இயற்கையை அறிதல் - எமர்சன் - 2 - அழகு
இயற்கையை அறிதல் - எமர்சன் - 2 - அழகு
மனிதனின் ஆத்மார்த்தமான இன்னொரு தேவையை இயற்கை நிரப்புகிறது. அது அவனுடைய அழகுணர்ச்சி.
லத்தீனில் உலகம் எனும் சொல்லுக்கு அழகு என்று பொருள். இங்கிருக்கும் எல்லாம் அப்படி இருப்பதாலோ , இல்லை மனிதனின் கண்கள் தான் அப்படியோ , இயற்கையின் முதன்மை வடிவங்கள்- நீல வானும், ஓங்கிய மலையும், மரமும், விலங்கும் நம்மை அப்படியே உவகை கொள்ளச் செய்கின்றன. அவற்றின் கோட்டு வடிவம், வண்ணம் , நகர்வு, சேர்ப்பு எல்லாமும். இது பாதி நம் கண்களால் ஏற்படலாம். கண் ஓர் உன்னதமான கலைஞன். வேறுபட்ட பொருள்களின் அளவையும், ஒளியையும், ஒருங்கே இணைத்து வண்ணமும், நிழலும் கொண்ட கோளமாய் கண்ணில் தோன்ற வைக்கிறது. சிறிதாயும், பெரிதாயும் உள்ள பொருள்கள் உருண்டையாகவும், ஒருமையுடனும் எப்படித் தெரிகின்றன?
கண் மாபெரும் ஒருங்கிணைப்பாளன் என்றால், ஒளி ஒரு சிறந்த ஓவியன். ஒளியால் அழகாக்க முடியாத கெட்ட பொருள் என ஒன்றுமே இல்லை. பொருள்கள் ஒளியால் தான் கால வெளியில் எல்லையற்றவை எனத் தோன்றுகின்றன. நம் உணர்வுகளை எழுப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. பிணமும் ஒளியில் அழகாகும்.
ஒட்டுமொத்தக் காட்சி இன்பம் தருவது போல, தனிப் பொருள்களும் கண்ணுக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றன. அவைகளையே நாம் முடிவில்லாமல் பிரதி எடுக்கிறோம். கனியும், காயும், விதையும், இலையும், முட்டையும், பறவையும், இறகும் , விலங்கும் , பாம்பும், சிப்பியும், வண்ணத்துப் பூச்சியும், எல்லாம் இயற்கையின் பிரதிகளே.
மேலும் புரிந்துகொள்ள அழகின் கூறுகளை மூன்றாய்ப் பிரிக்கலாம்.
1. முதலாவது, இயற்கையின் வடிவங்களை அப்படியே பார்ப்பதில் ஏற்படும் இன்பம். அதன் வடிவங்களும் செயலும், மனிதனுக்கு அவ்வளவு தேவையாய் இருக்கிறது. வேலையில் நெறிபட்ட மனதிற்கும் , உடலுக்கும் இயற்கை இதமான களிம்பாய் இருக்கிறது. ஒரு வணிகனும், வக்கீலும் சச்சரவான தெருவின் ஓசைக்கு நடுவே வானத்தையும், காட்டையும் ஒரு முறை பார்த்துப் பின் மீண்டும் மனிதனாகிறான். முடிவில்லாத அமைதிக்குத் திரும்புகிறான். விழியின் நலன் எப்போதும் தொடுவானையே தேடுகிறது. கண்ணுக்கெட்டாத தொலைவைக் காண்கையில் நாம் சோர்வடைவதே இல்லை.
உடலுக்கு ஒன்றுமே இல்லாத வேளையிலும் இயற்கை களிப்பூட்டுகிறது. தினமும் மலைக்கு மேல் தோன்றும் அதிகாலையின் இரவு பகலாவது ஒரு மாயம். அதை வீட்டில் இருந்து பார்க்கும் என் உணர்ச்சியை தேவதை மட்டுமே அடைய முடியும். பொன்னிற ஒளிக் கடலில் சிறு பொன் தகடுகள் போன்ற மேகங்கள் மீனென நகரும். பூமியின் கரையில் நின்று அமைதியான அக்கடலை நான் காண்பேன்.
இருள் ஒளியாகும் அந்த ஜாலத்தில் நானும் கரைகிறேன். மகிழ்ச்சி என் உடலைத் தொடுகிறது. காலைக் காற்றில் பெரிதாகி, அதன் கதையில் ஒன்றாகிறேன். இயற்கை எப்படி நம்மைச் சிறுமையில், ஏழையாய் ஆக்கும்? ஆரோக்கியத்தையும், ஒரு நாளையும் என்னிடம் கொடுங்கள். ஒரு ராஜ ஊர்வலத்தை சிறிதென்று காட்டுகிறேன். உதயம் என் அசிரியா (பாபிலோன்). பாபோஸ் எனது அஸ்தமனமும் , சந்திரோதயமும். மதியம் எனது இங்கிலாந்து; அதுவே என் புலனும் , அறிதலும்; இரவு ஜெர்மனி; அதுவே என் கனவும், தத்துவமும்.
நான் நேற்று பார்த்த ஜனவரியின் சூரிய அஸ்தமனமும் எதற்கும் அழகில் குறைந்ததில்லை. மேற்கின் மேகங்கள் தானே பிரிந்து , விவரிக்க முடியாத வண்ணக் கலவைகளுடன் இளஞ்சிவப்பாய் , மென்மையாய்ப் பறந்தது. மாலைக் காற்றின் உயிர்ப்பும், இனிமையும் வீட்டினுள் செல்வது சிரமமாய் இருந்தது. இயற்கை என்ன சொல்ல நினைக்கிறது? ஆலையின் பின்னிருக்கும் அந்தப் பள்ளத்தாக்கின் அழகு சொல்வதில் எதுவும் அர்த்தம் இல்லையா என்ன? அதைத்தான், ஹோமரும் , ஷேக்ஸ்பியரும் சொல்லிவிட முடியுமா என்ன? இலையை உதிர்த்த மரங்கள், கோபுரக் கூம்பாய் ஒளியில் நீல வானில் தீப்பற்றி எரிந்தும் , உறைந்த மொட்டுகள் விண்மீனாய் நின்றும் , பனி மூடிய தண்டும் , வேரும் மௌனமான இந்த இசையில் எவ்விதம் பங்காற்றுகின்றன இல்லையா?
கோடை மட்டுமல்ல, குளிரும் அழகானது. கவனமான கண்ணிற்கு வருடத்தின் ஒவ்வொரு கணமும் தனி அழகைக் கொண்டு வருகிறது. அதே நிலம் அடுத்த மணியில் எப்படி முன் பார்க்காத ஒன்றாய், திரும்பவும் காண முடியாத இன்னொன்றாகவும் மாறுகிறது? ஒவ்வொரு கணமும் வானம் மாறுகிறது. கீழே இருக்கும் நிலத்தின் மகிழ்ச்சியையும், கவலையையும் அது பிரதிபலிக்கிறது.
வாரத்திற்கு வாரம் நிலமும் உருமாறுகிறது. நாம் நிழல் பார்த்து மணி சொல்லும் மரங்கள் , கூர்ந்து பார்க்கும் கண்ணுக்கு காலையிலும் மாலையிலும் வெவ்வேறாய் தெரிகின்றன. பறவைகளும், பூச்சிகளும் , தாவரங்களைப் போல், வருடம் முழுதும் ஒன்றை ஒன்று பின் தொடர்கின்றன.
நீரில் நடப்பது இன்னொரு ஜாலம். குளத்தில் இடமில்லாமல் படரும் ஆகாயத் தாமரையும் , அதன் மேல் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் எந்தக் கலையினாலும் படைக்க முடியாதவை. ஆம், ஆறு என்றென்றும் நடக்கும் திருவிழா , ஒவ்வொரு மாதமும் புதிய அணிகலனுடன்.
நாம் நேரில் பார்க்கும், நுகரும் இந்த அழகு மிக எளிதாய்க் கிடைப்பது. பகலின் மாயமும், காலைப் பனியும், வானவில்லும், மலையும் , மலர்த்தோட்டமும், நட்சத்திரமும், நிலவொளியும், நீரில் அதன் முகத்தையும் , மெனக்கெட்டுத் தேடினால் , சலித்து வேடிக்கையாகி விடும். வெளியே நிலவைப் பார்ப்பதற்காக மட்டும் சென்றால், அது காகிதப்பூ போல் ஆகிவிடும். தற்செயலாய் நிகழ்ந்தால் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும். அக்டோபரின் பொன்னிற மாலையை யார் தான் கைகளில் அடக்கிவிட முடியும். தேடிப்போனால் மறையும். வேலைகளின் நடுவே ஜன்னல் எட்டிப் பார்க்கையில் தெரியும் கானல் நீர் அது.
2. அழகும் தூய மனமும்
அழகை முழுமையாய் அனுபவிக்க , நம்முள் இருக்கும் ஆன்மிக அடிப்படை அவசியம். உயர்ந்த, தெய்வீக , ஆதிக்கமற்ற அழகு இயற்கை மனித விருப்பத்துடன் இணையும் புள்ளியில் இருக்கிறது. அழகு என்பது கடவுள் மனிதனின் நற்பண்பில் வைக்கும் முத்திரை. இயற்கையின் ஒவ்வொரு செயலும் அழகானது. அதன் வீரச் செயல்களும் மென்மையானவை. அது நடக்கும் இடத்தையும், காண்பவர்களையும் ஒளிரச் செய்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் இப்பிரபஞ்சம் சொந்தமானது. அறிவுள்ள ஒவ்வோர் உயிர்க்கும் , இப்புவி சொத்தும் , பரிசும் ஆகும். ஆனால் அவன் அப்படி நினைத்தால் மட்டுமே. அவன் அதிலிருந்து விலகலாம். இயல்பினால் அவனுக்கு உரிமை உண்டு. அவன் எண்ணங்களின் வலிமையையும் , செயலையும் பொறுத்து தன் உலகை அவன் எடுத்துக் கொள்கிறான்.
மகத்தான செயல்களில் இயற்கையும் உடன் நிற்பது எவ்வளவோ இடங்களில் நிகழ்ந்துள்ளது. எத்தனையோ மகத்தான போர்களின் தியாகத்தில் அது அருகில் இருந்தது. கொலம்பஸ் அமெரிக்கக் கரையை அணுகியபோது, பயந்து ஓடிய செவ்விந்தியரும், கடலையும் , நீல வண்ண மலை ஓவியத்தையும், கொலம்பசையும் பிரிக்க முடியுமா? புதிய உலகம் தனது பனைதோப்புகளால் , புல்வெளிகளால் அவரைப் போர்த்தவில்லையா?
மிகச் சாதாரணமான அழகற்ற சூழலிலும் நடக்கும் உண்மையான செயல் வானத்தைக் கோவிலாகவும், சூரியனை விளக்காகவும் மாற்றிக் கொள்கிறது.
இயற்கை தனது கரங்களை விரித்து மனிதனைத் தழுவத் தயாராக இருக்கிறது; அவனது சிந்தனைகளும் அதற்குச் சமமான பெருமையுடையதாக இருந்தால் போதும். அது மகிழ்ச்சியுடன் அவனது பாதங்களை ரோஜாக்களாலும் ஊதாப்பூக்களாலும் அலங்கரிக்கிறது..
அவனது சிந்தனைகள் விரிவானதாக இருக்கட்டும்; அப்பொழுது அந்தச் ஓவியத்தின் சட்டகமாக உலகம் மாறிவிடும்.
நற்பண்புடைய மனிதன் இயற்கையின் செயல்களோடு ஒன்றாய்ச் சேர்கிறான் . அவனே கண்ணுக்குத் தெரியும் உலகத்தின் மைய உருவமாக நிற்கிறான்.
ஹோமர், பிண்டார், சாக்ரடீஸ், ஆகியோர் நம் நினைவில் கிரேக்க நாட்டின் நிலப்பரப்புடனும் காலநிலையுடனும் இயல்பாக இணைந்து நிற்கிறார்கள்.காணக்கூடிய வானமும் பூமியும் இயேசுவுடன் ஒத்திசைந்து நிற்கின்றன.
அதேபோல அன்றாட வாழ்க்கையிலும், வலிமையான குணமும் மகிழ்ச்சியான மேதமையும் கொண்ட ஒருவரைக் கண்டவர்கள், அவர் எவ்வளவு எளிதாக மனிதர்களையும் கருத்துகளையும் காலத்தையும் தம்மோடு அழைத்துச் சென்றார் என்பதைக் கவனித்திருப்பார்கள்.
அப்போது இயற்கையே மனிதனுக்குப் பணியாளராக மாறிவிடுகிறது.
3. அறிவின் பொருளாக அழகு
உலகின் அழகை நோக்குவதற்கு இன்னும் ஒரு கோணம் இருக்கிறது. அது அறிவின் பொருளாக அழகு மாறுவது. பொருட்களுக்கு நற்பண்புடன் மட்டுமல்ல, சிந்தனையுடனும் ஒரு உறவு உண்டு.
எப்படி தன் படைப்பில் பொருட்கள் ஒழுங்கு பெற்றதாய் சீராய் உள்ளனவோ, அதே சிந்தனை ஒழுங்கை இயற்கை மனிதனில் தேடுகிறது.
அறிவாற்றலும் செயலாற்றலும் இயற்கையில் மாறி மாறி ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றின் தீவிரமான செயல்பாடு மற்றொன்றின் தீவிரமான செயல்பாட்டை உருவாக்குகிறது.
இரண்டிற்கும் இடையே ஒரு விதமான முரண்பாடு இருப்பது போல் தோன்றினாலும், ஒன்றையொன்று தொடர்கின்றன. ஒவ்வொன்றும் மற்றொன்றைத் தயாரிக்கிறது.
இயற்கையின் அழகு மனதில் மறுவடிவம் பெறுகிறது. அது வெறும் பயனற்ற தியானத்திற்காக அல்ல; புதிய படைப்பிற்காக.
உலகின் முகத்தால் எல்லா மனிதர்களும் ஓரளவு பாதிக்கப்படுகிறார்கள்; சிலர் அதனால் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த அழகின் மீதான காதலே ரசனை .
சிலருக்கு இந்தக் காதல் அளவுக்கு மீறி இருக்கும். அவர்கள் வெறுமனே ரசிப்பதிலேயே திருப்தியடைவதில்லை; புதிய வடிவங்களில் அதை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.
அழகை உருவாக்கும் அந்த முயற்சியே கலை. ஒரு கலைப் படைப்பின் தோற்றம் மனித இயல்பின் மர்மத்தை வெளிச்சமிடுகிறது.
ஒரு கலைப் படைப்பு என்பது உலகின் சுருக்கம்; அதன் சாரம். இயற்கையின் எண்ணற்ற வடிவங்கள் அனைத்தும் வேறுபட்டதாக இருந்தாலும், அவற்றின் வெளிப்பாடு ஒன்றே.
இயற்கை என்பது எண்ணற்ற வடிவங்களின் கடல். ஆனால் அவற்றின் அடிப்படை இயல்பு ஒன்றே.
ஒரு இலை,ஒரு சூரியக்கதிர், ஒரு நிலக்காட்சி, ஒரு பெருங்கடல்—இவை அனைத்தும் மனதில் ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.அவற்றில் பொதுவாக இருப்பது என்ன? முழுமையும் இசைவும்.அதுவே அழகு. அழகின் அளவுகோல் தனிப்பட்ட பொருளில் இல்லை.
அது இயற்கையின் முழுமையில் உள்ளது.
தனித்து நிற்கும் எந்தப் பொருளும் தனியே அழகானதல்ல. முழுமையோடு தொடர்புடைய அளவிற்கே அது அழகாகிறது.ஒரு பொருள், பிரபஞ்சத்தின் அந்தப் பொதுவான நேர்த்தியையும் இசைவையும் நமக்கு நினைவூட்டும் அளவிற்கே அழகாக இருக்கிறது.
கவிஞன், ஓவியன், சிற்பி, இசைக்கலைஞன், கட்டடக் கலைஞன்—ஒவ்வொருவரும் உலகின் ஒளியை ஒரு புள்ளியில் குவிக்க முயல்கிறார்கள். அவர்களைப் படைக்கத் தூண்டுவது அழகின் மீதான காதல்.
கலை என்பது மனிதனின் உள்ளம் வழியாக வடிகட்டப்பட்ட இயற்கை.
மனிதனின் படைப்புகளின் அழகால் இயற்கை மீண்டும் செயல்படுகிறது.
ஆன்மாவின் அழகுத் தாகத்தை நிறைவேற்றுவதற்காகவே உலகம் இருக்கிறது. இதனையே நான் அதன் இறுதி நோக்கம் என்று அழைக்கிறேன்.
ஆன்மா ஏன் அழகை நாடுகிறது என்று கேட்க முடியாது; அதற்குப் பதிலும் அளிக்க முடியாது.
அழகு பிரபஞ்சத்திற்கான இன்னொரு பெயர்.
கடவுள் முழுமையான அழகு.
உண்மை, நன்மை, அழகு— இவை அனைத்தும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு முகங்கள்.
ஆனால் இயற்கையில் காணப்படும் அழகு இறுதியானது அல்ல.
அது இன்னும் ஆழமான, நித்தியமான, உள்ளார்ந்த அழகின் தூதுவன் மட்டுமே.
அது தனித்து நிற்கும் முழுமையான நன்மை அல்ல.
அழகு இயற்கையின் இறுதி நோக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே; அதன் உச்ச வெளிப்பாடாக அல்ல.

Comments
Post a Comment