மல்டி டாஸ்கிங் சாத்தியமா? - முழுமையறிவுக் காணொளி
கீழே வருவது இந்த முழுமையறிவுக் காணொளியைப் பார்த்ததும் எழுதிய மனப் பதிவு.
எழுதி வைத்தாலாவது செய்யலாம் என்ற நம்பிக்கை. இல்லை, இதுவும் மனதைக் கடந்து காற்றாய்ப் போய்விடும்.
மல்டிடாஸ்கிங் என்பது கணிப்பொறிச் சொல்.
கணினியில் அப்போதெல்லாம் ஒரே ப்ரொசெஸர். விண்டோஸ் போன்ற செயலிகள் வந்தபோது, பல செயல்கள் செய்வது போல் பயனருக்கு தோற்றம் கிடைத்தது. ஆனால் உண்மையில் நேரத்தைச் சிறு கூறுகளாகப் பிரித்து, ஒன்றை சபையில் ஏற்றி, இன்னொன்றை இறக்கி செய்வதற்கு மல்டிடாஸ்கிங் என்று பெயர். இப்படி விரைவாக, நொடிக்கும் கீழே விரைவாய் , செயல்களை நிறுத்தி, பின்னால் இன்னொரு செயல் செய்து, பழசைத் தொடர காண்டெக்ஸ்ட் ஸ்விட்சிங் முக்கியம். அதை மட்டும் எழுத தனி நினைவிடங்கள் உண்டு. அந்த அளவு அது முக்கியம்.
பிடிபடாவிட்டால் மேலே படியுங்கள், கடைசியில் நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=Wx80q18NbqM
மல்டி டாஸ்கிங் சாத்தியமா?
இல்லை. மல்டி டாஸ்கிங் அபத்தம்.
மனம் ஒன்றில் குவிதல் என்பதே செயல்.
மூளை திரவம் போன்றது.
நாளில் பல வடிவம் எடுத்தே பயனுள்ளதாக ஆக முடியும்.
மூளையைக் குவித்து சாவியாய் ஆக்கலாம். கத்தி செய்யலாம்.
ஆனால் சாவியும் கத்தியும் இணைந்து ஒரே பொருளாக முடியாது.
ஒப்பேற்றும் வேலைகளை, மூளைக்கு வேலையில்லாத செயல்களை செய்வது மல்டிடாஸ்கிங் ஆகாது.
மூளையால் ஒரு செயலை மட்டுமே செய்ய முடியும். ஒரு டாமினண்ட் செயல் மூளையின் மற்ற பகுதிகளைச் சேர்த்து ஒன்றாக்கி செயலை நன்றாய் முடிக்கிறது.
உதாரணமாக,எழுதுவதற்கு கற்பனை வேண்டும். இதற்கென தூண்டப்படும் மூளைப் பகுதிகள் தனி. இது நடுவில் டிவி சத்தமும் , காட்சியும் வரும்போது மூளையின் வேறொரு பகுதி குறுக்கிடுகிறது. இதனால் இரண்டும் கெடுவதே நிதர்சனம். உடம்பில் அரிக்கும் பொழுது சொறிகிறோம். சொறியும் செயல் மூளையில் முன்னுக்கு வந்து, அரிக்கும் செயல் பின்னடைகிறது. சொறிவதால் அரிப்பு குறைவதில்லை.
பெரிய வேலை செய்யும் யாரும் மல்டிடாஸ்கிங் செய்வதில்லை. மணி ரத்னம், கமல், பெருமாள் , நாஞ்சில் நாடன் உட்பட பெரிய விஷயம் சாதித்தவர்கள்.
அன்றாடச் செயல்கள் செய்வது மல்டிடாஸ்கிங் அல்ல. காய்கறி நறுக்கிக் கொண்டு டிவி பார்ப்பதைப் போன்றவை. இவை மூளைச் செயல்கள் அல்ல.
அப்படியென்றால் மல்டிடாஸ்கிங் என்றால் என்ன?
ஒருவருக்கு வேலையில், சமூகத்தில், தந்தையாய், பிள்ளையாய், தனக்காய் என்று ஒரு நாளில் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இதை எல்லாவற்றையும் முழுமையாய் சிறப்பாய்ச் செய்வதே மல்டிடாஸ்கிங்.
இதற்கு முந்தைய வேலையின் கான்டெக்ஸ்டில் (சூழல்) இருந்து முழுதும் விடுபட்டு அடுத்த வேலையின் மனநிலைக்கு விரைவில் செல்ல முடிய வேண்டும். இதற்கு ஒரு செயலில் மனது முழுதும் ஈடுபட வேண்டும். அதே போல் வெளியில் வந்து அடுத்த செயலில் முழுதாய் நுழைய முடிய வேண்டும்.
இது தான் எனக்கு இருக்கும் பெரிய சிக்கல் என்று நினைக்கிறேன். ஏதோ ஒன்று பெரும்பாலான நாட்களில் மழை மேகம் போல் மன வானில் முழுதும் அடைத்துக் கொள்கிறது. இது பெரும்பாலும் வேலையில் வரும் சிக்கலாகவே இருக்கிறது. இதை விட்டு வெளியில் வர நாட்கணக்கில் ஆகி விடுகிறது. இதற்கு உளக் குவிப்பு போன்ற பயிற்சிகள் சொல்கிறார்கள். தியானம் என்னளவில் இன்னும் முடியாததாகவே இருக்கிறது. எழுதுவதைப் போல் ஒன்றிரண்டு உளம் ஒன்றிச் செய்யும் செயல் இல்லையெனில் இன்னும் திண்டாட்டம் ஆகிவிடும்.
Comments
Post a Comment