மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா - நினைவுப் பதிவுகள்
மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு விழா - நினைவுப் பதிவுகள்
----------------------------------------------------------------------------
இரவுப் பயணம் முடிந்து, குளித்துவிட்டு நேரத்துடனேயே புறப்பட்டுவிட்டேன்.
தேவநேயப் பாவாணர் அரங்கம் எங்குள்ளது என்று விசாரித்தேன். 'டிஸ்ட்ரிக்ட் லைப்ரரி' என்று கேட்டுப் பார்த்தேன். டீக்கடை முதலாளி, மாஸ்டர், பேருந்தின் நடத்துநர் என்று யாருக்கும் அந்த இடம் தெரிந்திருக்கவில்லை. 'ஆனந்த் தியேட்டர்' என்றதும் நடத்துநரே, "ஆயிரம் விளக்கு நிறுத்தம்" என்றார். ஆறும் எட்டும் பதினான்கு ரூபாய் பயணக் கட்டணம். சந்தோஷமாக இருந்தது.
வடபழனி சரவண பவனில் காபி குடித்தேன். ஊழியர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். கடைக்கு இது இறங்குமுகம் போல. பின்னால் தெரிந்த வடபழனி முருகனை எட்டி மட்டுமே பார்க்க முடிந்தது. நேரமில்லை.
அரங்கில் நுழைகையில் விழா ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.
ரொம்ப சாதாரணமாக பாரா (பா.ராகவன்) நடமாடிக்கொண்டிருந்தார். அடையாளம் சொல்லி என்னை அறிமுகம் செய்துகொண்டேன். 'நினைவிருக்கு... நமக்கு ரெண்டு முத்து. நீங்க ஒண்ணு, முத்து சுப்ரமணியம் இன்னொருத்தர்' என்றார். சிறு பதற்றமும் இன்றி சிரித்தபடியே இருந்தார்.
அரங்கம் நிறைய ஆரம்பித்துவிட்டது. நிறைய எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். எழுத்துக்கென இத்தனை பேரைச் சேர்ப்பது மிகச் சிரமம். வந்திருப்பவர்களை யாராலும் பலவந்தமாக இழுத்து வந்திருக்க முடியாது. அவர்கள் எல்லோரையும் இணைக்கும் புள்ளி ஒன்று இருக்க வேண்டும். அந்த மையப்புள்ளிதான் பாரா.
மேடையில் பேசியவர்கள் அவருடைய மாணவர்கள். கீழே அமர்ந்திருந்தவர்கள் அவர் உருவாக்கிய எழுத்தாளர்கள். எழுத நினைப்பவர்களுக்கு இன்று தமிழில் இருக்கும் ஆகச்சிறந்த 'கோச்' அவர்தான் என்று நினைக்கிறேன். விதை மண்ணுக்குக் கீழே முட்டி, ஆயிரத்தில் ஒன்று மரமாய் மேலே எழுவது போன்றது அவர் புதிய எழுத்தாளர்களுடன் பிரயத்தனப்படுவது.
எழுதச் சொல்லித் தருவார்; எழுத வைப்பார்; எழுதியதைப் படிப்பார்; படித்துத் திருத்துவார். பாராட்டுவார். எப்போதாவது யாரையாவது, 'இதெல்லாம் என்ன...' என்று மெலிதாய்க் கடிந்துகொள்வார். இப்படிப் பல நூறு பேருக்குச் செய்வது விதை மண்ணை முட்டிக்கொண்டு எழுவது போன்றதுதானே? அன்று அங்கு கூடியிருந்தவர்களிடம் இருந்து வெளியான புத்தகங்கள்தான் அந்த மரங்கள்.
மெட்ராஸ் பேப்பர் பெயரைத் தினமும் படிக்க வேண்டிய பட்டியலில் ஜெயமோகன் சிபாரிசு செய்திருந்தார். என்னுடைய முதல் 'கிளிக்' அப்படித்தான் நிகழ்ந்தது.
முதலில் படிக்கும்போது பிரண்ட்லைன், இந்தியா டுடே போன்ற ஆங்கில இதழ்கள் என் நினைவுக்கு வந்தன. நான் பொதுவாக எந்த இணைய நாளிதழுக்கும் கட்டணம் செலுத்திப் படிப்பதில்லை. எல்லா நாளிதழ்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இப்போது 'ஹேண்ட் கிராஃப்டட்' (Hand-crafted) என்று ஒரு கை அறிவிக்கிறது. AI எழுதியது அல்ல என்று பொருள். அப்படியென்றால் மிச்சமெல்லாம் என்ன? இதை நாம் கட்டணம் கட்டிப் படிக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஆனால், நான் சப்ஸ்கிரைப் செய்யும் ஒரே வார இதழ் மெட்ராஸ் பேப்பர் மட்டும்தான். என்னைப் போன்றவர்களையும் காசு கட்டி உள்ளிழுத்தது அவர்களின் எழுத்தின் வலிமை.
ஆண்டு விழா விஷயத்திற்கு வருகிறேன்.
இதிலும் பாராவின் எல்லா 'சிக்னேச்சரும்' இருந்தது. ஆறு எழுத்தாளர்கள், ஆறு தலைப்புகள். எழுத்தாளருக்கு இருக்கும் வாய்ப்புகள்; அல்லது எழுத்துக்கு இருக்கும் வாய்ப்புகள் என்று அதை நான் கொள்கிறேன். நடுவில் ஒரு தமிழ் எடிட்டர் நிரலி (Tamil Editor Software) அறிமுகம் செய்யப்பட்டது. அதில்தான் இப்போது இதையும் தட்டச்சு செய்கிறேன்.
விழாவின் காணொளிப் பதிவுகள் ஸ்ருதி டிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, அதை நான் மீண்டும் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. யோசிக்க வைத்த சில விஷயங்கள் கீழே.
எழுத்தாளர் முகில் திரைத்துறை வாய்ப்புகள் குறித்துப் பேசினார். அவர் சொன்ன 'வெர்டிகல் ஃபார்மட்' (Vertical Format) என்ற ரீல்ஸ் போன்ற இரண்டு நிமிட எபிசோட் பற்றிய பேச்சு எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரையுலகின் சவால்கள், அங்குள்ள சுதந்திரமின்மை, காத்திருப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
ஆர். முத்துக்குமார் 'இன்போடைன்மெண்ட்' (Infotainment) பற்றிப் பேசினார். எரியும் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் எளிய மொழியில் சொல்வது பற்றியது அது. நியூஸ் ரூம்களின் (News rooms) பின்னால் இருந்து நிகழ்ச்சியைக் கட்டமைப்பது, அதன் போக்கை நிர்ணயம் செய்வது, ஆன்-ஸ்கிரீனில் பேசும் ஆட்களை இயக்குவது என எல்லாவற்றையும் செய்வது எழுதுபவர்கள்தான் என்பது எனக்குப் புதிய விஷயம். எல்லோரும் தனித்தே நிற்பவர்கள் என்றே நான் அதுவரை நினைத்திருந்தேன்.
எழுத்தாளர் மருதன் பேசியது—எழுதுபவர் அவருக்கான தனித்துவமான துறையைக் கண்டடைய வேண்டும் என்பதைப் பற்றி. எல்லாவற்றையும் தொட்டு எழுதுவது பெரிய பலன் தராது; உதாரணமாக வரலாறு, தொழில்நுட்பம் போன்று நமக்கு ஈடுபாடுள்ள, தெரிந்த துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாள்தோறும் ஆர்வத்துடன் அதைக் கற்க வேண்டும் என்றார்.
எழுத்தாளர் சொக்கன் 'தோன்றுக' என்ற தலைப்பில் பேசினார். 'தோன்றுக' என்ற சொல்லை 'வெளிப்படுவது' என்று எடுத்துக்கொண்டு, எழுதுபவர் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கினார். இவையெல்லாம் பாராவின் எழுத்துச் சூத்திரங்கள் என்பதில் வியப்பொன்றுமில்லை. நாள்தோறும் எழுதுவது, சரிபார்த்து மேம்படுத்துவது, இலக்கு வைத்து எழுதுவது, கவனம் சிதறாமல் எழுதுவது, எழுதுபவராக மட்டுமே பொதுவெளியில் வெளிப்படுவது.
இதற்கு முன்னால் பேசிய முத்துக்குமார் 'ஸ்கூல் ஆஃப் பிராக்டிஸ்' (School of Practice) என்ற வார்த்தையைச் சொன்னார். 'பள்ளி' என்பது சமணத் துறவிகளின் கல்வி மரபிலிருந்து வந்த சொல் என்று சொல்வார்கள். எழுத்துப் பள்ளி... அதுதான் இது!
Comments
Post a Comment