காலச் செங்கல் (குறுங்கதை)
காலச் செங்கல் (குறுங்கதை)
-------------------------------------
ஒரு மனிதக் கூட்டம் மலையில் ஏறிக் கொண்டிருந்தது. சிறிய இடைவெளிகளில் குதிரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரிந்தன. அவை தலையாட்டி, விசை கோர்த்து, முன்னிழுத்து பனியில் கால் பதித்து நடந்தன. குதிரையின் மேல் பொதிகளுக்கு நடுவே இன்னொரு பொதியாய் ஒருவர் அமர்ந்து கடிவாளத்தைப் பற்றியிருந்தார். குதிரையின் காலின் கீழே தூய வெண்பனி, உறைந்த கடலென தெரிந்தது. குதிரைகளின் ஒவ்வொரு காலடியும் உள்ளிறங்குவதும் , வெளியேறுவதுமாய் இணைந்து விசித்திர ஒலியாய் மாறுகிறது. மரத்தின் அடிமரக் கருமை தவிர அதைப் பனி மூடியிருக்கிறது. இலைகள் பனியை உதிர்த்து பச்சை வர்ணத்தை இடைவெளிகளில் காட்டிக்கொண்டிருந்தன. கடல் மேலே எழுந்தது போல் விண்ணில் வெள்ளையாய்த் தெரிந்தது. வானின் வெள்ளை நடுவில் மயில் கழுத்து நீலம் எட்டிப் பார்த்தது. அதற்கு மேல் இன்னோர் முழு நீலம் ஒழுங்கற்ற கோடுகளை வரைந்து கொண்டே போனது. மாபெரும் சிலந்தி வலை. நடுவில் அந்த உயர்ந்த முகடு இருந்தது. அங்கிருந்த மற்ற முகடுகள் அதைக் கை கூப்பி சுற்றி நின்று பார்ப்பது போல் இருந்தன. அது நம் பார்வைகள் எதுவும் அறியாமல் யோகத்தில் கட்டற்ற வெளியைப் பார்ப்பது போல் இருந்தது. அவர்களுக்கெல்லாம் முன்னால் அது இன்னும் தொலைவில் அப்படியே நின்றது.
ஒன்றொன்றாய் கிண்ணங்களை எடுத்துக் கயிறில் கோர்ப்பது போல் ஒலி கேட்டது. சரியான இடைவெளியில் அடுத்த பாத்திரம் , ஒன்றில் மெதுவாய்ப் பட்டு ஒலியெழுப்பி உட்கார்கிறது. இடையிடையே அதனைக் கைகள் உரசித் தேய்க்கும் ஒலி.
அறையின் கதவு திறக்கப்பட்டதும் அதிர்ந்து எழுந்தான். பணிப்பெண் அறையில் நுழைவதைப் பார்த்தான். சிறிது அமர்ந்து யோசித்தான் . என்ன கனவு என்று அவனுக்குப் புரியவில்லை. நேற்று இரவு உறங்க பன்னிரண்டு ஆகி விட்டது. காலையில் நான்கு மணிக்கு எழுந்திருந்தான். பையனை விளையாட்டில் விட்டு கூட்டி வந்த பின், மீண்டும் காலையில் மீண்டும் ஒரு டோஸ் தூங்கியிருந்தான். தூங்கும் முன் மீண்டும் எழ வேண்டிய நேரம் சொல்லி எழுப்பும் ஆணை பிறப்பித்துப் போனான். அடுத்த மீட்டிங் இருந்தது.
இப்படிக் கத்தி முனையில் தூக்கம் குதித்து வெளியேறி விடுகிறது. கட்டாயம் என்றால் இமைகள் மூடுவதில்லை. பூவைக் கசக்குவது போல. வற்புறுத்தினால் அவை எப்போதும் அடங்க மறுக்கின்றன. விழிகள் உள்ளே இமைச் சுவர்களில் முட்டி ஓட ஆரம்பிக்கின்றன. வன்முறை தாங்காமல் இமைகள் தளர்கின்றன. மலையையோ , நதியையோ, பூவையோ மனதுள் எண்ணினால் உறைந்து நிற்கின்றன. விழிப் பந்துகள் அப்போது கொஞ்சம் நிதானமடைகின்றன. பின்னர் நதியில் கால்கள் இறங்கி கலந்து விடுகின்றன. இடையில் ஏதோ ஒரு பேச்சுக் குரல், ஒரு பாத்திர ஓலி விழிகளைச் சிறை பிடித்து மீண்டும் உள்ளே அடைக்கிறது. மீண்டும் ஒரு இடைவிடாத துடிப்பு, மீறல். பின்னர், அச்சிறையின் ஒரே ஒரு செங்கலை மட்டும் எப்படியாவது உருவி எடுக்க வேண்டும். மலை முகட்டில் உயர்ந்த மரம், ஒரு அருவி பார்த்தல் போன்ற ஒரு செங்கல். அப்படியே ஒவ்வொன்றாய் எடுத்து வெளியேறி விடலாம்.
நேற்று இரவும் அப்படித்தான் ஆகியிருந்தது. கலந்துரையாடல் ஆரம்பிக்க அரைமணிக்கு முன் இமைகள் சொருகின. தூங்கிப் போனால் என்ன? இல்லை கடைசியில் சாக்குப் போக்கு வேண்டாம் என்று நடந்து கொடுத்து தூக்கத்தை விரட்டினான். எல்லாமும் குறுஞ்செய்திகள் வழியாக ஏற்கனவே பேசப்பட்டிருந்தது. அரைமணி தானே? ஆனால் அந்த அரைமணிக்குப் பின் வரும் மணிகளை எண்ணினான். பதினொன்றில் துவங்கி, ஐந்து மணி நேரம் இருந்தது.
கூட்டம் பத்தரை மணிக்குத் துவங்கியது.
அன்று காலையில் அவன் இப்படி ஒரு கதையைப் படித்திருந்தான். இமயத்தில் எவரெஸ்ட் சிகரம் இருக்கும் திபெத் எல்லையில் ஷாம்பாலா என்றொரு இடம் இருக்கிறது என்கிறார்கள். அது பூமியில் இல்லை என்போரும் உண்டு. இது தான் அங்கே இடைவிடாமல் சாகசக் காரர்களை கொண்டு செலுத்துகிறது. அது பூமியிலிருக்கும் சொர்க்கத்தின் நேரடிப் பாதை. அங்கு நேரம் இல்லை. மொழி இல்லை, உடல் இல்லை. எல்லாமும் கருத்து எனும் விதை நிலையில் இருக்கிறது. அங்கு எந்த மொழியும் பேசலாம். எல்லோருக்கும் புரியும்.
மீட்டிங்கில் எல்லோரும் ஆங்கிலம் பேசினார்கள். ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் விளங்கவில்லை. இடையில் இன்னொருவர் விளக்கினார். அதில் ஒரு கேள்வி முளைத்தது. இன்னொருவர் கொஞ்சம் பின்னால் போகலாம் என்றார். நடுவில் கீ நோட் (keynote) ஒரு நதி போல் கலங்கல் ஏதும் இன்றி இருந்தது. மேலே பறவைகள் அதைத் தொட்டுப் பறந்து எழுந்தன. இலைகள் உதிர்ந்தன. சமயத்தில், நடுவில் இறங்கி குறுக்கே நடந்து முழுதும் நீரைக் கலக்கினார். அரை மணிநேர அமர்வு , ஒன்றரை மணியாய் முடிந்தது.
பதினொன்றரைக்கும் , நாலு மணிக்கும் இருக்கும் தொலைவை இப்போது கணக்குப் பார்த்தான். நான்கரை செங்கல் தூரம். அப்புறம் நாளில் வரும் செங்கற்களை எண்ணினான். இடையில் இருக்கும் காலியான வெளிகளை நினைத்தான்.
படுக்கைக்குப் போனான். ஆனால் அவன் கண்கள் அந்த இடைவெளியில் அமர மறுத்தன. அடக்கினால் ஆவது ஒன்றும் இல்லை என்று அவனுக்குத் தெரியும். மீண்டும் திபெத்தை வாசித்தான். ஆன்னி டெய்லர் , சூசன்னா கார்சன் திபெத்துக்குள் நுழையும் சாகசக் கதை. அவர்களை ஈர்த்தது ஷாம்பாலா என்ற அதே இடம். நிகோலஸ் ரோரிச் சென்று ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அவர்களுக்கு சாங்ரீ-லா (shangri-la). அங்கிருக்கும் லாமாக்கள் அது எல்லோருக்கும் தெரிவதில்லை என்கிறார்கள். எட்டு இதழ் கொண்ட தாமரை எனும் பனி மலைகளால் சூழப்பட்டது. நடுவில் பொன்னாலான , வைரங்கள் பொதிந்த, கண்ணாடி போன்ற ஏரிப் பரப்பில் தெரியும் வரப்போகும் தேவனின் அரண்மனை . அங்கு பிணியில்லை, காழ்ப்பில்லை, உடலில்லை, குற்றமில்லை, பசியில்லை. தூய மனிதர்கள் கால் படும் இடம். பூமியில் இருக்கும் விண் நகர். அதைத் தேடித்தான் அவர்கள் போகிறார்கள்.
மூன்று ஐம்பதில் அலாரம் அடித்தது. இமைகள் வலிக்கிறதா என்று சோதித்தான். இல்லை என்று அவனே சொல்லிக் கொண்டான். உற்சாகமாய் உணர்ந்தான். ஷாம்பாலா காலையில் மறந்து போய் இருந்தது.
ஏழு மணிக்கு காலச் செங்கல் அழுத்த ஆரம்பித்தது. வெளியில் சென்று நாற்காலியில் அமர்ந்தான். எங்கும் கச்சிதம். காலின் கீழே செங்கற்கள் கச்சிதமாய் இணைந்து படிகளை அமைத்தன. தளக் கற்கள் , ஒரு அடியும் , இரண்டடியும் , நான்கு என ஊரையும், உலகையும் பிடிக்குள் நிறுத்தி இருந்தன. தார் ரோடு அப்படி இருக்கவில்லை என்று தோன்றியது. ஜல்லிகள் குறுக்கும் , நெடுக்கும் , ஒழுங்கற்றனவாய் இருந்தன. ஆம் , இவைகள் சிறு மலைகள்.
முன்னால் நின்ற நீளச் செங்கற் சுற்றுச் சுவரில் ஒரு ரெட்டை வால் குருவி வந்து அமர்ந்தது. விசுக்கென்று பறந்து பின் புறம் மறைந்தது. பின்னால், பெரிய புதர். இங்கிருந்து காண முடியாது. அவனுக்கு இப்போது ஷாம்பாலா நினைவுக்கு வந்தது.

Comments
Post a Comment