தவறாமல் முயற்சிப்போம்."

இதில் அவருக்கும் ஒரு செய்தி இருந்தது. எம்-மைப் பார்த்தால் வெளியில் காயம் எதுவும் தெரியாது. இந்தக் காட்டில் எல்லாமும் உள் காயங்களே. உள்காயங்களால் சிவந்த காடு.

செங்கோட்டி யானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

பகைவரைக் குத்தி சிவந்த கொம்பினை உடைய யானையையும், கழல் அணிந்த முருகக் கடவுளையும் கொண்ட மலையான இது, மனிதக் குருதி போன்ற செங்காந்தள் மலர்கள் உடையது.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2