Skip to main content

Posts

தொடக்கம் , அ.முத்துலிங்கம் சிறுகதை

பெங்களூர்- ஹைதராபாத் சாலையிலோ அல்லது பெங்களூர் -கிருஷ்ணகிரி சாலையிலோ இருக்கும் ஒரு பீடபூமியை  கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு நெடுஞ்சாலையின் மிக உயரமான மேடு தெரியும் வண்ணம் கேமரா நிற்கிறது. இப்போது மாதவன் ஒரு ஸ்ப்ளெண்டர் மோட்டார் வண்டியில் , கண்ணளவே உள்ள கறுப்புக் கண்ணாடியுடன் , நீல நிற டெனிம் சட்டை ,  காதுகளில் இயர் போனுடன் பிரேமுக்குள் நுழைகிறார். காதுகளுக்குள் ஒலிக்கும் இசை அவர் முகபாவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. உதடு இரண்டும் குவிகிறது, பின் பல் காட்டி சிரிக்கிறது. நமக்கு கேட்குமாறு என்றென்றும் புன்னகை என்று பாடல் ஒலிக்கிறது . அடிக்கடி அவர் முகம் பிரேமில் இருந்து மறைந்து மீண்டும் உள்ளே வருகிறது. கேமரா நின்ற இடத்திலே நிற்கிறது. கானல் பிம்பம் தெரிவது போல் பிசுபிசுத்து மீண்டும் தெளிவாகிறது. நடுநடுவே டைட்டில் கார்டுகள் வந்து விழுகின்றன. இது மணி ரத்தினத்தின் ஒரு படத்துவக்கம். இவ்வாறு இன்றும் நினைவுகூறும் வகையில் இருக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் கணக்கற்றவர்களின் கூட்டு உழைப்பால், மிகுந்த பொருள் செலவில் உருவாகும் ஒரு திரைப்படம், முதல் சில மணித்துளிகளில் , ஒரு ஸ்குரோல் செய்த...

இவர் வெளியில் இருக்கிறார்

இந்த வாரம் மதுரை வாசம். வழக்கமான நடைக்குமுன் செய்யும் வாய் வழி (டீக் கோப்பை ) 'வார்ம் அப்பின்' போது , எதிரே தலை உயர்த்திப் பார்த்த போது இவர் கண்ணில் பட்டார். கண் தானாக நிலை கொண்டது. ஒரு கணம் P.H. பாண்டியன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அதுவும் ஒரு கடை முன்னே, இல்லை ஒரு மூடிய கடை முன்னே, இல்லை பல நாள் மூடிக்கிடக்கும் ஒரு கடை முன்னே.  சென்ற வாரம் திருநெல்வேலி பக்கம் செல்லும்போது P.H. பாண்டியன் என்ற பெயர் ஒரு போஸ்டரில் கண்ணில் பட்டது. உள்ளே ஊறிக் கொண்டிருந்திருக்கிறது. இது இந்தப் பகுதியின் பிரதான கடைப்பகுதி. ஒட்டுமொத்தமாக ஒரு layout என கற்பனை செய்யலாம். ஆனால் நகரப் பேருந்துகள் உள்ளே வரும். எட்டு நிறுத்தங்கள் மொத்தம். பிரதான சாலையில் இரண்டு, உள்ளே ஆறு. 4,6,7 -ல் வண்டி நிற்காது. மீதத்தை மூளை வேலையாக கொடுக்கிறேன். ஒரு பகுதியில் ஒன் வே இருக்கிறது. மக்கள் அதிகமாகும் போது வண்டிகள் ஒதுங்கியே சென்றாக வேண்டும். மக்கள் அதிகமானால், வேறென்ன,  கடைகள்.  ஒரு மூன்று டீவி பழுதுபார்க்கும் கடைகள் உள்ளன. பகலில் ஒருவர் பின் பகுதியை கழற்றி வைத்து இன்னும் ஏதோ செய்து கொண்டுதான...

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 2

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 தாமஸ் கோவன் Four Fold Path To Healing என்னும் நூலில் இதயம் ஏன் ஒரு மோட்டார் பம்ப் இருக்க முடியாது என்பதற்கான வலுவான கேள்விகளை எழுப்புகிறார். இந்த ஊகத்தை முதலில் முன்வைத்தவராக ருடோல்ப் ஸ்டெய்னர் என்பவரைக் குறிப்பிடுகிறார். நம் உடலின் ரத்த ஓட்டம் என்பது ஒரு வட்டப் பாதையில்  ( closed loop ) நடப்பது. இதயத்தின் நீளம்  12 செமீ , அகலம் 6 செமீ, சுமார் 300 கிராம் எடை உள்ளது. ஒட்டுமொத்த உடலை வைத்துப் பார்க்கையில், குறுக்குவெட்டில் இந்த இடம் மிகச்சிறியது. இந்தச் சிறிய இடத்திற்குள்ளிருந்துதான் ரத்தம் மேலேயும் , கீழேயும் கடைசி வரை செல்வதற்குமான அழுத்தத்தைப் பெற வேண்டும். இதயத்தில் இருந்து வெளிவரும் ரத்தம், சிரைகளில் கீழ்நோக்கி பயணிக்கிறது. இங்கு இவை பல கிளைகளாக பிரிந்த வண்ணம் சென்று இறுதியில் ரத்த நாளங்களாய் முடிந்து பிராணவாயுவையும் , உணவின் சத்துக்களையும் திசுக்களுக்கு கடத்துகின்றன. ரத்த நாளங்களின் குறுக்கு வெட்டு பரப்பு இதயத்தை விடப்  பெரிது. ஒரு மூன்று கால்பந்து மைதானமாக நாளங்களை விரிக்கலாம். சத்துக்களைக் கடத்தியபின் உடலின் மேல்ந...

சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ...

சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ... சென்ற வாரம் இருந்த மாலை நேர சந்திப்பால் சைக்கிளை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வீடு வர வேண்டியதாகிவிட்டது. திரும்ப வந்து இன்னும் கொஞ்சம் இழுவல் இருப்பதால் பொட்டல் கடந்து, புழுதி கடந்து, தரிசு கடந்து வந்து சேர நேரமாகிவிடும். கார் ஆட்டோ என்றால் பரவாயில்லை. சரி ,  இதுவும்  சில நாள்களில் நடப்பதுண்டு.   ஆனால் திரும்ப வாகனம் இல்லாமலே அடுத்த  நாள் சென்று, சைக்கிளை எடுத்து மாமூலாக்க வேண்டும். காலையில் பொதுவாக ஆட்டோ , கார் கிடைக்காது. இன்றும் அப்படித்தான்.  வீட்டில் இருந்து  கொஞ்சம் நடந்து சென்று MG ரோடு செல்லும் புதிதான வோல்வோ பஸ் பிடித்து , வழியெல்லாம் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படித்து, மாயோ ஹால் வந்ததும் இறங்கி , அங்கிருந்து கப்பன் பார்க் ஓரமாய் ஒரு அழகிய காலை நடை நடந்தால் நன்றாய் இருக்குமென தோன்றியது. காதல் தேசம் அப்பாஸ், வினீத் போல , கல்லூரி சாலை  என்று ஒரு நோட்டு மட்டும் இருந்தால் , வானில் சுழற்றி கீழே வரும் போது பிடித்து நடக்கலாம். (இன்றைய நிலவரம் யார் எப்படி எனத் தெரியவில்லை.  இன்றைய கல்லூரி ட்ரெண்ட் கப்பன் ப...

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 மாசனோபு புகோகா வேளாண்மையில் ஒரு சார்வாக சிந்தனையாளர். இவர் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி என்பது மிக பிரபலமான புத்தகம். 1930 களில் தாவரவியல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளராக (Microbiology ) வாழ்க்கையைத்  தொடங்கியவர்.  தாவரங்களில் தாக்கும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது இவர் வேலை. நாள் முழுதும் ஒரு கண்ணால் மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டே இருப்பது. நிமோனியா காய்ச்சல் வந்து மரண விளிம்பில் இருந்து மீள்கிறார். இந்நிகழ்வு  இவருக்கு மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. இடைவிடாது ஊர்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிந்த அந்த நாட்களில் , ஒரு இரவில் மலைச்சரிவில் மயங்கி விழுகிறார். இந்த இரவை தன் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்கிறார். கண் விழித்தபோது காலைக் கதிரவனின் பொன்னொளியில், வானில் ஒரு பறவை சிறகடித்து கடக்க, கீழே குப்பையில் ஒரு நெல் முளை விட்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இது ஒரு ஜென் தருணம், பெரிய திறப்பைத் தருகிறது . இயற்க்கைக்கு முன் மனிதன் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. 'ஒன்றும் செய்யாத விவசாயம்...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2

  பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2 பெங்களூரில் நிறைய கேட்கநேரும் ஒரு பெயர் கெம்பே கவுடா என்பது. மைய பேருந்து நிலையத்தின் , விமான நிலையத்தின், ரயில் நிலையத்தின் பெயர் எல்லாமே ஒன்றே தான் . வீட்டை விட்டு வெளியேறி இவர் சிலையை பார்க்காமல் வீட்டிற்குள் உள்ளே வர முடியாது. சட்டசபையின் முன்னே வாள்பிடித்து , நடக்கும் குதிரையில் அவர் அமர்ந்து செல்லும் ஒரு வெண்கலச்சிலை இருக்கிறது. புரவி நிலம் பார்த்து வல முன்கால் ஊன்றி , பின்னங்கால் அழுத்தி உயர்ந்தும், இடமுன்கால் காற்றில் எழுந்து, இடப்புற பின் கால் நன்றாய் ஊன்றி , ஒரு அபாரமான ஸ்னாப் ஷாட், சிலையில் வடித்தது. அவர் முகமும் கண்களும் எங்கோ வெளியைப் பார்த்து இருக்கும். கையில் தாளப் பிடித்த வாள் . சாந்த மூர்த்தம் என்று தான் சொல்ல வேண்டும்.   பெங்களூருக்கு இரண்டு தலபுராணங்கள்.   முதலாவது, ஹொய்சாள வம்சத்தை துவக்கிய வீரவல்லாளர் வேட்டையின் போது களைப்பாகி இன்றைய எலகங்கா வேளாண்மைக் கல்லூரி உள்ள இடத்தில் உணவு தேடி தனியாக ஒரு குடிசையில் நுழைந்தார். ஒரு வயதான பாட்டி வீட்டில் ஏதும் இல்லாமல் அவித்த வேர்க்கடலையை அரசனுக்கு அளித்தார். பசிக் ...

விண்ணில் ஒரு பறவை

விண்ணில் ஒரு பறவை  நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது.  அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார். சாரு அ...