Skip to main content

Posts

சைக்கிள் பதிவுகள் - 7 - வெள்ளிவீழ்த் தாரைகள்

வெள்ளிவீழ்த் தாரைகள் கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல் மாலை ஐந்தரை ஆறு மணிக்கு மழை பெய்கிறது. ஏரியைச்  சுற்றி  நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது எல்லாம் சரியாய் இருப்பது போல் இருக்கிறது. பாதி சுற்றில் இருக்கும் பாலம் அருகில் நின்று பார்த்தால், மழைக்கடவுளுக்கு வயிறு கலங்குவது போல் வடமேற்கு  மூலையில் கரு மேகங்கள் திரள ஆரம்பிக்கும் - வீறு அணிந்தவன் மேனி நிற மேகங்கள். தென் கிழக்கு மூலையில் இன்னும் வெள்ளை மேகங்கள் இருக்கும் - நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்.  இன்னும் கால்வாசி முன்னகரும் முன், ஒரு சில கனமான துளிகள் உடம்பில் தெறித்து விழும். கண்டிப்பாக புது வழுக்கையில் ஒரு சில துளிகள் படும். பட்டதும் காதில் ஒரு தகர ஒலி அதிர்வுகள்  ஏற்பட்டு, மூக்கினுள் எதோ இறங்குவது போல் இருக்கும். நடு வழியில் இருக்கும் முதியவர்கள் 'அரே , பாப்ரே...' என்று  முன்னால் போவதா , பின் வாங்குவதா என்று பேசிக்கொள்வார்கள். கொஞ்சம் மழை கியரை மாற்றியபின் அங்கிருக்கும் ஒரு பத்து இருபது பேர் ஓட ஆரம்பிப்பார்கள். ஒரு நாய்க்கூட்டம் நிதானமாய் ஓட ஆரம்பிக்கும். கழுத்தில் கட்டப்பட்ட நாய்கள் சிலரை பிடித...

சைக்கிள் பதிவுகள் -6 - இருகால் புரவி

அன்று மாலையில் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன் , அன்றே கிளம்பி ஊர்ப்பக்கம் செல்வதாகத் திட்டம். நம் சைக்கிளைப் பற்றி நமக்கு எப்பவுமே உயர்ந்த எண்ணம் தான். அவ்வப்போது பிரேக்கை முறுக்கி விட்டுக் கொண்டால் போதும். காற்று கூட இரண்டு மாதம் ஒரு முறை அடித்தால் போதும். ஆனால் இந்த மெக்கானிக்குகளிடம் இருந்து வண்டியைப் பாதுகாக்க வேண்டும். சென்ற முறை, சர்வீஸ் செய்யலாம் என்று போனேன். பொதுவாக கழுவிக்கொடுப்பார்கள். முதல் இரண்டு நாள் லகுவாக செல்வது போல் தோன்றும், அப்புறம் நினைப்பு சரியாகி விடும்.  ஆனால் அம்முறை  அவர் மின்கலத்தை நீரில் தோய்த்து , காயும் முன் சார்ஜ் செய்திருக்கிறார். உள்ளிருந்த அமிலக் கரைசல்  வெல்லமாய் வெளியே வந்து  ஒட்டி இருந்தது.  பழியை நம்மேல் மாற்றி, மின்கலத்தை மாற்றிகொள்ளுமாறும்,  அடுத்த முறை சர்வீஸ் ஓசியில் தருவதாகச் சொன்னார்.  வேறுவழி இருக்கவில்லை, தமிழ்நாட்டுக்காரர், ஒரு சண்டை, இறுதியில் இருவரும் பாதி வழி இறங்கி வந்து முடிந்தது. மெக்கானிக்கை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாகச் சொல்லி, என் குற்ற உணர்வை இன்னும் அதிகப்படுத்தினார்.  பக்க...

சிறியன செய்தல்

சிறியன செய்தல்  எப்போதும் சுற்றி இருப்பவர்கள் செய்யும் வேலையை கவனிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. காரணம், உடல் உழைப்பு மனதளவில் எளிதாய் தோன்ற ஆரம்பித்து  பல வருடங்கள் ஆகி விட்டன. நான் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் தொழில்நுட்ப வேலைகள். வேலை பார்க்கும் நால்வரில் அல்லது ஐவரில் ஒருவர் வேலையை மேற்பார்வை செய்பவர். கீழே இருப்பவர்கள் வேலையை  விளக்குவது, அவர்கள் செய்வதை பிறருக்கு விளக்குவது, தம் வேலை ஊடுபாவும் இடங்களை சரியாகத்  தெரிந்து, அறுபடாமல் அவற்றை இணைப்பது, முடிவில்லாத திட்டமிடல்கள், ஆயத்தங்கள் . ஆக வேலையைப் பற்றி பேசியே பெரும்பாலும் நேரம் கழிகிறது. ஒரு தளத்தில் எல்லாமே ஒன்று போல் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எழுதும் முன் , ஒரு வேலையைப் பற்றி  , இரு  குறுஞ்செய்திகள் ,  இரண்டு போன் கால், ஒரு  மெயில் செய்ய வேண்டி இருந்தது.   ஆனால் இதில் இருக்கும் காலக்கெடுவும்,  சாதாரணமான தன்மையும் தான் நமக்குள் சலிப்பாகவும் , மனப் போராட்டமாகவும் மாறி விடுகிறது. சுந்தர ராமசாமியின் இந்த கவிதை அடிக்கடி மனதில் வந்து போகும். கொட்டி மட்டும் தான் தீர்க்க முடியும், அடுத்தந...

ஒட்டி உறவார் உறவு

ஒட்டி உறவார் உறவு  வேலை பார்க்க ஆரம்பித்து  சில மாதங்கள்  ஆகி இருந்த போது சில வாரங்கள்  டெல்லியிலிருந்து வேலை பார்க்க வேண்டி இருந்தது. கூட இன்னொருவர். என்னை விட வயதில் மூத்தவர், திருமணமாகியிருக்க வேண்டும் . நேரத்திற்கு வேலைக்கு  வந்து விடுவார் , சரியாய் ஆறு மணிக்கு சென்று விடுவார். வடக்கு, தெற்கு பிரிவு போல அன்று மைக்ரோசாப்ட் , சன் பிரிவுகள் இருந்தன. மைக்ரோசாப்ட் பிரிவைச் சேர்ந்தவர். எதற்கும் கோபமே வராது , சிரிக்கும் போது சரியாய் வெட்டிய மீசைக்குப் பின்னால் இருந்து அழகிய பற்கள் தெரியும், கால்ச்சட்டையை தூக்கி விட்டுக் கொண்டு 'டெல் மீ மேன் ' என்பார். முதல் முறை விமானம் , டெல்லி  எல்லாமே. இதற்கு மேல் போய் செய்ய வேலை இருக்கிறது. போன் வழியாக நம்மை உள்ளூர மிரட்டிக் கொண்டிருந்த அந்த அம்மா நேரில் என்ன செய்வாரோ தெரியவில்லை. பேசிக் கொண்டு இருக்கும் போதே , ஒரு எல்லையில் பெரிய மூச்சு விட்டு, 'த்சு' என்ற ஒலியுடன், 'வி வில் டீல் வித் இட் பேஸ் டு பேஸ்' என்று கோப்பில் தள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.    காலையில் வெயிட்டரிடம் இட்லி கேட்டேன் , சப்பாத்தி கிடைத்தது. தெர...

கம்பராமாயணம் - 3 - மாபெரும் கால்களின் கீழே

  டி.கே .சி எழுதிய கம்பர் தரும் ராமாயணம் மேல் நோக்கி கிளை விரித்து சென்ற வண்ணம் இருக்கிறது. கம்பராமாயணத்தில் வரும் பாடல்களை இடைச்செருகல் என்று பல பாடல்களை நிராகரிக்கிறார். இவர் மேலும் தொகுத்து எழுதியது இப்புத்தகம். எனவே சொல்ல வேண்டியதில்லை, பொறுக்கி எடுத்து இருக்கிறார் , நயம் சொல்லி விரித்து எழுதி இருக்கிறார்..  கம்ப நாடகமும், கம்ப சித்திரமுமே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது என நினைக்கிறேன்( டி.கே .சி ). நாடகத்தை விட கம்பர் காட்டும் சித்திரமே எனக்கு உவப்பாய் இருக்கிறது.   சித்திர கூட படலத்தில் லட்சுமணன் காட்டில் குடிசை அமைக்கும் காட்சி வருகிறது. வளைவில்லாத, நேரான பக்கவாட்டு மூங்கில்களை நிறுத்தி, மேலாக குறுக்குக்கழிகளை தாளாமல் சேர்த்துக் கட்டி முடிந்தான். மேலே கூரையில் தேக்கின் இலைகளை பரப்பி, அதன் மேல் பூத்த நாணல் புற்களை வெய்து, கீழே நிறுத்திய கழிகளுக்கு இடையில் மண்ணை அடித்து , சுவர் எழுப்பி அதில் நீர் பூசி மெழுகினான்.     நெடுங் கழை குறுந்தறி     நிறுவி, மேல் நிரைத்து, ஒடுங்கல் இல் நெடுமுகடு     ஒழுக்கி, ஊழ் உற இடுங்கல் இல் கை விசித்து ...

கம்பராமாயணம் - 2 - புது வெள்ளம்

ஸ்ரீ குழந்தையாக, ஒரு இரண்டு மூன்று வயது இருக்கும் போது அவர் அழுவதைப் பார்ப்பது அவர் எனக்கு எப்போதுமே  அலுக்காது. வசதியாக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் அகட்டி வைத்து, கைகள் இரண்டையும் ஒன்றாக கோர்த்தபடி, கழுத்தை சிறிது வான் நோக்கி உயர்த்தி , உயர்ந்த ஒரு பிரார்த்தனை போல்  அழுவான். எதோ ஒரு நிமிடத்தில் முழு மூச்சை உள் வாங்கி, பலத்தையெல்லாம் திரட்டி, கைகளை அழுத்தி, கண்ணில் உள்ளிருக்கும் தண்ணீரை எல்லாம் வெளியில் பிதுக்கி கொண்டு வருவார். சத்தமும் பெரிதாக வரும்படி செய்வார். இந்த இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நின்று பார்ப்பார். முடிவில் அந்த உயர் அலைவரிசையில் இருந்து படியில்  இறங்குவது போல சத்தமே இல்லாமல் கீழே இறங்குவார் , மலையில் நீயூட்ரலில் இறங்கும் ஒரு ஜீப் போல. பின்னர் ஒரு இடத்தில் டிரைவர் கியர் போடும் போது விம்மும் வண்டி போல் விம்மி திரும்பவும் சம தளத்தில் ஆரம்பிப்பார். மூக்கில் இருந்து வரும் நீரை பிடிக்க நாக்கை ரெடியாக வைத்தே இருப்பார். ஒன்னும் முடியாத நேரத்தில் எழுந்து நடந்தபடியே கொஞ்சம் அழுது பார்ப்பார். முடிவில் பக்கத்து வீட்டு நாயைப் பார்த்து , ஸ்தம்பித்து , அழுகையை ...

கம்பராமாயணம் - 1 - காடு

கம்பராமாயணம் - 1 - காடு  சமீபத்தில் படித்த ஜெயமோகனின் காடு நாவல் தான் என்னை கம்பரைப் பற்றி எண்ணச் செய்தது. கதை முழுதும் கிரி என்பவனைச் சுற்றியே நடக்கிறது. முழுக்கதையும் காட்டிலேயே நடக்கிறது. வீட்டிலிருந்து பிழைப்பு தேடி மாமாவுடன் கால்வாய் (கல்வெர்ட்),  ரோடு போடும் கான்ட்ராக்ட் வேலைக்கு மேற்பார்வையாளராகச்  செல்கிறான். இதைப் படித்தபின் அருகில் இருக்கும் பெண்களில் எப்போது நீலி தோன்றுகிறாள் என்று தெரிகிறது. இவரையோ இன்னொரு நீலி காட்டிற்குள் கட்டிப்போட்டு விடுகிறாள். ஒரு பெண் அன்பால் நீலியாய், பித்தனாய் ஆக்கினாள். இதன் மறுமுனை மனைவி இயலாமையின், வெறுப்பின் உச்சத்தில் நீலியாகிறாள். மாமா இறந்து போய் பின் தொழில் சரிந்து , சாப்பிட வழியில்லாமல் , சரிவிலே வீட்டிலே இருக்க முடியாமல், இவர் தினமும் நாகராஜா கோவிலில் போய் உட்கார்ந்து,  சும்மா இருந்து பொழுது கழிக்கிறார். ஒரு நாள் காலையில் கோவிலுக்கு புறப்பட்டு  போகும்போது மனைவி பேசுவது குத்தி விடுகிறது. பீஸ் கட்டணும் என்கிறாள் . இவன் கேட்காமல் செல்கிறான். ஒரு தாசியா போகவும் வழி இல்லயே என்கிறாள். இத்தனை நாள் குத்தல் பேச்சை கேட்டவர் ...