மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால் நேற்று வண்டியில் வேலைக்குச் செல்லும்பபோது ஒரு காட்சி. நல்ல கூட்ட மிகுதியான அகரா சிக்னல் தாண்டி U டர்ன் எடுக்கும் இடத்தில் எப்பவும் விட அதிக நெரிசல். நெரிசலான ஒரு சிக்னலைக் கடந்து இன்னொரு நெரிசலை நோக்கிப் போகும் வழியில் நெரிசல் . இங்கு எதிர் திசையில் வருவார்கள், இரண்டு திசைகளிலும் U டர்ன் செய்வார்கள், ஒரு பெரிய BMTC பேருந்து U டர்ன் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தது வெகு நேரமாய். எல்லோரும் ஒரு மாதிரி முடிந்த வரை நகர்ந்து கொண்டிருந்தார்கள். நானும் அவ்வாறு அருகில் வந்தததும் தான் இந்த ஸ்பெஷல் நெருக்கடி விஷயம் புரிந்தது. ஒரு தாய்ப் பசு அப்படியே U டர்ன் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்தது விஷேஷமில்லை. அதன் மடியில் இளம் கன்று பால் குடித்துக் கொண்டிருந்தது. இரண்டு கால்கள் பின்னால் இழுத்து முட்டி முட்டி உறிஞ்சிக் குடித்தபடி இருந்தது. நடத்துனர் கீழே இறங்கி விரட்டிப் பார்த்தார். டிரைவர் மேலே இருந்து சிரித்தார். யாருக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அன்னை ஓரடி அசைய மறுத்தாள். கன்று யார் தள்ளுக்கும் விடவில்லை. எனது தாத்தா மாடுகள் பராமரிப்பவர...