வாதம் , சைத்தியம் , பூண்டு , பூசணி
வாதம் சைத்தியம் , பூண்டு , பூசணி
-------------------------------------------
சனிக்கிழமை இந்தப் பகுதியில் சந்தை.
மடிவாலா சந்தையைப் போல் பெரிதில்லை இல்லையென்றாலும் , தனியாக இதுவும் பெரிதுதான்.
மடிவாலா சந்தை அவ்வளவாக பொங்கி வழிவதில்லை. உள்ளேயே சுருண்டிருக்கும். நடந்து போய் வாங்கி வர வேண்டும். ஒரு கிலோமீட்டர் நீளத்தில் இரு புறமும் கடைகள்.
சனிக்கிழமை சந்தாபுரா சந்தை ஓசூர் சாலையை ஸ்தம்பிக்க வைத்து விடும். சரியாக மேம்பாலத்தின் கீழ் சந்தை இருக்கிறது.எட்டாய்ப் பிரிந்த சாலை. அதன் முனையில் சந்தை. இதுதான் சந்தடி என்பது. திசைகள் என்பது இல்லை. திசைகள் ஒன்றான பந்து போன்ற இடம்.இல்லை எட்டுத் திக்கும் இடிக்கும் இடம். இதற்குள் தான் சரக்கு வண்டிகள், காய்கறி வாங்கும் கார்கள், பைக்குகள் போக வேண்டும். முக்கியமாக நிறுத்த வேண்டும்.
நாலு கம்பும், படுதாவும், தார்ப்பையும் தான் கடை என்பது. இல்லை அதுவுமே இல்லாமல் பூமியில் மட்டும் நிற்பது.காலை மனிதக் குரல்களாலும் , வண்டியின் உறுமும் ஒலிகளாலும், ஹாரன் சத்தத்தாலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இல்லை சூடு பபிடிக்கவில்லை. மணி எட்டு மட்டுமே.
சிறு கல் குவியல் போன்று உருளைகள். அதை மண்வெட்டி போல் கூடை அள்ளி எறிந்தது. நெகிழ்ந்த பாறைகள். கையளவு மலை.இன்னொரு குவியல் வெங்காயம். தோல் மட்டுமே ஆனது. வாழ்வெல்லாம் விண்மீன் போல் ஒளிர்தல் மட்டுமே ஆனது இயற்கையின் காகிதம்..நேதி நேதி நேதி என்றால் இயற்கையில் வெங்காயம். வெள்ளைப் பூசணிக் காய்களில் யானை. வெண்டை அம்பு. பீன்ஸ் - ஸ்பில் தி பீன்ஸ் இல்லை, மணிபர்ஸ் போல் மூடிப் பாதுகாப்பாய் இருக்கிறது.
வெள்ளைச் சாக்கில் மிளகாய் வற்றல்கள். சாய்ந்து விழுந்த கேள்விக் குவியல்களாய்த் தோன்றின. இவ்வளவு பாக்குக் கடைகள் எனக்கு ஆச்சரியம். கர்நாடக கிராமப் பகுதிகளில் வெற்றிலைப் பழக்கம் நிறைய என்று தோன்றுகிறது. வெற்றிலை குதப்பிய பெண்களே நினைவில் வருகிறார்கள். இதுவும் நகரத்தின் புறவாசல்.
மஞ்சளும் இளஞ் சிவப்பும் வெள்ளையுமாய் படுதாக்கள். மையச் சந்தைப் பகுதி தகரம் போட்டு உயர்த்தி எழுப்பப் பட்டிருந்தது. கடைகளுக்கு தெளிவான எல்லைகள் இருந்தன. சிறு மேடைகள், கீழே நடைபாதை. ஒரு அம்மாள் வெள்ளரியை ஒன்றொன்றாய் துண்டால் துடைத்து பளபளப்பாக்கிக் கொண்டிருந்தார். காலி பிளவர் இலைகள் அரியப்பட்டு காத்தாடி போல் விழுந்து கிடந்தன.
முருங்கையை ஒருவர் முனைவெட்டி கொத்தாகக் கட்டி ரப்பர் பாண்ட் போட்டு வைத்துக் கொண்டிருந்தார். தேங்காய்கள் ஆயுத அணிவகுப்பு போல் முகம் காட்டி வைக்கப் பட்டிருந்தன. கத்தரிக்காய்கள் பின் பார்த்து. இங்கேயும் ஒரு கச்சிதம் தேவைப் படுகிறது. மிளகாய்ப் பொடியும், மஞ்சள் பொடியும் கூம்பாய்க் குவிக்கப் பட வேண்டும். சாக்கு கழுத்தளவு மடிந்திருக்க வேண்டும். கடலைக் குமியலில், தனிக் கடலைகள் பொறுக்கி குமியலில் ஒன்றாக வேண்டும். பூண்டும், வெங்காயமும், புடைத்து சவரம் செய்யப் படவேண்டும்.
படுதாக்களால் ஆன பகுதி மையப் பகுதியில் இருந்து பிரிந்து வெளியே இருந்தது. வரும் வெயிலுக்காக படுதா இழுத்துக் கட்டி பக்கத்துக் கம்பங்களில் முடிந்திருந்தார்கள். இடைக்கம்புகள் பெரிதும் இல்லாமல் கயிறுகளே தாங்கி நின்றன. சிறிய டெம்போ வண்டிகள் மூடைகளை இறக்கி விட்டன. பலர் பிரித்து கடை விரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே குத்தகை விடப்பட்ட இடங்களாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் சிறு சுவர்கள் மட்டும் தெருக்களைப் பிரித்தன.
ஒரு இளம்பெண் ஏற்கனவே கடை விரித்து விட்டாள். துணைக்கு அம்மா இருந்தார். எடைக் கருவியின் முன் உட்கார்ந்து விட்டார். ரப்பர் பெட்டியை அங்கும் இங்கும் தள்ளினால் நாள் முழுதும் எழ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வப்போது சிதறியதை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார் அம்மா. அழகான முழுக் கருமை அவர் முகம். உதட்டில் சாயம், கருப்பை இன்னும் எடுப்பாக்கியது.
யானைக் கருப்பு. வெள்ளைப் பூசணிகள் அவர் முன் அணிவகுத்து நின்றன.
இன்னொரு வேன் வந்தது. பக்கத்துக் கடை சரக்கு வேன். அந்த அம்மாள் உள்ளிருந்து இறங்கினார் , முழு வெள்ளை. வந்ததும் இடுப்பில் கை வைத்து பெண்ணைப் பார்த்தார்.
கடையை கொஞ்சம் தள்ளிப் போடச் சொன்னார். வைத்த கடையை எப்படித் தள்ளுவது என்று எனக்குத் தெரியவில்லை. தன்னுடைய எல்லைக்குள் வருவதாகச் சண்டை பிடித்தார். அவர் உட்கார்ந்தபடி எல்லாமும் சரியாய் இருக்கிறது என்றார். வெள்ளை அம்மாள் கோபமாய் காலிப் பெட்டிகளை தூக்கி எறிந்தார். முகத்தின் முன்னர் கைவைத்து ஆட்டி எதுவோ பேசினார்.
பேச்சு வார்த்தையில் கால்மணிக்கு மேல் கழிந்திருந்தது. இவருக்கு சண்டை நடுவில் கடை போய்க்கொண்டிருந்தது .
அப்புறம் யாரோ இருவர் வந்தனர். ஒரு கயிறைப் பிடித்து பின் சுவற்றில் வைத்து நூல் அளந்தனர்.
இந்த அம்மாள் நேராய்ப் பிடி என்றார். ஒரு கத்தரிக்காய் கூடையையும் , ஓரிரண்டு பூசணியையும் உள்ளே தள்ள வேண்டியிருந்தது.
பஞ்சாயத்து குழு சமரசம் முடிந்து போய் விட்டது. வெள்ளைக்கும் கருப்புக்கும் இடையில் எங்கோ இருந்தது அந்த சமரசம். இது தினமும் கூட நடக்கலாம்.
வெள்ளை அம்மாள் கடையை அவிழ்த்தார். முதலில் ஒரு முதுகு பெல்ட். பின்னர் இடுப்பு நேராய் நிற்க ஒரு மெத்தை சாய்மானம். பலமான வாதமாய் இருக்க வேண்டும்.
கடைசியில் இறங்கியது மூட்டை மூட்டையாய் வெள்ளைப் பூடுகள் மட்டும்.
Comments
Post a Comment